விஞ்ஞானப் புனைகதை உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க் இலங்கையில் காலமானார். அவருக்கு வயது 90.
மூச்சுத் திணறல் பிரச்சனையால் சில காலமாக அவதியுற்று வந்த இவர், இறுதியில் சிகிச்சை பலனினின்றி இன்று காலமானார்.
1968 ஆம் ஆண்டு 2001: ஏ ஸ்பேஸ் ஒடிஸ்ஸி என்ற கதையை ஒரே சமயத்தில் புதின வடிவத்திலும் திரைக்கதை வடிவத்திலும் எழுதினார். செயற்கை அறிவு குறித்த விளைவுகளை விவரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குனர் மேதை ஸ்டான்லி குப்ரிக் இயக்கினார்.
அதன் பிறகு ஓராண்டு இடைவெளியில் இவரது கதைகள் அமெரிக்க இல்லங்களை அலங்கரிக்கத் துவங்கியது.
செய்தித் தொடர்பு செயற்கைக்கோள் பற்றி, கருத்தாக்க அளவில், அது நடைமுறைக்கு வரும் ஒரு 10 ஆண்டுகள் முன்னரே தனது புனை கதை ஒன்றில் சித்தரித்திருந்தார் கிளார்க்.
செயற்க்கோள்களை நிலையாக ஒரு இடத்தில் நிற்கவைக்கும் ஜயோசின்க்ரோனஸ் ஆர்பிட் என்றழைக்கப்படும் புவி மைய சுழற்ச்சிப் பாதை கிளார்க் ஆர்பிட்ஸ் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. புனை கதைகள் அல்லாத விண்வெளி பயணம் குறித்து இவர் எழுதியவை விஞ்ஞான உலகில் இவர் மேலான மரியாதையை அதிகரித்தது. இதனால் அமெரிக்க விண்வெளி மையத்தில் இவருக்கு கௌரவ பதவியும் அளிக்கப்பட்டது.
இவரது எழுத்துக்கள்தான் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது என்றால் அது மிகையாகாது.
தன்னை என்னவாக மக்கள் நினைவில் வைத்திருக்கவேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சிறிது காலம் முன் அவர் அளித்த பதில் : "எழுத்தாளர், நீருக்கடியில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர், விண்வெளி அதிசயங்களை பரப்பியவர் என்ற எனது பரந்துபட்ட பல முகங்களில் எழுத்தாளர் என்றே நான் அறியப்பட விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
1950 ஆம் ஆண்டு முதல் எழுத்துப் பணிகளில் அதிக கவனம் செலுத்தினார். ஆண்டுக்கு 3 புத்தகங்கள் வரை வெளிவரத் துவங்கின. "3001: தி ஃபைனல் ஒடிஸ்ஸி" என்ற இவரது அதிக பிரதிகள் விற்ற புத்தகத்தை எழுதியபோது இவருக்கு வயது 79.
இவரது கடைசி புதினமான "தி லாஸ்ட் தியரம்" ஃபிரடெரிக் போல் என்பவருடன் சேர்ந்து எழுதப்பட்டது. இந்த புதினம் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது சிறந்த புத்தகங்களில் சில: சைல்ட்ஹுட்'ஸ் என்ட்- 1953; சிடி அன்ட் தி ஸ்டார்ஸ்- 1957; தி நைன் பில்லியன் நேம்ஸ் ஆஃப் காட்- 1967; ரென்டெஸ்வஸ் வித் ராமா- 1973; இம்பீரியல் எர்த்- 1975; சாங்ஸ் ஆஃப் டிஸ்டன்ட் எர்த்- 1986;
பன்முக ஆளுமை கொண்ட ஆர்தர் சி. கிளார்க் ஒரு முறை அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்: " நான் வேறொரு காலத்தில் உயிருடன் இருக்கலாம்" என்று.
ஆம்! இன்று மறைந்த இந்த மேதை வேறொரு காலத்திலும் நிச்சயம் இருப்பார் என்றே நம்பலாம்.