Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண்டம் கடந்து வாழும் ஐரோப்பிய எழுத்தாளர்

கண்டம் கடந்து வாழும் ஐரோப்பிய எழுத்தாளர்

Webdunia

ஜாய்ஸ், மொழி மீது கொண்டுள்ள மோகம் / லயிப்பு காரணமாக அவரது எழுத்தை மொழியாக்கம் செய்வது - அதிலும் குறிப்பாக ஸ்பானிய மொழியில் - சிரமமானதை மட்டுமல்லாமல் இயலாததாகவும் ஆகிவிடுகிறது. மோலியின் தன்வயப் பேச்சின் (Soliloquy) ஒரு பத்தியை 1925-ல் மொழிமாற்ற செய்தபோது இதனைக் கண்டுபிடித்தேன். இன்றுவரை அவருடைய படைப்புகளின் மொழியாக்கங்கள் ஹிஸ்பானிய, ரோமனிய மொழிகளில் தரம் தாழ்ந்தவையாகவே உள்ளன. அவரது லயமிக்க கூட்டுவார்த்தைகள் ஆங்கிலோ - சாக்சன் மற்றும் ஜெர்மானிய மொழிகளில் சிறப்பாக வெளிவருகின்றன. ஜாய்ஸ் உரைநடை மொழியைப் பயன்படுத்தி கவிதை வரிகளை உருவாக்கினார். அவரது படைப்புகள் கவிதையாகவே வாசிக்கப்பட வேண்டும்.

சீ.ஹி.: ஜாய்சின் Chamber music போன்ற கவிதைகளில் கையகப்படும் மொழிக்கும், A Portrait, Ulysses போன்ற உரைநடைகளில் வெளிப்படும் மொழிக்குமான அடிப்படை வித்தியாசம் குறித்த வியப்பு எனக்கு அநேக நேரங்களில் இருந்து வந்திருக்கிறது. கவிதையில், பிறிதொரு இடத்திலிருந்து கேட்பது போல தன் குரல் மாற்றிப் பேசுபவராக (Ventriloquist) மொழியை அணுகி, அதன் பரம சீடனாகி இலக்கியத்தின் இசைக் கீற்றை பிறிதொரு குரலில் ஒத்திகை பார்ப்பவராகிறார். ஆனால் உரைநடையிலோ ஏதோவொன்று கட்டவிழ்ந்து ஒரு புதிய உயிர்ப்புடன் புதிய வகையில் வெளிப்படுகிறது. அவர் செய்யுளை நேரடியாக அணுகும்போதெல்லாம் ஒரு வகையான தடைக்குள் சிக்கிக் கொண்டு விடுகிறார். ஆனால் அவருள் ஆழமாக மண்டிக்கிடக்கும், வெளிவரத்துடிக்கும் கவிமனம்தான் உரைநடையின் முன்னறியா வடிவங்களில் விளையாடும் உந்து சக்தியாக இருந்திருக்கிறது.

ரி.கி. 1941 - ல் கட்டுரையொன்றில் "மொழி நடையில் உயர்ந்தபட்ச வெற்றிகளைக் கண்ட பக்கங்களை" எழுதியவர் என ஜாய்சை பாராட்டியுள்ளீர்கள். ஒரு எழுத்தாளர் என்ற நிலையில் அவரது மொழிநடையின் தாக்கம் தங்களுக்கு இருந்ததாக நினைக்கின்றீர்களா?

ஜோ : யுலிசிஸ்-ல் ஒவ்வொரு அத்தியாயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும் வெவ்வேறு மொழிநடையில் எழுதத்துணிந்தது என்னை மிகவும் பாதித்தது. நானும் எனது படைப்புகளில் மொழி நடையின் பலவிதமான யுத்திகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனாலும் நேரடியான தாக்கம் குறித்து உறுதியாகக் கூறமுடியவில்லை. அல்லது அப்படியொரு தாக்கம் ஏற்பட்டிருந்தால் அது நனவிலி நிலையில் நிகழ்ந்திருக்கக் கூடும். நான் தன்னுணர்வில் ஏற்றுக் கொண்ட இலக்கியத்தாக்கம் ஸ்டீவன்சன், செஸ்டர்டன், கிப்ளிங் மற்றும் ஷா போன்றவர்களுடையதே. நான் சிறுவனாக, பியூனஸ் அயர்சில் எனது தந்தையின் நூலகத்தில் இவர்களை வாசித்தேன். இதில் மிகச் சிறந்த ஆங்கில நூல்களின் தொகுப்பு இருந்தது. எனது இளம்பிராயத்தை இந்த நூலாசிரியர்களுடன் சேர்ந்து கனவு காண்பதில் கழித்தேன். கிப்ளிங்குடன் இந்தியாவிலும், கோல்ட்ரிட்ஜுடன் ஜானாடுவிலும், டிக்கன்சுடன் லண்டனிலும் சுற்றியலைந்தேன். இலக்கியம் என்பது எண்ணற்ற நடை உத்திகளுனூடான சாகச செயல்தான் என்ற முதல் அனுபவத்தை அநேகமாக இந்த நூலகத்தில்தான் பெற்றேன்.

க, நூலகம் என்பது பல குரல்களில் பேசும் ஒற்றை மனம். நூலகங்களின் மீதான என் மயக்கம் என் கற்பனைப் பாத்திரங்கள் போன்றே அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக 9,00,000 புத்தகங்களைக் கொண்டிருந்த பியூனஸ் அயர்சின் தேசிய நூலகத்தில் பணியாற்றிட ஏங்கிருக்கிறேன். ஆனால், கடைசியாக 1955-ல் பெரானின் வீழ்ச்சிக்குப் பிறகு - அந்நூலகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்ட அதே ஆண்டில் என் பார்வையிழந்திருந்தேன். அங்கே என்னால வாசிக்கப்பட முடியாத புத்தகக் குவியல்களுக்கு ஊடாக நான் இருந்தேன். சில நேரங்களில் என்னால் இன்னும் கூட பார்க்க முடிவது போல் பாவனை செய்வேன்.இன்றவரை ஏதோவொரு சந்தர்ப்பததில் ஒரு புத்தகக்கடைக்குச் சென்று சில புத்தகங்களை வாங்கி என்னால படிக்கவியலும் என்பதாக என்னையே ஏமாற்றிக் கொள்கிறேன்.

எனது "எழுத்துக்களின்" மீதான தாக்கங்கள் குறித்த பேச்சு எழும்போதெல்லாம் நான்எழுத்தாளனாகவே கருதிக் கொள்வதில்லை. நான் மிகச் சிறந்த விசயங்களை எழுதுவதில்லை. (I don't write very good stuff). அதேபோல் நான் என்ன எழுதினாலும் என்னால் திரும்ப வாசிக்க இயலுவதில்லை. என் எழுத்துக்கள் குறித்த விமர்சனத்தையும் எப்போதும் நான் வாசித்ததில்லை. என் நூலகத்தில் இதுபோன்ற விமர்சனப் புத்தகம் ஒன்று கூட இல்லை. என் எழுத்தையும் தாண்டி நான் பிரபலமாகி விட்டேன் என்றுதான் எனக்குப் படுகிறது. எனது படைப்புகளாலன்றி அவற்றையும் மீறி புகழ்பெற்று விட்டேன் என்றுதான் எனக்குப் படுகிறது. இதில் எங்கோ தவறிருக்கிறது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். அநேகமாக மக்கள் என்னை வேறொரு எழுத்தாளனென்று தவறாகப் புரிந்து கொணடிருக்கிறார்களோ?

