Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் ஒரு வாசிப்பு - 4ஆம் பகுதி

-‌ ‌பூ‌ர்ணச‌ந்‌‌திர‌‌ன்

Advertiesment
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் ஒரு வாசிப்பு - 4ஆம் பகுதி
, வெள்ளி, 15 மே 2009 (19:54 IST)
அர்த்த அலகு 4

"குன்றுபோல் நின்றபடி குப்பன் உரைக்கின்றான்:
கண்ணுக்குள் பாவையே! கட்டமுதை நான் பசியோ(டு)
உண்ணப்போம் போது நீ ஓர்தட்டுத் தட்டிவிட்டாய்!
தாழச் சுடுவெயிலில் தாளாமல் நான்குளிர்ந்த
நீழலைத் தாவும்போது நில்லென்று நீ தடுத்தாய்!
தொட்டறிந்த கையைத் தொடாதே என்றாய் நேற்று
பட்டறிந்த தேகசுகம் விட்டிருக்கக் கூடுவதோ?
உன்னோடு பேச ஒருவாரம் காத்திருந்தேன்
என்னோடு முந்தாநாள் பேச இணங்கினாய்
நேற்றுத்தான் இன்பக் கரைகாட்டினாய் இன்று
சேற்றிலே தள்ளிவிட்டாய் காரணமும் செப்பவில்லை"

மீண்டும் 'குன்றுபோல் நின்றபடி' என்று குப்பனுக்கு அடைமொழி தரப்படுகிறது. மீண்டும் மலை, அசையாத்தன்மை, உயர்வு, ஆண் என்னும் சமப்படுத்தலோடு, கல்மனத்தை உடையவன் என்ற குறிப்பும் சேர்கிறது. (இதெல்லாம் படித்தவர்களின் பார்வை. நமது கிராமப்புறங்களில் இது கேவலப்படுத்தல். எதுவும் செய்யாமல் சும்மா நிற்பவனைப் பார்த்து 'ஏண்டா மலை மாதிரி நிக்கிற?' என்றோ, 'கல்மாதிரி நிக்கிறான் பாரு' என்றோ சொல்வார்கள்).

குப்பன் பேச்சில் அவன் வஞ்சியோடு கொண்ட தொடர்பு வரலாறு சொல்லப்படுகிறது. சங்ககாலக் களவுக்காதலாகவே இதனை அமைக்கிறார் (சங்ககாலக் களவுக்காதலில் மெய்யுறு புணர்ச்சி அல்லது உடலுறவு ஏற்கப்பட்ட ஒன்று). வஞ்சிக்கும் அவனுக்கும் ஏறத்தாழ ஒருவாரப் பழக்கம் என்று சொல்வதும் சங்கமரபுதான். அதிலும் இக்கதை நிகழும் நாளுக்கு இருதினங்கள் முன்புதான் அவள் பேசஇணங்கியிருக்கிறாள். முன் நாள்தான் இருவருடைய உடல்தொடர்பும் வாய்த்தது. இன்று அவள் தொடவிடவில்லை.
தொடவிடாமைக்கு என்ன காரணம் என்னும் புதிர்நிலை தொடர்கிறது.
உருவகம் இப்பகுதியில் ஆதிக்கம் கொள்கிறது. கண்ணுக்குள் பாவை, பசித்தவன்-கட்டமுது, சுடுவெயில் தாளாதவன்-குளிர்ந்த நிழல், இன்பக்கரை, சேறு என வருபவை. இவற்றிலுள்ள பாலியல் குறிப்புகள் வெளிப்படை. இவை கதைத்தொடர்ச்சியைத் தருகின்றன. தொட்டறிந்த கை என்பது ஆகுபெயர் (சினையெச்சம்-metanymy).

குப்பன் பேச்சில் திரும்பத்திரும்ப வரும் 'நான்' கள் அவனது சுயநலத்தைக் காட்டுகின்றன. அவன் வஞ்சியை ஓர் இன்பக்கருவியாக எண்ணித் தனது ஆவலை வெளிப்படுத்துகின்றானே அல்லாமல் அவள் மனக்குறிப்பையோ, உடன்பாட்டையோ சற்றும் நோக்கவில்லை. 'நான் இன்பம்காண வரும்போது நீ ஏன் தடுக்கிறாய்?' என்ற சுயநலக்குறிப்புதான் இருக்கிறது. இக் குறிப்பு, பின்வரும் உருவகங்களாலும் வலுப்பெறுகிறது.

கண்ணுக்குள் பாவை-வஞ்சிக்கு உருவகம். சமுதாயத்தில் பெண்ணின் இடத்தைக் காட்டுவது. 'காக்கப்படவேண்டியவள், பாதுகாத்தால் ஒளிதருபவள்' என்பது கருத்து. பெண்ணின் தனி இருப்பை மறுக்கும் உருவகம் இது. மீதி உருவகங்கள் யாவும் (உணவு, நிழல், இன்பக்கரை) பெண்ணை இன்பத்துக்கான கருவியாக நோக்குபவை. மேலும் "நான் உண்ணப்போகும்போது நீ தட்டிவிட்டாய், குளிர்ந்த நிழலுக்கு நான் தாவும்போது நீ தடுத்துவிட்டாய், நேற்று அறிந்த சுகம் விடக்கூடுவதோ" என்ற கூற்றுகளில் எல்லாம் இன்பச் செயல்பாட்டில் வஞ்சிக்குத் தொடர்பே இல்லாதது போன்ற குறிப்பு குப்பனின் வார்த்தைகளில் இருப்பது நோக்கத்தக்கது. "நேற்று தொட்டறிந்த சுகம் விடக்கூடுமா?" என்பது மட்டும் 'பெண்களுக்கும் பொருந்துவதே' எனச் சமாதானம் கூறிக்கொள்ளலாம். இப்பகுதி முழுதும் குப்பனின் சுயநலத்தை வெளிப் படுத்துவதாகவே அமைகிறது.

குப்பனையும் வஞ்சியையும் சாதாரண மக்களாகவே, குற்றங்குறை உடையவர்களாகவே படைக்கிறார் பாரதிதாசன். கதைதான் தேவதைக் கதையே தவிர, பாத்திரங்கள் மண்ணுக்குரியவர்கள்தான். இங்கு குப்பனின் பண்புக்கோளாறு வெளிப்பட்டது போலவே, இன்னொரு பகுதியில் வஞ்சியின் குணக்குறைபாடும் வெளிப்பட இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil