Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழறிஞர் ஆ. கந்தையா – தமிழ்ப் பணியே மூச்சு!

தமிழறிஞர் ஆ. கந்தையா – தமிழ்ப் பணியே மூச்சு!
, செவ்வாய், 25 மார்ச் 2008 (16:39 IST)
webdunia photoWD
அரை நூற்றாண்டிற்கு முன்னர் ஒரு நாள் அதிகாலையில் சென்னையில் வாழ்ந்து வந்த தமிழறிஞர் மு. வரதராசனாரின் இல்லக் கதவு தட்டப்பட்டது. வந்து திறந்தார் மு.வ., வாயிலில் நின்ற அந்த இளைஞரை அவர் முன் பின் கண்டதில்லை.

யார் நீங்கள் என்றார். தனது பெயரைக் கூறிய அந்த இளைஞர், தமிழ் பட்டப்படிப்பில் சேர சென்னை வந்துள்ளதாகத் தெரிவித்தார். எங்கிருந்து? இலங்கையிலிருந்து என்று வந்தது பதில். தமிழைப் படித்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டவருக்கு, அந்த இளைஞர் தந்த பதிலில் தொனித்தத் தமிழார்வம், அவரின் கோரிக்கைக்கு இணங்கச் செய்தது.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படிக்க மு.வ. உதவினார். அன்று அந்த இளைஞருக்கு பாடம் கற்பித்த தமிழ்ப் பேராசிரியர் யார் தெரியுமா? இன்று தி.மு.க. மூத்த தலைவராகவும், தமிழக நிதி அமைச்சராகவும் உள்ள க. அன்பழகன்!

அந்த மாணவர் தமிழறிஞர் ஆ. கந்தையா. இளமையில் இருந்து முதுமை வரை தனது வாழ்வை தமிழோடு பிணைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

பள்ளி ஆசிரியராய், கல்லூரி பேராசிரியராய், தமிழ்த் துறைத் தலைவராய், தமிழ் மொழி ஆராய்ச்சியாளராய் நீண்ட நெடிய தமிழ்க் கல்விப் பணியாற்றிய ஆ. கந்தையாவிற்கு இன்று வயது 80. மொழிப்பற்றுடன் சமயப்பற்றும் அதிகம் கொண்ட கந்தையா, இந்து சமயத்தைப் பற்றி எழுதி வெளியிட்ட புத்தகம் 13 முறை பதிப்பிக்கப்பட்டதாகும்.

சமயம், இலக்கியம், கற்பித்தல், ஆய்வு நூல்கள், சிறுகதைகள் என்று இவர் எழுதிய 43 நூல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் சென்னை வந்திருந்த தமிழறிஞர் கந்தையாவை தமிழ்.வெப்துனியா.காம் பேட்டி கண்டது.

இ‌னி அவ‌ரிட‌ம்...

தற்பொழுது ஆஸ்ட்ரேலியாவில் வாழ்ந்து தமிழ்ப் பணி ஆற்றி வரும் தாங்கள் இலங்கையில் எங்கு வாழ்ந்தீர்கள்? பணியாற்றினீர்கள்?

இலங்கை திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தேன். அதன்பிறகு லண்டனில் உள்ள டிரண்ட் பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்கு திருமுருகாற்றுப்படை, பரிபாடல் ஆகியவற்றை சிறப்பாகக் கொண்டு சைவ சமயத்தின் பக்தி இலக்கியம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து கலாநிதி (முனைவர்) பட்டம் பெற்றேன்.

கலாநிதி பட்டம் பெற ஆய்வு செய்து கொண்டிருந்தபோதே லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பையும் அளித்தார்கள்.

அங்கிருந்து திரும்பி 1977ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை வந்து கெளேனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் தலைவராக சேர்ந்தேன்.

நான் லண்டனிலேயே பணியாற்றிக் கொண்டு வாழ்ந்திருக்கலாம். சொந்த நாட்டிற்குத் திரும்பி அங்கு வளமாக வாழலாம் என்று நினைத்து வந்தேன். ஆனால் சில ஆண்டுகளில் நிலைமை மாறியது.