ரி.கி. : "அர்ஜென்டிய எழுத்தாளரும் மரபும்" என்ற கட்டுரையில் / புத்தகத்தில் உங்களை "கலாச்சார வெகுமனப் போக்கிற்கு" வெளியே உள்ள எழுத்தாளராக உணர்வதாகக் கூறியுள்ளீர்கள். ஜாய்ஸ்-ம் "வீடு, தாய்நாடு, ஆலயங்கள்" சுதந்திர வெளியைச் சுருக்கும் வலை, அதில் சிக்கிக் கொள்ளாமல் பறந்து செல்ல எத்தனிப்பேன் என்று கூறியபோதும் தனதுகதாபாத்திரமான ஸ்டீபனை தான் எப்போதுமே ஆங்கில மொழியுடன் சௌகரியமாக (At home) இருந்ததில்லை, அந்த மொழியின் வார்த்தைகளைப் படிப்பதோ எழுதுவதோ ஆன்ம சஞ்சலமின்றி நடந்ததில்லை என்று ஒத்துக் கொள்ளச் செய்தபோதும் இதே போன்றதொரு கருத்தை முன் வைக்கின்றார். தாங்களும் அதேபோன்றதொரு கலாச்சாரரீதியிலான அல்லது பின்காலனித்துவ ஸ்பானிய மொழியைப் பயன்படுத்தும்போது உணர்கிறீர்களா?

ஜோ : ஒரு அர்ஜென்டினியனாக ஸ்பானிய கலாச்சார வெகுமனப் போக்கிலிருந்து விலகியிருப்பதை உணர்கின்றேன். நான் ஸ்பானிய கலாச்சாரத்தைப் போன்றே ஆங்கில மற்றும் பிரெஞ்சுக் கலாச்சாரங்களுக்கும் நன்கு அறிமுகமானவனாகவே வளர்க்கப்பட்டேன். ஏற்கனவே ஐரோப்பிய மைய நீரோட்ட இலக்கிய மரபின் விளிம்பில் உள்ள மொழிநடையை, ஒரு அன்னியனாக ஸ்பானிய மொழியில் கையாளும்போது ஸ்பானிய மொழிக்கே நான் இரட்டை அன்னியனாகி விடுகின்றேன்.

சி.ஹி : எல்லா மரபுகளுமே அது தோற்றம் பெறுவதற்கு முன்பே கற்பிதம் செய்து கொள்ளப்பட வேண்டுமென்பதை ஏற்றுக் கொண்டு, ஹிஸ்பானிய-அமெரிக்க மரபு என்ற ஒன்று இருப்பதாகக் கருதுகின்றீர்களா?

ஜோ. : மரபு குறித்த கருத்தாக்கம் நம்பிக்கையின்பாற்பட்டது என்பது உண்மைதான். நமது கற்பனைகள் கடந்தகாலத்தைத் தொடர்ந்து மாற்றியும் புத்துருவாக்கம் செய்த வண்ணமிருக்கின்றன. ஆனால் என்னைப் பொருத்த மட்டிலும், ஹிஸ்பானிய - அமெரிக்க மரபு என்ற கருத்தில் எனக்கு பெருமளவில் நம்பிக்கை இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். உதாரணமாக, நான் மெக்சிகோவுக்கு பயணம் மேற்கொண்டபோது அவர்களின் செறிவான கலாச்சாரம், இலக்கியங்களைக் கண்டு பேருவகை கொண்டேன். ஆனால், இன்னொன்றையும் இங்குகூறி விடுகின்றேன். எனக்கும் அந்தக் கலாச்சாரத்திற்கும் இடையிலான பொதுத்தன்மை எதனையும் நான் காணவில்லை; தங்களுடைய இந்திய (செவ்விந்திய) பூர்வீகத்தின் மீது செவ்விந்தியர்கள் கொண்டுள்ள வழிபாட்டு மரியாதையுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள இயலவில்லை என்ற போதிலும் நான் அவர்கள் பால் ஈர்க்கப்பட்டேன். அர்ஜெண்டின, உருகுவே கலாச்சாரங்கள் ஸ்பெயின், இத்தாலிமற்றும் போர்த்துக்கீசிய கலாச்சாரக் கூறுகளின் கலவையாகி ஐரோப்பிய - பாணியைக் கொண்டிருப்பதால் இவை ஏனைய லத்தீன் - அமெரிக்க நாடுகளிலிருந்து வேறுபட்டுத்தெரிகின்றன. எடுத்துக்காடடhக அர்ஜெண்டினாவில் புழக்கத்தில் உள்ள பேச்சு வழக்கு அல்லது வட்டார வழக்குகளில் பெரும்பாலானவை இத்தாலிய மூலம் சார்ந்தவையாகும். நானும்கூட போர்ச்சுகல், ஸ்பெயின், யூத மற்றும் ஆங்கிலப் பூர்வூகத்தின் வழி வந்தவனே.


