பெண்களும் பெண்ணுரிமையும்

வெள்ளி, 28 பிப்ரவரி 2014 (18:16 IST)
சென்னையில் சில தினங்களுக்கு முன்பு உமா மகேஸ்வரி என்ற கணிப்பொறியியல் வல்லுநரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
FILE

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதில், அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகத் தெரிய வந்தது. இது தொடர்பாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூன்று கட்டிடத் தொழிலாளிகள் கொலை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நிர்பயா வழக்கைப் போன்று இந்த வழக்கும் பல நாட்களுக்கு பேசப்படலாம். இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தில், சென்னையில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்று ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் விவாதிக்கலாம். உமா மகேஸ்வரியின் மரணத்தால் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை எழுந்துள்ளது. அதனால் இன்னும் சில மாதங்களுக்கு பெண்களுக்கான பாதுகாப்பு முக்கிய பிரச்சனையாக விவாதிக்கப்படும். இதெல்லாம் தீர்வைத் தந்து விடுமா?

‘மற்ற நாடுகளில் நடப்பதை விட இது குறைவானதுதான். ஏன் கூக்குரல் எழுப்புகிறீர்கள்?’ என்று சில அறிவுஜீவிகள் கேட்கும் போது, அவர்கள் பாணியிலேயே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. எந்த நாட்டில் இப்படி கேட்கிறார்கள்? பெண்களைத் தாயாக, சகோதரியாக, இறை வடிவமாக, நதியாக, மொழியாக, நிலப்பரப்புகளாக பேசும் இந்த சமுதாயத்தில், ஒருவர் தவறு செய்தாலும் கூட பண்பாடு எங்கே போகிறது என்ற கேள்வி எழுவது தெரியவில்லையா?

இத்தகைய நேரங்களில் இரண்டு விதமாக கருத்துக்கள் எழுகின்றன. ஒன்று பெண்ணுரிமை பற்றியது. மற்றொன்று ‘அதனால்தான் சொல்கிறோம். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமென்று’ என்ற கூச்சல். கூச்சலிடுபவர்களுக்கு ஒரு கேள்வியை மட்டுமே பதிலாகத் தர முடியும். ‘உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அல்லது தோழிகளுக்கோ எழுந்தால் இப்படிதான் பேசுவீர்களா?’ என்று கேட்கத் தோன்றுகிறது.

உண்மையில் பெண் என்பது வேறு, பெண்ணியம் என்பது வேறு. பெண்ணாக இருந்து, வேலைக்கு சென்று கொண்டு, ஆனால் பெண் சுதந்திரம் என்றால் ஏளனம் செய்யும் ஏராளமான பெண்களை நம் நாட்டில் பார்க்க முடியும். அதே போல ஆண்களாக இருந்து கொண்டு பெண்ணியம் பேசுபவர்களையும் பார்க்க முடியும். அதே போல பெண்ணியம் பேசி பெண்களை நெருங்கும் ஆண்களையும் பார்க்க முடியும்.

பெண்களுக்கு சம உரிமை இன்னும் கொடுக்கப்படவில்லை என்பதுதான் நிஜம். ஒரு வீட்டில் ஆண்மகன்தான் உத்தியோகத்திற்கு லாயக்கானவன் என்ற பேச்சில் கூட பெண்ணியம் நசுக்கப்படுகிறது. ஆண்களும், பெண்களும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் கூட பெண்கள் ஆண்களை விட சிறிதளவாவது குறைவாக சம்பாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இல்லையென்றால், அதுவரை மனைவிக்கு ஆதரவாக இருந்த ஆண், உடனே வேலையை விடுமாறு வற்புறுத்துவான். அதே போல, ஆண் மட்டும் வேலைக்குப் போனால் பிரச்சனையில்லை. பெண்கள் மட்டும் வேலைக்குச் சென்றுவிட்டு, வீட்டு வேலைகளை ஆண்கள் பார்த்துக்கொண்டால் அவ்வளவுதான். அவனது நெருங்கிய பெண்களே அவனை கேவலமாகப் பேசுவார்கள்.

ஒரு நிறுவனத்தில் ஒரு பெண் உயர் பதவியில் இருந்தால் அவளைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள். சில நேரங்களில் ஆண்களை விட பெண்களே இந்தப் பேச்சுகளை கூர்மையாக்குகிறார்கள். அரசியலில் ஒரு பெண் இருந்தால் அவதூறுகளைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை.

ஒரு ஆண் பலரோடு மோசமான முறையில் பழகினால் அதை ‘ஆண்களின் குணம்’ என்று பொது வரையறைக்குள் உட்படுத்தி ஏற்றுக்கொள்ளும் பெண்கள் கூட, பெண்கள் யாராவது பழகத் தொடங்கினால் கூட அவர்களைக் கேவலமாகப் பேசுகிறார்கள். இதெல்லாம் பெண் சுதந்திரத்தைக் கேள்விக்கு உட்படுத்தவில்லையா? நடிகைகளையும், மாடலிங் பெண்களையும் பற்றி மோசமாகப் பேசுவதை குறை சொல்லும் பெண்கள், அத்தகையோர் தங்கள் வீடுகளில் ஒருவராக வந்தால் ஏற்கிறார்களா?

சுதந்திரம் என்பது கல்வியிலோ, பணிகளிலோ, பதவிகளிலோ இருப்பதில்லை. அவர்களுக்கு பிடித்த விஷயங்களைக் கடைபிடிப்பதில்தான் இருக்கிறது. பெண்களுக்கு அந்த உரிமைகள் இருக்கிறதா என்பதை பலமுறை சிந்தித்துப் பார்க்கும் நேரம் இது.

வெப்துனியாவைப் படிக்கவும்