தலித் இலக்கியம், அது வாய்மொழி இலக்கியமாயினும் புலநெறி எழுத்து இலக்கியமாயினும் இந்திய இலக்கிய மரபின் ஒரு உயிர்ப்பூட்டும் அங்கம் என்று கன்னட இலக்கியவாதியும், கல்விப்புல பண்டிதருமான யு.ஆர். அனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஞானபீட பரிசு வென்ற கன்னட இலக்கிய மேதை யு.ஆர்.அனந்த மூர்த்தி, நலிந்தோருக்கும், பழங்குடியினருக்கும் சமூகப் படிநிலையில் கீழ்நிலையில் உல்ளவர்களுக்கும் சுயமரியாதையை ஏற்படுத்திக் கொடுப்பது அவர்களின் இலக்கிய மரபே என்று கூறுகிறார்.
மலையாளக் கவிஞரும், கல்வியாளருமான அய்யப்ப பணிக்கர் அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு அனந்தமூர்த்தி உரையாற்றினார்.
தலித்துகளின் வலியையும் வாழ்க்கையையும் தலித் அல்லாதவர்கள் எழுதலாம் என்றாலும் அவர்கள் தலித்துக்களை தாங்கள் பிரதிநிதித்துவம் செய்வதாக ஒரு போதும் கோருதல் கூடாது. என்கிறார் பேராசிரியர் யு.ஆர். அனந்த மூர்த்தி.
தலித் அல்லாதவர்கள் தலித்துகளின் நிலை பற்றி எழுதியவர்கள் பலரை சுட்டிக்காட்டிய அனந்த மூர்த்தி, கன்னட மொழியில் வெளியான பிரபலமான சோமன துடி என்ற தலித் நாவலைக் குறிப்பிட்டார். இது சிவராம கரந்த் எழுதிய நாவல், சிவராம கரந்த் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரல்லர்.
ஆனால் தலித் அல்லாதவர்கள் தலித்துகளை பிரதிநிதித்துவம் செய்வதாகக்கூறுவதில் ஒருவித அராஜகம் உள்ளது என்று தன் உரையில் குரிப்பிட்டார்.
தங்களது வாழ்நிலையை தலித்துக்களே எழுதும் போது இலக்கியத்திற்கு ஒரு புதிய பலமும், மொழியும் கிடைக்கிறது.
மராத்தி இலக்கிய மரபில் பக்தி இலக்கிய காலம்தொட்டே தலித் இலக்கியங்களில் ஒர் விதமான எதிர்ப்புக் குணம், போராட்டக் குணம் வெளிப்பட்டு வருகிறது என்கிறார் அனந்தமூர்த்தி.
பொதுவாக இலக்கிய ரசனையில் ஊறிப்போன தூய்மையான மொழி, அலங்காரமான பிரயோகம் ஆகியவற்றை தலித் எழுத்துக்கள் பயன்படுத்துவதில்லை இதனால் அவர்கள் எழுதும் அந்த மொழியில் தீப்பொறி கிளம்புகிறது. தங்களது மதிப்பற்ற நிலையை அழகான மொழியால், வெகுஜன ரசனைக்குட்பட்ட, அல்லது இலக்கிய ரசனைக்குட்பட்ட மொழியில் வழங்குவதை அவர்கள் எதிர்க்கின்றனர்.
கன்னடமொழியின் சிறந்த இலக்கியவாதி/விமர்சகராகக் கருதப்படும் டாக்டர் யு.ஆர். அனந்த மூர்த்தியின் உண்மைப் பெயர் உடுப்பி ராஜகோபாலாச்சாரியா அனந்த மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பார்ப்பண வகுப்பைச் சேர்ந்தவர்.
இவரது சம்ஸ்காரா என்ற நாவல் இலக்கிய வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சி அலை பரப்பியது.
இவர் ஒரு தீவிர பா.ஜ.க. எதிர்ப்பாளர். மதச்சார்பற்ற ஜனதாதள் தலைவர் தேவேகௌடா ஒரு முறை இவரை நாடாளுமன்றத் தேர்தலில் நிற்குமாறு வலியுறுத்தினார். ஆனால் மதச்சார்பற்ற ஜனதாதள் அப்போது திடீரென பாஜகவுடன் ஆட்சியைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டணி மேற்கொண்ட பிறகு அனந்த மூர்த்தி விரக்தியில் விலகினார். அவர் அப்போது:
"பாஜகவுடன் இணைந்ததற்காக மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் உள்ள என் நண்பர்களை நான் ஒருநாளும் மன்னிக்கப்போவதில்லை" என்றார்.
இவரது இலக்கிய வாழ்வும் சர்ச்சைகள் நிரம்பியது. கன்னட மொழியின் மற்றொரு முக்கிய எழுத்தாளரான பைரப்பா என்பாரது ஆவரணம் என்ற நாவலை யு.ஆர்.அனந்த மூர்த்தி கடுமையாக விமர்சித்தார். இந்த நாவலை ஃபாசிசம் என்றும் பைரப்பா ஒரு பாசிஸ்ட் என்றும் அனந்த மூர்த்தி கடுமையாக விமர்சித்தார். ஆனால் அதற்காக இவர் நிறைய பேரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு. அதன் பிறகு இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்ளமாட்டேன் என்றும் கூட இவர் அறிவித்திருந்தார்.
இவர் அவ்வாறு வாங்கிக் கட்டிக் கொள்ளக்காரணம் ஆவரணம் என்ற அந்த நாவல் வெளியிடப்பட்ட 5 மாதங்களுக்குள் 10 முறை அச்சிடப்பட நேரிட்டது. கட்டுக்கடங்காத விற்பனை! இந்திய இலக்கிய நூல்களில் அதிகம் விற்றுத் தீர்த்த நூல் என்ற சாதனையையும் நிகழ்த்தியது பைரப்பாவின் இந்த நாவல்.
இதனை பாசிசம் என்று வர்ணித்தால் சும்மா விடுவார்களா? ஆனால் ஒரு நேர்மையான விமர்சகன் நூலின் விற்பனை, அது புழங்கும் அதிகார மையம், வெகுஜன மையம் கண்டு பின்வாங்கக்கூடாது. இதைத்தான் அனந்த மூர்த்தியும் செய்திருப்பார் என்று தோன்றுகிறது.