`நாமே சாக்சன், கெல்டிக், டேன்' என லார்ட் டென்னிசன் நினைவூட்டியதைப் போல ஆங்கிலேயர்களும் கூட பல இனங்களின் கலப்பேயாகும். சுத்தமான, கலப்பற்ற இனம் அல்லது தேசியம் என்று ஒன்று இல்லை. அப்படி ஒன்று இருக்க முடியுமானால் அதன் எல்லைகளும் கற்பனைகளால் தாண்டப்படக் கூடிய ஒன்றாகவே இருக்கும். ஆக, தேசியமும் இலக்கியமும் இயல்பாகவே எதிரெதிரானவைதாம்.

லத்தீன் - அமெரிக்கஅல்லது ஹிஸ்பானிய - அமெரிக்க என்று கருதப்படக் கூடிய குறிப்பாக அர்ஜெண்டின கலாச்சாரம் என்று ஒன்று இருப்பதாக நான் நம்பவில்லை. உண்மையான அமெரிக்கர்கள் இந்தியர்கள்தான்; ஏனையோர் அனைவரும் ஐரோப்பியர்களே. எனவே நான் என்னை சொந்தநாடு கடந்து வாழும் ஐரோப்பிய எழுத்தாளனாக கருதிக் கொள்ளவே விரும்புகின்றேன். நான் ஹிஸ்பானியனல்ல; அமெரிக்கனல்ல; ஹிஸ்பானிய அமெரிக்கனும் அல்ல. மாறாக, நான் சொந்த நாடு கடந்து வாழும் ஒரு ஐரோப்பியன். அவ்வளவே.

சி.ஹி.: டி.எஸ். எலியட் "ஐரோப்பிய முழுமனம்" (Whole mind of Europe) பற்றிப் பேசியுள்ளார். ஸ்பானிய மொழியின் ஊடான பயணத்தில் தாங்களும் இந்த வகையான முழுமனத்தின் ஏதோவொரு கூற்றை வரித்துக் கொண்டிருப்பதாக உணர்கின்றீர்களா?

ஜோ : அர்ஜெண்டினாவில் நாங்கள் எந்தவொரு தனிப்பட்ட ஐரோப்பியக் கலாச்சாரத்தின் மீதும் முற்றுமுழுதான பற்றுறுதியைக் கொண்டிருக்கவில்லை. நான் ஏற்கனவே கூறியதைப்போல, ஐரோப்பாவின் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், அதேபோல "ஐரோப்பிய முழுமனம்" என்றொன்று இருக்குமேயானால் அதிலிருந்தும் எங்களால் தெரிந்தெடுத்துக் கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் எங்களுக்கும் ஐரோப்பாவிற்குமான தூரம் அதிகமிருப்பதால், ஐரோப்பாவையும் தாண்டி ஆசியாவிலும் ஏனைய கலாச்சாரங்களிலும் தேடிப்பார்க்கும் கலாச்சாரம் அல்லது கற்பனைச் சுதந்திரம் எங்களுக்கு உண்டு.

ரி.கி. : தூரக்கிழக்கில், புத்தமதத்தில் காணக்கிடக்கும் மெய்யியல்கோட்பாடு உங்கள் புனைவுகளில் அடிக்கடி முன்வைக்க முயலும்போது நீங்கள் செய்வதைப் போல...

