பிரான்ஸ் காஃப்காவின் "அமெரிக்கா"

வெள்ளி, 25 நவம்பர் 2011 (13:04 IST)
FILE
[பிரான்ஸ் காஃப்கா பிராக் நகரில் 1883 ல் ஒரு ஸ்லோவானிக் மேல் வகுப்பைச் சேர்ந்த பணக்கார யூத-வியாபாரிக்கு மகனாகப் பிறந்தார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இலக்கியமும், மருத்துவமும் படித்தவர். சட்டத்துறை நோக்கி நகர்ந்தார். பிறகு இன்ஷுரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அலுவலக வேலையின் பளு தாங்காமல் அவற்றை உதறிவிட்டு பெர்லினின் புறநகர் பகுதிக்கு குடியேறி வாழ்வை எழுத்திற்காக அர்ப்பணித்தார். 1914 ல் நிச்சயிக்கப்பட்ட திருமண ஏற்பாட்டை முறியடித்தார். மறுபடியும் திருமண முயற்சி செய்தபோது டி.பி.நோய் இருப்பது கண்டறியப்பட்டு முறிந்தது. திருப்தியற்ற காதல் விவகாரங்கள், தந்தையுடனான உறவு, பெர்லினின் 1918 க்குப் பிந்தைய Hunger Years எல்லாம் அவர் உடல்நிலையை வெகுவாகப் பாதித்தது. 1924 ல் மறைந்தார். ஒரு ஸ்லேவோனிக் என்றபோதிலும் அவருடைய புத்தகங்கள் எல்லாம் ஜெர்மன் மொழியிலேயே வெளியிடப்பட்டது. "அமெரிக்கா"-1927 ல் முதன்முதலாக வெளிவந்தது.]

அமெரிக்கா : சுருக்கமான அறிமுகம

இந்த நாவல் அவரது "விசாரணை" (Trial) "கோட்டை"(Castle) போன்ற நாவல்களிலிருந்து தனியே நிற்கிறது. விசாரணையில் வருவது போல் ஒரு புதிரான நீதிபரிபாலனை பற்றியோ, "கோட்டை" போல் அடையமுடியாத இலக்குகளை சுற்றியோ பின்னப்பட்டதல்ல இவரது இந்த மூன்றாவது நாவலான "அமெரிக்கா". இந்த நாவல் காஃப்காவின் மகிழ்ச்சியான நாவல் என்று கூறலாம். முதலிரு நாவல்களிலும் கட்டமைக்கப்பட்ட கனவு நிலைப்புனவு. ஒரு பயங்கரக் கனவு எனக்கூறலாம். ஆனால் இந்த நாவலில் கார்ல் ரோஸ்மான் செல்லும் கிராம வீடு மற்றும், டெலாமார்ச்சீ புருனெல்டாவுடன் தங்கும் இடம் பற்றிய இந்த இரண்டு வர்ணணைகள் தவிர முழுதும் மகிழ்ச்சியான பகுதிகளே. அமெரிக்க சாய்வு மேசை, சிற்றுண்டிச் சாலை, அமெரிக்க போக்குவரத்துத் துறைக் கட்டுப்பாடுகள் பற்றிய பத்திகளில் வரும் தகவல்கள் ஒரு பயண நூலின் தகவல்களிலிருந்து மாறுபட்ட வேடிக்கைகள் நிறைந்தது.

இந்தக் கதையில் நாயகன் காரில் ரோஸ்மான்-16 வயதே நிரம்பியவன். அவனது வீட்டு வேலைக்காரியால் தீய நடவடிக்கைக்கு தூண்டப்பட்டு, அதனால் அவள் ஒரு குழந்தைக்கும் தாயாகிறாள். இதையறிந்த அவனது பெற்றோர்கள் ரோஸ்மானை ஒரு நீராவிக் கப்பலில் ஏற்றி அமெரிக்காவிற்கு அனுப்பி விடுகிறார்கள். அதிலிருந்து வாழ்க்கையின் திடீர் திருப்பங்களுக்கும், இரக்கமற்ற மனிதர்களின் பழக்க வழக்கங்களாலும் ஆட்பட்டுப் போகிறான். சிறைக்குச் செல்லும் அபாயம் கூட இவர்களால் அவனுக்கு ஏற்படுகிறது. ஆனால் கார்லின் அப்பாவித்தனம் அவனை நிறைய சமயங்களில் காப்பாற்றுகிறது. கார்ல் ரேஸ்மான் இந்த நாவலில் அப்பாவித்தனம் மற்றும் இயல்பான நன்மை இவற்றின் குறியீடாக சித்தரிக்கப்படுகிறான். காஃப்காவின் கதாபாத்திரம் வெறும் தனிநபர்களல்ல. அவை ஊழ் விதியுடன் முரண்பட்டு நிற்கும் மனிதன் பற்றிய பிம்பங்களே.

முதலிரண்டு நாவல்கள் கதாநாயகனின் அனுபவங்கள் பற்றியது என்றால், இது ஒரு அப்பாவிக் கதைநாயகன் பற்றியது (Story of Innocence) இந்த நாவலின் கடைசிப் பகுதி கூட மகிழ்ச்சியாகவே முடிவடைகிறது. ஆனால் "பாதை" இல்லை. நாம் எதைப் பாதை என்கிறோமோ அது ஒரு முடிவற்ற ஊசலாட்டங்களே" என்கிறார். இதன் மூலம் காஃப்கா தேடலை அனுமதித்து, அதன் பாதை குறித்த லட்சிய வாதங்களை கட்டுடைக்கிறார் என்றே கூற வேண்டும்.

