பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தால் ஏற்படப்போகும் ஆபத்து - தொடர்ச்சி...
இப்பொழுது தமிழ்நாடு எவன் எவனுக்கோ அடிமைப்பட்டிருக்கிறது என்று சொன்னால், இந்த நிலைமை இன்னும் கடுமையாகும். அப்படியானால் எந்த வகையான ஆதிக்கமும் வேண்டாம். அனைத்து மக்களும் சமத்துவம், சமதர்மம் என்ற உணர்வோடுதான் இங்கிருக்கும் அரசியல், பொருளியல் முதலியவை உள்ளிட்ட எல்லா முயற்சிகளும் நடைபெற வேண்டும்.
ஆண் ஆதிக்கம் நிலவக்கூடிய காலம் முழுவதும் பெண் அடிமைத்தனம் தொடரும். ஆண் ஆதிக்கம் என்று சொல்லக் கூடிய இங்கிருக்கக்கூடிய பொருளியல் ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம், இராணுவ ஆதிக்கத்தினுடைய ஒரு பகுதியே அன்றி ஆண் ஆதிக்கம் என்று தனியாக எதுவுமில்லை. இவற்றையெல்லாம் உள்ளடக்கிதான் ஆதிக்க எதிர்ப்பு என்ற முறையில் பேச வேண்டியிருக்கிறது. அப்படியென்றால் இன்னொரு கேள்வி வரும், இந்தியாவுடன் நீங்கள் ஒத்திருக்கின்றீர்களா இல்லையா என்று? இந்திய தேசத்தில் இருந்து தமிழ்நாடு தன்னைப் பிரித்துக் கொள்வது என்கின்ற எண்ணத்துடன் நான் பேசவில்லை. இந்தியாவினுடைய அரசியலமைப்புச் சட்டம் என்று சொல்லக்கூடியது பெயரளவிற்கு கூட்டாட்சி முறை என்று சொல்லிக்கொண்டாலும் கூட உண்மையில் கூட்டாட்சி முறை அல்ல. அது யூனிட்டரி யூனியனாகத்தான் இருக்கிறது. அப்படியென்றால் இந்தியாவில் நிலவக்கூடியது மைய அரசு மட்டும்தான். மாநில அரசுகள் என்று சொல்லக்கூடியது மைய அரசின் துணை உறுப்புகளே அன்றி தனி அரசு அல்ல. State என்ற பெயர் பொய்யான வார்த்தை. இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிப் பிரதேசங்கள், மாநிலங்கள் என்று சொல்லக்கூடியவை இவற்றினுடைய இறையாண்மையை ஒப்புக்கொண்டு தமிழ்நாட்டினுடைய, கேராளவினுடைய, மகாராஷ்டிராவினுடைய, அஸ்ஸாமினுடைய இறையாண்மையெல்லாம் முழு அளவில் ஒப்புக்கொண்டு எல்லோருடைய சம்மதத்தின் அடிப்படையில் மைய அரசிற்கான சில அதிகாரங்களை மட்டும் விட்டுவிட்டு, பெரும்பாலான அதிகாரங்களை மாநிலங்கள் மேற்கொண்டு அமையக்கூடிய உண்மையான, சரியான கூட்டாட்சியில் நாம் நொந்துகொள்ளக்கூடிய அவசியம் இருக்காது. அப்படியானால் மொழிக்கு என்று தனி உரிமை என்று எங்கு வழங்கப்படும். இந்தியாவினுடையது ஹிந்திதான், ஆங்கிலம்தான் என்பது இல்லாமல், மைய அரசினுடைய நிர்வாக மொழியாக தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் இடம்பெறும். மாநிலங்களில் கவர்னர் என்று சொல்லக்கூடியவர்கள் வட இந்தியராகவோ, தமிழ் மொழி அல்லாத பிரதேசத்தில் இருந்து வரக்கூடிய அவசியம் இல்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்று சொல்லக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் நிர்வாகம் செய்யக்கூடிய தமிழ் மக்களாக இருக்கலாம். இப்படியெல்லாம் ஒரு அடிப்படையில் சரியான கூட்டாட்சி ஏற்படும்போது, அரசியல் ஆதிக்கத்திற்கு இடமில்லை, பொருளியில் ஆதிக்கத்திற்கு இடமில்லை. ஒட்டுமொத்தமான இந்தியா என்று சொல்லக்கூடிய இந்த கூட்டாட்சியில் உருவாகிற போது, நாடாளுமன்றத்தில் முதலாளிகள்தான் இருப்பார்கள் என்று சொல்லி உறுதிப்படுத்த வேண்டியதில்லை. பல்வேறு மக்களும் வந்து இடம்பெற முடியும். இதற்கான திட்டங்களை நாட்டின் மீது, மொழி மீது, மக்கள் மீது அக்கறை உள்ள அரசியல்வாதிகள் கூடி தீர்மானம் செய்ய வேண்டும். இந்திய அரசியல் சட்டம் அப்படியொன்றும் மோசமான சட்டம் அல்ல. ஆனாலும்கூட இந்த அரசியல் சட்டத்தில் ஒரு சில திருத்தங்கள் மட்டும் செய்து மாற்ற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இன்னொரு சட்டம் என்பது பற்றி இந்திய மக்கள், இந்தியாவில் இருக்கக்கூடிய அறிஞர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். பல நாடுகளில் பார்த்தீர்களென்றால், இரண்டாண்டு, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறைக்கு சட்டத்தை மற்றிக்கொள்கிறார்கள். இந்தியாவில் காலம் காலமாக ஒரே அரசியல் சட்டம். தேவையானத் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம், பெயரளவில் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம் என்பது கூட சரியான நெறியாகத் தோன்றவில்லை. இவற்றையெல்லாம் உள்ளடக்கிதான் ஆதிக்கம் எந்த வடிவத்திலும் வேண்டாம் என்று பேச வேண்டியிருக்கிறது.