ஜோ : ஒருமுகப்பட்ட "தேசிய" கலாச்சாரம் சாராதிருப்பது என்பது அநேகமாக வரட்சியல்ல. மாறாக அதுசெழுமையே. இந்த அர்த்தத்தில் பியூனஸ் அயர்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் சர்வதேசிய எழுத்தாளன் நான். ஏற்கனவே கூறியதைப் போல எனது மூதாதையர்கள் வெவ்வேறு தேச இனக்குழுக்களைச் சார்ந்தவர்கள். எனவே எனது இளம்பிராயம் முழுவதும் ஐரோப்பாவில் பயணம் செய்வதிலேயே கழிந்தது. அதிலும் குறிப்பாக ஜெனீவா, மாட்ரிட் மற்றும் லண்டனில் நான் பல்வேறு புதிய மொழிகளான ஜெர்மன், ஆங்கிலம், லத்தீன் முதலானவற்றைக் கற்றேன். இந்தப் பன்னாட்டுப் பயிலனுபவம் அழகான பொம்மைகளுடன் விளையாடுவதைப் போன்று வார்த்தைகளுடன் விளையாடுவதற்கான திறனைக் கொடுத்தது; பிரௌனிங் கூறுவதைப் போல 'மாபெரும் மொழி விளையாட்டிற்குள் நுழைவதற்கான" வழியை வகுத்தக் கொடுத்தது.

ரி.கி.: ஜாய்சைத் தவிர, நீங்கள் மதிக்கின்ற குறிப்பிடும்படியான ஐரிஷ் எழுத்தாளர்கள் சிலரைக் கூறுங்களேன்.

ஜோ. : நான் சிறுவனாக இருந்தபோது பியூனஸ் அயர்சில் ஜார்ஜ் பெர்னாட்ஷா - வின் Quintessence of Ibsensism படித்தேன். அப்புத்தகம் என்னை வெகுவாக ஈர்த்துவிட்டது. அதன் விளைவாக அவரது அனைத்து நாடகங்களையும் கட்டுரைகளையும் வாசித்து முடித்தேன். அவற்றில் ஆழ்ந்த தத்துவ விசாரமுள்ள எழுத்தாளனை, மனத்திட்பம் மற்றும் மனத்தின் உருத்தோற்ற மாற்றம் செய்யவல்ல (Transfiguring power of the will and of the mind) திறன் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ள எழுத்தாளனைக் கண்டேன். அயர்லாந்து மக்களுக்கே உரிய குறும்புத்தனத்துடன் கூடிய வேடிக்கையுணர்வை நகைச்சுவை உணர்வை ஷா கைவரப் பெற்றிருந்தார். அதேபோல் மேம்போக்கானவற்றை, நகைச்சுவையானவற்றை அறிவார்ந்த ஆழத்துடன் கலந்து எழுதும் அரிய ஆற்றல் பெற்ற இன்னொரு எழுத்தாளர் ஆஸ்கார் ஓயில்ட். அவர் சில அலங்காரமான பக்கங்களையே (Purple Passages) எழுதியுள்ள போதிலும் அவர் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானவை என்றே நான் நம்புகிறேன். . . . .

ரி.கி : ஆஸ்கார் ஓயில்ட் ஒரு முறை "கலையில் உண்மை என்பது அதன் முரணும் உண்மை என்பதே" (Truth is art is that whose contrary is also true) என்றார்.

ஜோ : ஆம். அதைத்தான் நான் வேடிக்கை உண்மை (Comic Truth) என்றேன். ஆம், யதார்த்தத்தின் சூழல் மற்றும் முரண்பட்ட பதிவுகளை அனுமதிக்கும் உண்மை. அதனால்தான் நான் ஓயில்ட் எழுதிய ஒவ்வொரு வார்த்தையையும் உண்மை என்றேன். நானும் வேடிக்கை உண்மையில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒரு இளைஞனாக இலக்கிய முயற்சியில் இறங்கிய போது ஆஸ்கார் ஓயில்டின் தேவதைக் கதையொன்றை மொழியாக்கம் செய்தது தற்செயலாக நடந்ததாக நான் எண்ணவில்லை. எனது இளம் மனத்தில் கற்பனைத் தீ மூட்டிய இன்னொரு ஐரிஷ் எழுத்தாளர் ஜார்ஜ்மூர் ஆவார். தெருக்களில் கேட்க நேர்ந்த பேச்சினூடான நொடிக்கதைகளை உருமாற்றம் செய்து ஒரு புனைவான வரிசையில் கொடுப்பதன் மூலம் ஒரு புதுவகையான புத்தகத்தை, ஒரு புதுவையான புனைவு எழுத்து முறையை மூர் உருவாக்கினார். நான் அவரிடமிருந்தும் கற்றுக் கொண்டேன்.


ரி.கி : அப்படியானால் பெக்கட்? ஜாய்சின் மிக நெருங்கிய ஐரிஷ் சீடர் அவர்தானே? அவரும் கூட உங்களைப் போலவே புனைவு மீது மோகம் (Obsession) கொண்டவர்தானே. புனைவு என்பது அவருக்கும் சுயமாகக் கூர்ந்தாயும் மனத்தின் புதிர்வழிதானே (Self-scrutinising labyrinth of the mind); புனைவு குறித்து நித்யமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் நையாண்டி போலிதானே (Parody of itself).

ஜோ : சாமுவேல் பெக்கட் அலுப்பானவர். நான் அவரது Waiting for Godot பார்த்தேன். அது மட்டுமே எனக்குப் போதுமானதாகப்பட்டது. மோசமான படைப்பு அது. கோடாட் எப்போதுமே வரப்போவதில்லை என்கிற போது அவருக்காக நான் எதற்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும்? அலுப்புத் தரக்கூடிய விசயம் இது. அதற்குப் பிறகு அவரது நாவல்களைப் படிக்கும் ஆர்வம் எழவேயில்லை.

ரி.கி : உங்களது படைப்புகள் மெய்ப்பொருளியல் சங்கேதங்களையும் (Metaphysical Allusions) அதன் பிரதிபலிப்புகளையும் கொண்டுள்ளன. உங்களுக்கும் தத்துவத்திற்குமான தொடர்பு என்ன?

ஜோ : என்னைப் பொருத்தளவில் ஷோபனார் (Schopenhauer) தான் தலைசிறந்த தத்துவவாதி. கருத்துக்களில் புனைவிற்குள்ள வலிமையை அவர் அறிந்திருந்தார். இத்திட நம்பிக்கையை ஷா-விடமும் காணமுடிகிறது. எழுத்தாளன், சிந்தனையாளனுக்கு இடையிலான பொய்யான இடைவெளியை ஷோபனாரும். ஷாவும் வெட்ட வெளிச்சமாக்கினார்கள். இருவருமே சிறந்த எழுத்தாளர்கள். சிந்தனையாளர்கள். என்னை மிகவும் ஈர்த்த இன்னொரு தத்துவவியலாளர் ஜார்ஜ் பெர்க்லி-இன்னுமொரு ஐரிஷ்காரர். மெய்ப்பொருளியலும் கவிதையைப் போனறே படைப்பு மனத்தின் செயல்பாடுதான் என்பதைப் பெர்க்லி அறிந்திருந்தார். பிற தத்துவவியலாளர்களைப் போல் அவர் கருத்துக்களின் அடிமையாகி விடவில்லை. தத்துவார்த்த தர்க்க முறைமையும் கவிதையின் புராணிகமயமாக்கல் செயல்பாடும் பிரிக்கமுடியாதபடி ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை. ஒன்று மற்றதற்குச் சிறப்புச் சேர்ப்பவை என்பதை பிளாட்டோ, சாக்ரடீசுக்கு முந்தைய சிந்தனையாளர்கள் அறிந்திருந்தனர். பிளாட்டோ இந்த இரண்டு செயல்களையும் செய்யவல்லவராயிருந்தார். பிளாட்டோவிற்குப் பின்னால் மேற்கத்திய உலகம் இச்செயல்பாட்டை ஏற்க மறுத்து விட்டதாகவே தெரிகிறது. அவர்கள் உரத்த குரலில், நாங்கள் கனவு காண்போம் அல்லது நம்பிக்கையின் ஆதாரத் தேடலில் ஈடுபடுவோம். அதற்கான வாதங்களை முன் வைப்போம் அலலது உருவகங்களின் துணை நாடுவோம் என்று கூறிவிட்டதாகவே தெரிகிறது. ஆனால் உண்மை என்னவெனில் இந்த இரண்டையும் ஒரு சேர நாம் கையாள்கிறோம். பல கட்டிறுக்கமான, அகநிலை உணர்வு பெற்ற (Hermetic and mystical thinkers) சிந்தனையாளர்கள் இந்த எதிர் நிறுத்தலை எதிர்த்து வந்துள்ளனர்.

