முதல் நாவலுக்கே சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் சு.வெங்கடேசன்

புதன், 21 டிசம்பர் 2011 (18:18 IST)
FILE
தமிழ் எழுத்தாளர் சு.வெங்கடேசன் என்பவர் எழுதிய 'காவல் கோட்டம்' என்ற நாவலுக்கு 2011ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. சு.வெங்கடேசனுக்கு வயது 39.

சாகித்ய அகாடமி பரிசளிப்பு வரலாற்றில் ஒரு எழுத்தாளர் எழுதிய முதல் நாவலுக்கு பரிசு கிடைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்.) கட்சியின் உறுப்பினரான இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச் செயலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ள "அரவாண்" படத்தின் கதை சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்" நாவலின் ஒரு கிளைக்கதையே.

1920ஆம் ஆண்டு வரையிலான மதுரையின் வரலாற்றை அவர் இந்த நாவலில் படைத்துள்ளார்.

மாலிக் கஃபூரின் தெற்குப் படையெடுப்புடன் இந்த நாவல் துவங்குகிறது. அதன் பிறகு விஜயநகரப் பேரரசின் கைப்பற்றுதல் கூறப்படுகிறது. கடைசியாக ஆங்கிலேயர் கைவசம் வந்தது விவரிக்கப்படுகிறது.

மதுரை நகரை தங்கள் ஆட்சியின் விரிவாக்கத்திற்காக பயன்படுத்திய ஆங்கிலேயர்கள் மதுரைக் கோட்டையை எவ்வாறு சிதைத்தனர் என்ற விவரிப்பும், அந்தக் கோட்டையில் அதற்கு முன்பு இருந்த தனிச்சிறப்பான பாதுகாப்பு அரண்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயப் படைகள் மதுரைக் கோட்டையில் இருந்த காவல் படையினரை வென்று அவர்களை கூடலூர்-கம்பம் பள்ளத்தாக்கில் சிறை வைத்ததும் இந்த நாவலில் சிறப்பாக விவரிக்கபட்டுள்ளது.

அதாவது இந்த காவல்படையினரை குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்திய ஆங்கிலேயரின் ஆட்சிக் கொடுமை இந்த நாவலில் பிரதான பங்கு வகிப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது பிரிட்டீஷார் வைத்த இந்த 'குற்றப்பரம்பரையினர்' என்ற அடையாளம் நிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்கள் விமர்சகர்களின் சிறப்புப் பார்வைக்கு உரியது.

வெப்துனியாவைப் படிக்கவும்