Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோனத்தில் ஆழ்த்திய ‘மோகன் வீணை’

மோனத்தில் ஆழ்த்திய ‘மோகன் வீணை’
, வெள்ளி, 30 செப்டம்பர் 2011 (18:21 IST)
FILE
எங்கள் அலுவலகத்திற்கு இசைக் கலைஞர் ஒருவர் வருகிறார், அவர் ஒரு புதிய இசைக் கருவியை நம்மிடையே இசைத்துக் காட்டப் போகிறார் என்று தெரிவிக்கப்பட்டதும், அதனை ஒருவரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

வந்தார் அந்த இசைக் கலைஞர். 30க்கும் 40க்கும் இடைப்பட்ட வயது. இசைக் கலைஞர்களுக்கே உரிய நீண்ட சிகையுடன், ஜிப்பாவுடன் வந்தார். பாலி வர்கீஸ் என்ற அந்தக் கலைஞர் எல்லோருடனும் உற்சாகத்துடன் பேசினார். பிறகு தான் கொண்டு வந்த அந்த இசைக் கருவியை எடுத்து சுதி சேர்க்கத் தொடங்கினார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, தனது இசைக் கருவியை மென்மையாக இசைக்கத் தொடங்கினார். எங்கள் அலுவலகமே இசையால் நிரம்பியது. நின்றவர் நின்றுகொண்டும், தரையில் அமர்ந்தவர்களும் அந்த இசையால் மெய்மறந்தனர்.

அம்சானந்தி என்கிற இராகத்தை இசைக்கப்போவதாகத் தெரிவித்தார் வர்கீஸ். மோகன் வீணையைத் தவிர, வேறு எந்த இசைக் கருவிகளின் துணையின்றியே, சில நிமிடங்களில் அதன் அற்புத இசையால் எங்களை முழுமையாக நிறைத்தார். நானும் எத்தனையோ இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் கண்டு இரசித்துள்ளேன். ஆனால், அன்று எங்கள் அலுவலகம் தேடி வந்த பாலி வர்கீஸ் வாசித்த இசை ஊடுறுவியதுபோன்ற உணர்வைப் பெற்றதில்லை.

webdunia
WD
அவர் கொண்டு வந்த மோகன் வீணை என்பது நமக்கு மிகவும் பரிச்சயமான பேஸ் கிட்டாரைப் போல் இருந்தது. மேல் பகுதியில் 7 கம்பிகளும், உள்ளீடாக 13 கம்பிகளும் (நரம்புகளும்) இணைக்கப்பட்டிருந்தது. இதனை உருவாக்கியவர் விஸ்வ மோகன் பட். அவரது பெயரினாலேயே மோகன் வீணை என்றழைக்கப்படுகிறது.

ஹவாயன் கிட்டார் என்றழைக்கப்படும் இசைக் கருவியை, நமது நாட்டின் சித்தார், சரோட், வீணை ஆகியவற்றின் கலவையாக்கி, 6 நரம்புகள் மட்டுமே கொண்ட கருவியில் மேலும் 14 நரம்புகளைச் சேர்த்து மோகன் வீணையை உருவாக்கியுள்ளார்.

தனது புதிய இசைக் கருவியைக் கொண்டு உலக அளவில் புகழ் பெற்றார் விஸ்வ மோகன் பட். இந்திய இசையின் பன்னாட்டுத் தூதராகவே இவர் பாராட்டப்படுகிறார். ‘எ மீட்டிங் ஆஃப் தி ரிவர’ என்ற இசைத் தொகுப்பை மோகன் பட், ரி கூடர் ஆகியோர் இணைந்து உருவாக்கினர். அதற்கு 1994ஆம் ஆண்டு கிராமி விருது கிடைத்தது.

webdunia
FILE
கிட்டாரில் ஃபிரெட் என்ற மேலெழும்பிய பகுதிகள் இருக்கும் அதன் மீது விரலை வைத்து அழுத்தி இசைப்பார்கள். இதில் அப்படி ஏதும் இல்லை. ஸ்லைடிங் இன்ஸ்ட்ருமெண்ட் என்று வர்கீஸ் கூறினார். ஒரு சிறிய உலோகத் துண்டை வைத்து அழுத்தியும், அழுத்தாமலும் தேய்துக்கொண்டே, தனது வலது கை விரல்களால் கம்பிகளை மீட்டி அற்புதமான இசையை உருவாக்கினார்.

அரை மணி நேரம் அவர் இசைத்த அந்த இராகம்... அது சோகத்தை சொல்வதாகவும், நம்முள் சோகத்தை எழுப்புவதாகவுமே இருந்தது. இது உண்மையா? எங்கள் நிறுவனத்தின் மனித வள அலுவலர் அதை கேள்வியாகவே அவரிடம் கேட்டபோது, வர்கீஸ், ஆம் என்றே கூறினார்.

“நம் எல்லோருக்குள்ளும் சோகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது, அதனை மறைத்துக்கொண்டுதான் சிரிக்கிறோம். அதனால்தான் இந்த இராகத்தை இசைக்கும் போது அதற்கு ஒரு வடிகால் கிடைக்கிறத” என்று அவர் கூறினார். மெய்தான் என்று உள்ளுக்குள் கூறிக்கொண்டேன். மற்றவர்களும் மறுக்கவில்லை.

அந்த இராகத்தின் இறுதிப் பகுதியில் அவர் எழுப்பிய நாதம் எனது ஜூவனின் அகம், புறம் இரண்டையும் நிறைத்தது. இந்தக் கருவியை இவர் படுவேகமாக இசைக்கிறார். நரம்புக் கருவிகள் இவ்வளவு வேகமாக இசைக்கப்பட்டு நாம் பார்த்திருக்க மாட்டோம். அந்த அரை மணி நேரம் எனது வாழ்நாளில் முழுமையாக அனுபவித்த நேரங்களில் ஒன்றாக இருந்தது.

வெப்துனியா அலுவலக சூழலில் இப்படியொரு உன்னதமான நேரத்தை நாங்கள் யாரும் அனுபவித்ததில்லை. மோகன் வீணையை... highly advanced musical instrument என்று என்னுடைய குருஜி விஸ்வ மோகன் பட் வர்ணிப்பார் என்று அந்த இசைக் கலைஞர் கூறினார்.

நான் கடவுள் என்ற படத்தில் ஆராதனைக் காட்சி ஒன்றில் இந்த இசைக் கருவி மீட்கப்பட்டதாகக் கூறிய வர்கீஸ், மற்றபடி தான் ஒருபோதும் காசுக்காக மீட்டதில்லை, மீட்கவும் மாட்டேன் என்று கூறினார்!

webdunia
WD
“எனது வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். படிப்பை விட்டுவிட்டு இசையோடு இணைந்து எங்கெல்லாமோ அலைந்துள்ளேன். பல நாட்கள் சுடுகாட்டில் தங்கியிருந்திருக்கிறேன். அங்கு உடலைச் சுட வருகிறார்கள் போடும் படையலையே உணவாக சாப்பிட்டிருக்கிறேன்” என்றெல்லாம் தான் நடந்த பாதையை விளக்கிய அந்தக் கலைஞர், காசுக்காணதில்லை வாழ்க்கை என்றார்.

எங்களுக்கு அவர் அளித்த ஆலோசனை: “வாரத்திற்கு ஒருமுறையாவது ஏதாவது ஒரு இசைக் கலைஞரை அழைத்து வந்த இசைக்கச் சொல்லி கேளுங்கள், உங்கள் மனதிற்கும், உடலிற்கும் நல்லத”.

Share this Story:

Follow Webdunia tamil