பெர்க்லி, ஷெல்லிங், ஷோபனாரும், பிராட்லி போன்றோரிடம் நவீன கருத்து முதல் வாதங்கள் (Modern Idealism) உருவான போது மனத்தின் படைப்பாக்கம், உருவாக்கத்திறன் மீது தத்துவவியலாளர்களின் சார்பை மீண்டும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டி வந்தது. (பிராட்லியின் " Appearance and Reality" என்ற புத்தகத்தின் முன்னுரை என்னைக் குறிப்பிட்டிருந்தது. நான் ஒருதீவிரமான சிந்தனையாளராக காட்டப்பட்டிருந்தேன்.)

ரி.கி : பெர்க்லியின் மெய்ப்பொருளியல் தத்துவத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் பிறந்தது எப்படி?

ஜோ : என் தந்தை உளவியல் துறைப் பேராசிரியர். எனக்குச் சரியாக எழுதப்படிக்கத் தெரியாத போதே சிந்திக்கக் கற்றுக் கொடுக்கலானார். என் பத்தாவது வயதில் பெர்க்லியின் தத்துவத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார், இரவுச் சாப்பாட்டிற்கு பின் எனக்குத் தத்துவப்பாடம் நடத்துவார். பெர்க்லியின் கருத்துமுதல்வாத மெய்ப்பொருளியலை எனக்கு முதன்முதலில் எப்படி அறிமுகப்படுத்தினார் என்பது நன்றாக நினைவிருக்கிறது. குறிப்பாக, பொருண்மையான அல்லது அனுபவ ரீதியான உலகமானது படைப்பு மனத்தின் கண்டுபிடிப்பே என்பதையும் இருத்தல் என்பது உணரப்படவேண்டிய ஒன்றே என்கிற பெர்க்லியின் கோட்பாடுகளையும் எப்படி அறிமுகப்படுத்தினார் என்பது இன்றளவும் நினைவில் உள்ளது.

அது மதிய வேளை. சாப்பிட்ட பிறகு ஒரு ஆரஞ்சுப் பழத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். அதன் நிறம் என்னவென்று என்னிடம் கேட்டார். நான் "ஆரஞ்சு" என்றேன். இதன் நிறம் இந்தப் பழத்திலேயே உள்ளதா அல்லது அதை நீ அப்படி உணர்ந்ததின் விளைவா" என்றார். "இந்த ஆரஞ்சின் இனிப்புத் தன்மை அதனுள்ளேயே உள்ள ஒன்றா? அல்லது உன் நாவின் சுவையுணர்வு தான் அதனை இனிப்புச்சுவை உள்ளதாகத்தோன்றச் செய்கிறதா?" என்றார். இந்நிகழ்ச்சி புறவுலகென்பது நம் கண்டுணர்வின் விளைவு அல்லது இருப்பதான கற்பிதமே என்ற புரிய புரிதலுக்கு இட்டுச் சென்றது. நம் மனத்திற்கு வெளியே சுதந்திரமான இருப்பு அதற்கில்லை என்பதையும் அறிந்தேன். அன்று முதல் யதார்த்தமும் புனைவும் ஒன்றோடொன்று பிணைந்துள்ளன என்றும் நமது கருத்தாக்கங்களும் கூட படைப்பாக்கத்திறனால் உருவாக்கப்பட்ட புனைவுகளே என்றும் அறிந்து கொள்ளலானேன். மெய்ப்பொருளியல், மதம், இலக்கியம் ஆகியவை ஒரு பொதுவான மூலாதாரத்தைக் கொண்டவை என்பதை நான் எப்போதுமே நம்பி வருகின்றேன்.



Share this Story:

Follow Webdunia tamil