நீங்கள் எந்த ஆண்டைக் குறிப்பிடுகிறீர்கள்?

webdunia
webdunia photoWD
1977ஆம் ஆண்டில் இருந்து 83ஆம் ஆண்டு வரை எவ்விதப் பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வந்தோம். எனது துணைவியார் ஒரு பரதநாட்டிய ஆசிரியை. இந்தச் சூழ்நிலையில்தான் இலங்கையில் இனப்பிரச்சினை ஏற்பட்டது.

எனக்கு இலங்கை அரசாங்கத்தில் நல்ல ஆதரவு இருந்தது. அதை உங்களுக்குக் கூறிட வேண்டும். கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு ஆணையத்தின் உறுப்பினராக இருந்தேன்.

தமிழ் இளைஞர்களை தமிழ் மொழியில் ஆசிரியர்களாக உருவாக்கி பணியில் அமர்த்தும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டிருந்தது.

அப்படிப்பட்ட நிலையில் இருந்தபோதுதான் இனப்பிரச்சினை எழுந்தது. வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லை. ஆனால் வேறு வழியும் இல்லை. வெளிநாடு செல்ல விண்ணப்பித்தோம். ஒரு மாதத்திலேயே எங்களுக்கு அனுமதி கிட்டியது. ஆஸ்ட்ரேலியா போய் சேர்ந்தோம்.

அங்கு என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனது துணைவியார் ஒரு நடனப் பள்ளியைத் துவக்கினார். அதில் கற்றுக் கொள்ள மாணவர்கள் வந்தனர். ஆனால் எனக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த நிலையில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது பல்வேறு மொழிப் படங்களை அதன் ஆங்கில சப் டைட்டிலுடன் ஒளிபரப்பியதைப் பார்த்தேன். இதேப்போல தமிழ்ப் படங்களையும் ஏன் ஒளிபரப்பக் கூடாது என்ற எண்ணம் எழுந்தது.

இதனை ஆஸ்ட்ரேலிய ஒளிபரப்பு துறைக்கு கொண்டு சென்றபோது, நீங்கள் ஒரு தமிழ் படத்திற்கு ஆங்கில சப் டைட்டிலை எழுதி கொடுங்கள் என்று பொறுப்பு கொடுத்தனர். முதல் முறையாக ஒரு தமிழ்ப் படம் (நாயகன்) ஆங்கில டைட்டிலுடன் ஒளிபரப்பப்பட்டது.

இதன்பிறகு நியூ செளத் வேல்ஸ் மாகாணத்தில் நூலகத்திற்குச் சென்றேன். எனது நூல்களை விற்பதற்காகத்தாக் அங்கு சென்றேன். நாங்கள் தமிழ் புத்தகங்களை வாங்குவதில்லை என்று கூறிவிட்டனர்.

மற்ற மொழி புத்தகங்களை வாங்குகின்றனர். ஆனால் தமிழ் புத்தகங்களை மட்டும் வாங்கவில்லை. தமிழ் புத்தகங்களை மட்டும் ஏன் வாங்குவதில்லை என்று கேட்டேன். அதற்கு இதுவரை யாரும் தமிழ் புத்தகங்களை கேட்கவில்லை என்று பதில் கூறினர்.

வீட்டிற்குத் திரும்பிய நான், ஆஸ்ட்ரேலிய அரசின் இன அலுவல்கள் ஆய்வுக் குழுவிற்கு ஒரு கடிதம் எழுதினேன்.

ஆஸ்ட்ரேலியா சென்று அங்கு தங்கியிருந்த குறுகிய காலத்தில் அந்த நாட்டில் எங்கெங்கு எவ்வளவுத் தமிழர்கள் வாழ்கின்றனர் என்ற கணக்கை எல்லாம் எடுத்து வைத்திருந்தேன். அதை எல்லாம் எனது கடிதத்தில் சுட்டிக் காட்டி தமிழ் புத்தகங்கள் இல்லாதது ஏன் என்று கேட்டிருந்தே

ஒரு மாதத்தில் தில் வந்தது. உங்களுடைய வேண்டுகோள் ஏற்கப்பட்டது என்றும், விரைவில் தமிழ் புத்தகங்கள் வாங்கப்படும் என்றும் அந்தத் துறை பதில் அளித்திருந்தது.