அந்தப் பாதை மதமாக இருந்தாலும் சரி, மார்க்சியமாக இருந்தாலும் சரி. இந்நாவலில் வரும் ஒவ்வொரு பகுதியையும் ஒரு சிறுகதையாகக் கூட நாம் வாசிக்கலாம். தொடர்ச்சி ஒரு இழை தான். அது குறித்த கற்பனையே வாசகனுக்குப் போதுமானது. மனிதனின் நிலை குறித்த ஒரு நியாயமான வர்ணனையை காஃப்கா அளவிற்கு நவீன எழுத்தாளர்கள் எண்பிக்கவில்லை.

அவருடைய நாவல்கள் எல்லாமே அவருக்கும் அவர் தந்தைக்கும் இடையே உள்ள முரண்பட்ட உறவுகளை பிரஸ்தாபிப்பதாகவே உள்ளது. "என்னுடைய எழுத்துகள் உன்னைப் பற்றியதே, உன் மார்பின் மேல் கொட்ட முடியாததை என் எழுத்தின் மேல் கொட்டியிருக்கிறேன்" என்று தன் தந்தையிடம் கூறியிருக்கிறார். மேலும் அவரின் Metamorphosis மற்றும் Country Doctor போன்ற நெடுங்கதைகளும் யூதர்கள் அந்தக் காலக்கட்ட தனிமனித சமூக-அரசியல் வாழ்வில் அடைந்த எல்லையற்ற பீதிகளையும், அடக்குமுறை குறித்த மன-பீதிகளையும் சித்தரிப்பதாக ஹெரால்டு புளும் என்ற அமெரிக்க விமர்சகர் கூறுகிறார். இதைச் சொல்வதனால் அவரது கதைகளை சிறுமை செய்கிறோம் என்ற அர்த்தமில்லை.

காஃப்காவின் மேதமை அந்த அனுபவங்களை எவ்வாறு அவர் உள்வாங்கி அதை உலகளாவிய மனிதனின் வாழ்நிலையாக மாற்றம் பெறச் செய்தால் என்பதிலேயே உள்ளது.

இந்த நாவல் "தந்தை" பற்றியதல்ல என்றாலும், தந்தை முழுதும் மறைந்துவிடவில்லை எனலாம். இதில் மாயத் தந்தைகள் உண்டு. அவன் மாமா ஜேகப், போல்லன்டர் அன்பானவர்கள் ஆனால் நம்பகமற்றவர்கள், கேடுநோக்கமுடைய ஆனால் தன் வார்த்தைக்கு உண்மையாயிருக்கிற கிரீன், கடைசியாக இரக்கமற்ற போக்கிரியான டெலாமார்ச்சி இவர்கள் இவனின் மாற்றுத் தந்தைகள் என விளங்கிக் கொள்ளலாம். டெலாமார்ச்சியின் குடியிருப்பில் காரலின் வாழ்வு பற்றிய பகுதி மிகச் சிறப்பானது. அதுபோவலே தெரஸெயின் தாய் மரணம் பற்றிய கதை அதிக நயமானது.

மற்ற இரண்டு கதைகளை விட இதில் காஃப்கா சுலபமாகத் தெரிகிறார். இதற்கு கார்ல் ரோஸ்மானின் வெளிவேடமான ஒரு சுதந்திரம் ஒரு காரணமாகும். இந்த பகட்டு வெளிப்படைச் சுதந்திரம் காஃப்காவின் கற்பனைக்கும் ஒரு லைசன்ஸ் அளித்து விடுகிறது. நூலின் கடைசி பகுதியில் வரும் The Nature Theatre of Oklahoma என்ற பகுதி காஃப்காவின் கற்பனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதன் ஆரம்பப் பகுதி காஃப்காவிற்கு மிகவும் பிடித்துப் போன பகுதியானதால் அவர் அதை ஏற்ற இறக்கங்களுடன் சத்தமாக படிப்பார் என மாக்ஸ் பிராட் என்ற அவர் நண்பர் கூறுகிறார். இதை ஒரு பிராயச்சித்த அல்லது சமரச சாத்தியமாகவே முடிக்க வேண்டும் என்று காஃப்கா எண்ணியிருந்தாராம். இந்த பிரம்மாண்ட எல்லையற்ற Oklahoma அரங்கத்தில் இந்த இளம் கதைநாயகன் மறுபடியும் தனக்கென ஒரு தொழிலையும் தன் சுதந்திரத்தையும் ஏன் தன் பழைய வீடு-பெற்றோர்களையும் கூட ஏதோ ஒரு சூனியவித்தை மூலமாக கண்டுவிடப்போகிறான் என்பது தான் காஃப்காவின் பிரயத்னம்.
காஃப்காவின் மெடமார்பசிஸ், விசாரணை, கோட்டை போன்ற நாவல்களையே அதிகம் அறிந்தவர்கள் அமெரிக்காவைப் படிப்பது அவசியம், குறிப்பாக ஆக்லஹாமா பற்றிய அந்தக் கடைசி வர்ணனை அமெரிக்கா பற்றிய கற்பனாவாதத்தை உடைப்பதாய் அமையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்