உலக மக்களால் போற்றப்படும் எழுத்தாளர்களுள் மிகவும் பிரபலமானவர் மக்ஸிம் கார்க்கி, அவர் தனது இலக்கியப் படைப்பின் மூலம் மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஊக்கு சக்கியாகத் திகழ்பவர்.
மக்ஸிம் கார்க்கி 1868 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி ரஷ்யாவிலுள்ள நீழ்னி நோவ்கிராட் என்றும் இடத்தில் பிறந்தார். சிறுவயது முதலே உழைப்பின் மீது பேரார்வம் கொண்டு விளங்கினார்.
எளிய மக்களின் மீது அளவுகடந்த அன்பை கொண்டிருந்தார். அதேவேளை மக்களுக்குத் துன்பத்தையும், ஏமாற்றத்தையும் கொடுப்பவர்கள் மீது, கடுமையான கோபத்தையும் எதிப்பையும் கொண்டவராகத் தன் வாழ்நாள் முழுவதும் இருந்து வந்தவர் கார்க்கி. ரஷ்யாவில் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களால் ஒன்று கூடி நடத்தப்பட்ட புரட்சிக்கு பெரும் பங்காற்றினார்.
கார்க்கி எழுதிய 'தாய்' நாவல் இன்றளவும், ரஷ்யா மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் கோடான கோடி மக்களுக்குப் போராட்டப் பண்பை ஊட்டி, உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து ஒற்றுமைக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. அந்நாவல் எழுதப்பட்டு 100 ஆண்டுகளுக்குமேல் ஆனபோதிலும் இன்றுவரை புதிய பதிப்புகளுடன் விரும்பிப் படிக்கப்பட்டு வருகிறது.
’தாய்’, ’மூவர்’, ’அர்த்தமோனவ்’, ’வாழ்வின் அலைகள்’ உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட நாவல்களையும், ’வாசகன்’, ’முதல்காதல்’, ’கவிஞன்’, ’மனிதன் பிறந்தான்’ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 'கன்னிப் பெண்ணும் மரணமும்' என்பது உள்ளிட்ட பல கவிதைகளை எழுதியுள்ளார்.
’நான் எவ்வாறு எழுதக் கற்றுகொண்டேன்’, ’எழுத்தின் வேலைபாடு குறித்து’, ’மனித ஆளுமையின் சிதைவுகள்’, ’சோசலிச எதார்த்தவாதம்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற கட்டுரைகளை எழுதினார். ’எனது குழந்தைபருவம்’, ’யான் பெற்ற பயிற்சிகள்’, ’யான் பயின்ற பல்கலைக்கழகங்கள்’ உள்ளிட்ட சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார்.
உலக தொழிலாளர்களின் தலைவர் என்று போற்றப்படும் லெனின் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார். அவ்வாறே லெனினும், கார்க்கி மீது தன் வாழ்நாள் முழுவதும் தோழமையோடு இருந்து வந்தார். அதேபோன்று ....
லெனினுக்குப் பின்னர் சோவியத் யூனியனின் அதிபராக இருந்து வழிநடத்திய ஸ்டாலின் உடனும் கார்க்கி, தன் வாழ்நாள் முழுவதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.
புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களான லியோ டால்ஸ்டாய், ஆண்டன் செகாவ், விளாதிமிர் கொரலென்கோ, தஸ்தாவெஸ்கி முதலிய பலரோடு நெருங்கிப் பழகினார். சோசலிச எதார்த்தவாதம் என்னும் இலக்கியக் கோட்பாட்டை உறுவாக்கி வளர்த்தார். சோவியத் எழுத்தாளர் மாநாட்டுக்குத் தலைவராகத் திகழ்ந்தார். தன் வாழ்நாள் முழுவதும் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார்.
உலகத் தொழிலாளர்களின் ஒப்புயர்வற்ற இலக்கியப் படைப்பாளர் மக்ஸிம் கார்க்கி 1935 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி உயிர் நீத்தார்.
வாழ்நாள் முழுவதும் ஒருங்கிணைந்த உலகப் பார்வையை வலியுறுதி வந்தவரும் தொழிலாளர்களுக்கு ஊக்கு சக்தியாக விளங்கியவருமான மக்ஸிம் கார்க்கி பிறந்த தினம் (மார்ச் 16) இன்று.