அதன்பிறகு தமிழ் புத்தகங்களை வாங்கத் துவங்கினார்கள். அவற்றை பட்டியலிடும் பொறுப்பையும் எனக்கு வழங்கினார்கள்.

அத்தோடு நான் நின்றுவிடவில்லை. சிட்னி பல்கலைக்கழகத்தில் ஏன் தமிழ் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று கடிதம் எழுதினேன். எனது கடிதத்தைக் கண்டு என்னை அழைத்தார்கள். தமிழ் கற்றுக் கொடுக்கும் பொறுப்பையும் அளித்தார்கள்.

தமிழ் வகுப்புத் துவக்கப்பட்டது. நன்கு நடைபெற்றது. இரண்டு பருபவங்கள் நடந்தன. தமிழர்கள் மட்டுமின்றி பல இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் தமிழ் கற்க வந்தனர். இதுபோன்று இன்னும் பல முயற்சிகளை மேற்கொண்டே‌ன். தமிழுக்காக என்னென்ன செய்ய முடியுமோ அதனை செய்துள்ளேன்.

ஆஸ்ட்ரேலியாவில் நூற்றுக்கும் அதிகமான இன மக்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. இது தெரியுமா உங்களுக்கு

தெரியாது

அங்கு ஆங்கிலம் ஆட்சி மொழி. அல்லாமல் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில்...

இருந்து வந்த மக்கள் அவர்களுடைய மொழியையே அங்கு பேசுகின்றனர்.

webdunia
webdunia photoWD
அங்கு குடிமக்கள் கணக்கெடுப்பின்போது, நீங்கள் வீட்டில் பேசும் மொழி என்ன என்று கேட்கப்படுகிறது. அதில் நீங்கள் ஆங்கிலம் என்று எழுதிவிட்டால் உங்களை தமிழர் பட்டியலில் சேர்க்க மாட்டார்கள். தமிழ் என்று எழுதினால் தான் தமிழர் என்று குறிப்பார்கள்.

இந்த கணக்கின் அடிப்படையில்தான் ஆஸ்ட்ரேயாவில் எவ்வளவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும். இது அங்கு வாழும் பல தமிழர்களுக்கு தெரியவில்லை.

இதனை அறிந்து கொண்ட நான் தமிழர்களிடம் வீட்டில் பேசும் மொழி தமிழ் என்று குறிப்பிடுங்கள் என்று கேட்டுக் கொள்ளும் ஒரு கைப்பிரதியை அச்சடித்து ஆஸ்ட்ரேலியாவில் இயங்கி வரும் தமிழர் அமைப்புகளுக்கு அனுப்பி வைத்து அதனை தமிழர்களிடம் சேர்க்குமாறு அறிவுறுத்தினேன்.

ஆஸ்ட்ரேலியாவில் எவ்வளவு தமிழர் அமைப்புகள் உள்ளன?

அது ஏராளமாக உள்ளது. ஆனாலும் அங்கு எவ்வளவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதனை குடிமை ஆய்வின் அடிப்படையில் கிடைத்த தகவலை வைத்து முதல் புத்தகத்தை நான்தான் வெளியிட்டேன்.

தமிழ் கம்யூனிட்டி இன் ஆஸ்ட்ரேலியா என்று அந்த புத்தகத்திற்குப் பெயர். இப்படிப்பட்ட முயற்சியை ஆஸ்ட்ரேலியாவில் வாழும் வேறு எந்த இனமும் மேற்கொள்ளவில்லை. இதையெல்லாம் எனது சொந்த செலவிலேயே செய்தேன்.

நீங்கள் இதுவரை எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை?

43 புத்தகங்கள்.

இந்த புத்தகங்களில் எல்லாம் எதை மையப்படுத்தி எழுதியுள்ளீர்கள்?

இலங்கையில் இருந்தபோது நோக்கு வேறாகவும், ஆஸ்ட்ரேலியா வந்த பிறகு அந்த நோக்கம் மாறுபட்டதாகவும் இருக்கும்.

இலங்கையில் இருந்தபோது எதை மையப்படுத்தி எழுதினீர்கள்?

இலங்கையில் இருந்தபோது இலக்கியச் சார்பு இருந்தது. அல்லது சமுதாயத்தைப் பற்றியதாக இருந்தது. லண்டனில் இருந்தபோது எனது அனுபவத்தின் தொகுப்பாக எனது மகனுக்கு எழுதிய கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு தந்தையின் பரிசு என்ற நூலை எழுதினேன். சென்னையில் படித்து முடித்தபோது மலரும் மணமும் என்ற புத்தகத்தை எழுதினேன். அது வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்தில் பாட நூலாக உள்ளது.

நான் மு.வ-வின் மாணவன். பேராசிரியர் அன்பழகனும் எனது ஆசிரியர்.

தமிழறிஞர் மு. வரதராசனாரை காணாத என் போன்றவர்களுக்கு இது மிக இனிப்பான செய்தி.

நான் கிராமத்தில் பிறந்தவன், கிராமத்திலேயே வளர்ந்தவன். படிப்பெல்லாம் அங்குதான். இலங்கையில் படித்துப் பட்டம் பெற்று பள்ளி ஆசிரியராக இருந்த நிலையில், அதனைத் துறந்துவிட்டு மேற்கொண்டு தமிழ் படிக்க தமிழகம் வந்தேன். முன்பின் தெரியாத இடம். நேராக மு.வ-வின் வீட்டைத் தேடிச் சென்றேன்.

இது எந்த ஆண்டு?

1955ஆம் ஆண்டு. அவருடைய வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினேன். கதவைத் திறந்து என்னைப் பார்த்தவர், "யார்?" என்று கேட்டார். "நான் ஒரு ஆசிரியர். தமிழ் படிப்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளேன்" என்று கூறினேன். "ஏனய்யா தமிழைப் படித்தாய்?" என்று மு.வ. கூறினார். "விஞ்ஞானம் படித்தால் வளமாக வாழலாமே. தமிழைப் படித்து என்ன செய்யப் போகிறாய்?" "தமிழை படிப்பது ஆர்வமாக இருந்ததால்தான் வந்துவிட்டேன்" என்று கூறினேன். அதன்பிறகு அவர்தான் என்னை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

அவருடைய வீட்டில் தங்கித்தான் பி.ஏ. தமிழ் (ஹானர்ஸ்) படித்தேன்.

நான் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பட்டப்படிப்புத் துவங்கியபோது முதல் ஆண்டில் ஆசிரியராக இருந்து எங்களுக்குக் கற்பித்தவர் பேராசிரியர் க. அன்பழகன். ஓராண்டுக்குப் பிறகுதான் அதாவது 1957ல் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முழு நேர அரசியலுக்குச் சென்றுவிட்டார்.

தமிழ்ப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். இலங்கைத் திரும்பி எனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்தேன்.

பிறகு இலங்கையில் முதுகலை பட்டம் பெற்று விரிவுரையாளரானேன். அதன்பிறகுதான் லண்டன் சென்றேன்.

ஆஸ்ட்ரேலியா சென்ற பிறகு தமிழ் சார்ந்த தாங்கள் செய்த மற்றப் பணிகள் என்ன?

ஆஸ்ட்ரேலியாவில் ஆதி குடியின மக்கள் இருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு உண்டு என்பது நான் அறிந்தது. ஆனால், அவர்களுக்கும், அங்கு வாழும் மற்ற இனத்தவருக்கும் ஒரு நெருங்கியத் தொடர்பு இல்லை. மற்ற இனத்தவருக்கும் அந்த ஆதிகுடியினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தக் கூடிய முயற்சிகளில் ஈடுபட்டேன்.

அவர்களிடையே வழங்கி வந்த இரண்டு கதைகளை தமிழில் மொழி பெயர்த்து புத்தகங்களாக வெளியிட்டேன்.

கங்காருவிற்கு வால் நீண்டது ஏன்? என்று ஒரு புத்தகம், கங்காரு தாவித்தாவி ஓடுவது ஏன்? என்று மற்றொரு புத்தகம் நான் வெளியிட்டேன்.

இப்படிப்பட்ட பணிகளால் அங்கு வாழும் இன மக்களிடையே நெருங்கிய ஒட்டுறவு ஏற்பட்டதா?

இல்லை. அப்படி ஏதும் ஏற்படவில்லை.

அந்த ஆதி குடியினர் பேசும் மொழி என்ன?

அவர்களிடையே 500 மொழிகள் பேசப்படுகிறது. சிலத் தனி மனிதர்கள் பேசக்கூடிய மொழியெல்லாம் அங்கு உண்டு. அதுதான் ஆச்சரியம்.

ஆனால், எல்லா மொழி, இனத்தவருக்கும் ஆஸ்ட்ரேலிய அரசு உதவிகளை செய்கிறது. உதாரணத்திற்கு எனக்கு பிறந்த நாட்டில் ஓய்வூதியம் இல்லை. ஆனால் ஆஸ்ட்ரேலிய அரசு எனக்கு ஓய்வூதியம் அளிக்கிறது. இப்படிப் பல உதவிகளை அந்நாட்டு அரசு அளிக்கிறது.

ஆஸ்ட்ரேலியாவில் வாழும் குறிப்பாக வெள்ளையின மக்கள் மற்ற மொழி, இனத்தவருடன் எப்படி பழகுகிறார்கள்?

வெள்ளையர் என்று சொன்னால் அங்கு ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய மொழிகள் பேசக்கூடியவர்கள் அனைவரும் அங்கு வெள்ளையர்கள்தான். முன்பு ஆஸ்ட்ரேலியப் பிரதமராக இருந்தவர் ஒரு ஐரீஷ்காரர். இப்பொழுது இருக்கும் ஹோவர்ட் ஆங்கிலேயர். இப்படிப்பலரும் வெள்ளையர்கள்தான் அங்கு.

அங்கு வாழும் இந்தியர்கள், இலங்கையில் இருந்து சென்றவர்கள் போன்ற கருப்பின மக்களிடம் அவர்கள் எப்படி பழகுகிறார்கள்?

அங்கும் இன வெறி இருக்கிறது என்று கூறுகிறார்கள், ஆனால் நான் கண்டவரை அவ்வாறு ஏதும் இல்லை. நன்றாகவேப் பழகுகிறார்கள்.

சிலர் தாங்கள் நடந்து கொள்ளும் முறையால் இப்படிப்பட்ட வேறுபாடுகளை ஏற்படுத்தக் கூடும்.

அவர்கள் முரட்டுத்தனமானவர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.

அப்படி இல்லை. மென்மையாகத்தான் பழகுகிறார்கள்.

எல்லா மக்களும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருகிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் உண்டு. ஆனால் ஒருவருடைய வாழ்க்கையில் மற்றொருவருடைய தலையீடு இருக்கக் கூடாது.

உதாரணத்திற்கு பொங்கல் பண்டிகை வந்தால் நாம் வீட்டிற்கு வெளியே அடுப்பை வைத்து பொங்கலிடுவோம். அங்கு அது கூடாது. வீட்டிற்குள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அடுத்த வீட்டுக்காரருக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது. தொந்தரவு இருந்தால் போலிஸ் வந்து விடும்.

அதேப்போல, மக்கள் வசிக்காத பகுதிகளில் தான் கோயில் போன்ற வழிபாடு தலங்கள் இருக்கும். நாமெல்லாம் கோயிலுக்கு அருகே தான் குடியிருந்து பழக்கம். ஆனால் அங்கு நிறைய மக்கள் வந்து செல்லும் இடங்கள் தனியாக இருக்கும்.

மற்ற இன மக்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக இப்படி தனித்து அமைத்து விடுகிறார்கள்.

இப்பொழுது என்ன காரணத்திற்காக சென்னை வந்துள்ளீர்கள்?

நான் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருவதுண்டு. இங்கு வந்து இரண்டு மூன்று மாதங்கள் தங்கி ஒரு புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிட்டு விட்டுச் செல்வேன்.

இப்படி பத்து ஆண்டுகளாக வந்து ஒவ்வொரு முறையும் ஒரு நூலை வெளியிட்டுவிட்டு செல்வேன். இந்த முறை ஆஸ்ட்ரேலிய தமிழர்களைப் பற்றிய இந்த புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளேன். தமிழக அமைச்சர் பொன்முடிதான் வெளியிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil