கவிஞர் கிருஷாங்கினி
நேர்காணல்: ஆர். முத்துக்குமார்
[சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணி ஆற்றி வருபவர் கிருஷாங்கினி. 1948 ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி இவர் பிறந்தார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்று இவரது இலக்கியக் களம் விஸ்தாரமானது. பெண் என்பதால் பெண்கள் உலகை மட்டும் கவிதை படைத்தவர் அல்லர். தான் எப்போதும் பெண்ணாகவோ, எப்போதும் எழுத்தாளராகவோ இருப்பதில்லை என்று கூறும் இவர் அமைதியானவர். ஆர்பாட்டங்கள் இல்லாதவர்.
இவரது இந்த ஆளுமை அவரது கவிதைகளிலும் வெளிப்படுகிறது. இவரது தாயார் ஒரு மூத்த பெண் கவிஞர். கணவர் ஒரு ஓவியர். சிறு வயது முதலே குடும்பத்தில் எப்போதும் இலக்கியமும் சங்கீதமும் சூழ்ந்திருக்கும் என்று கூறும் இவர், தனது 12-வது வயதில் ஆங்கில மகாகவி வில்லியம்ஸ் வேர்ட்ஸ்வொர்த்தால் கவிதை உலகிற்குள் தான் ஈர்க்கப்பட்டதாகக் கூறுகிறார். இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கவிதை, கதை என்பதோடு அல்லாமல் நாட்டிய சாஸ்திரத்திலும் இவருக்கு பாண்டித்தியம் உண்டு என்பதை வெளிப்படுத்தும் விதமாக `பரதம் புரிதல்' என்ற நாட்டியக் கட்டுரைகள் தொகுப்பையும், `தமிழில் பரத நாட்டியப் பாடல்கள்' என்ற ஒரு அரிய நூலை தொகுத்து வெளியிட்டுள்ளார். இவரை தமிழ்.வெப்துனியா.காம் இணையதளத்திற்காக சந்தித்தோம். இனி அவருடன்...]
ஒரு பெண்ணாக, கவிஞராக, இலக்கிய உலகிற்குள் நுழைய உங்களை தூண்டிய அறிவார்ந்த மற்றும் சொந்த விஷயங்கள்...
கிருஷாங்கினி: அப்பா முரட்டுக் கத்தி உடுத்தும் மென் உள்ளம் கொண்ட தொழிலதிபர். தாராபுரத்தில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்தார். 1940-களிலேயே அப்பாவின் கடையில் வியாபாரம் உச்சபட்சமாக ஓராயிரத்தை எட்டும். அப்பா எங்களை கண்டித்தோ, அடித்தோ, மிரட்டியதோ, விருப்பத்திற்கு எதிராகவோ ஏதும் செய்தது கிடையாது.
அம்மாவோ 1935ஆம் ஆண்டு முதல் பெண் கல்விக்கு முதன்மை அளித்து கற்றுக் கொடுப்பவர். தேசிய வாதி. எங்கள் கடையில் சுதந்திர தினத்திற்கு புது ஆடையும், போனசும் வழங்கப்படும். அம்மா எப்பவும் நூல் புடவையிலேயே எளிமையாக இருப்பார். 100 பவுனுக்கு மேல் நகைகள் இருந்ததாக அறிந்திருக்கிறோம். ஆனால் விசேஷ நாட்களில் கூட அம்மா நகை அணிந்து பார்த்ததில்லை. படி, உட்காரு, நில் என்று எந்தக் கட்டளையும் அம்மாவிடமிருந்து பிறக்காது. தானே ஆசைப்பட்டு படித்தால் மனதில் நிற்கும், மனப்பாடம் மதியைக் கெடுக்கும் என்பார். எல்லாமே உணர்ந்து படித்ததுதான். 40களில் பெரியப்பா சித்தப்பா வீடுகளில் காரும், குளிர்பதனப் பெட்டியும் இருக்கும். எங்கள் வீட்டில் ராட்டையும் சிட்டமும் இருக்கும்.
வீட்டில் கலைமகள் பத்திரிகையில் வரும் சிறுகதைகள், நாவல்கள் மதிக்கப்படும். மற்ற பத்திரிக்கைகள் மதிக்கப்படாது. என்னுடைய ஒன்பதாவது வயதில் எல்லாமே (சொத்து, பணம்) ஒரு சில நாளில் உறவினர் ஒருவரால் இல்லாமல் அடிக்கப்பட்டது. இருந்த வீடும் ஏலத்திற்கு வரும் நிலை. எனக்கோ ஒன்றும் புரியாமல் இருந்தது. பங்களாவில் வசித்தவர்கள் திடீரென ஓட்டு வீட்டில் வசித்ததால், ஓட்டு வீடு, அரிக்கேன் விளக்கு, விழும் தேள்கள், பெரிய பெரிய நிழல்கள், உதாசீனம் செய்த உறவினர்கள் ஆகியவை எல்லாம் ஏழ்மையின் அடையாளம் என்று மனதில் பதிந்தது. எளிய வாழ்க்கை வாழ்ந்து பழகியதால் துன்பமாக இல்லை. நிரந்தரப் பசி 7 குழந்தைகள் 2 பெரியவர்கள் உடல்களில் எப்போதும் தங்கி வாசம் செய்தது. அப்போது எழுதினேன் எனது வாழ்வின் கேள்வியை சிறுகதையாக.
வளர வளர வாழ்க்கையும், சிக்கல்களும் புரியத் துவங்கின. இன்னும் ஒரு பதிவு. சற்றே வளர்ந்து விட்ட நிலையில் ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் கதையை படித்தேன். எனக்கு ஏனோ மிகுந்த கோபம் வந்தது. பெண் மழையில் நனைகிறாள், காரில் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள். திரும்ப மழையில் நனைந்து இல்லம் வருகிறாள். அம்மா ஏற்றுக் கொண்டாள். ஆனால் அந்த மழையில் நனைந்த பெண்ணை ஏன் திரும்ப நீரூற்றி ஏற்றுக் கொள்ள வேண்டும்? அது கதை எழுதியவரின் ஏதோ ஒரு மூலையில் ஆக்ரமித்திருந்த உணர்வின் வெளிப்பாடே என்று மிகுந்த கோபம் வந்தது. பலரிடமும் இது பற்றிப் புலம்பினேன், ஆனால் அனைவரும் அது சரியே என்று வாதிட்டனர். ஏற்க முடியாததாகிப் போனது. எல்லோராலும் போற்றப்பட்ட சிறுகதை அது. ஓவர் கோட், குட் எர்த், கோரா, வனவாசம் (விபூதி பூவின் பந்தோபாத்யாயா) அன்னா கரீனா, பிரேம் சந் கதைகள், மௌனி என எல்லோரையும் பதின்ம வயதில் படித்தாயிற்று. ஜனரஞ்சக எழுத்து என்றுமே மனதிற்கு பிடித்தமானதாக இல்லாமல் இருந்தது. ஜனரஞ்சக இசை, ஜன ரஞ்சக நாட்டியம் என்று எதிலும் பிடித்தம் கிடையாது. அண்ணா கே.வி.ராமசாமி கவிஞர். அம்மாவும் கவிஞர். எனவே எனக்கு வேறு எதுவும் தெரியாது. அப்பாவையும் தாத்தாவையும் காப்பி அடிக்கும் சிறுவர்கள், அம்மா போல புடவை கட்டிக் கொண்டு சமையல் செய்யும் சிறுமிகள் போலவே எனக்கு பரிச்சயமானதும், தெரிந்ததும் எழுத்து மட்டுமே. ஆனால் இதுவே, எதையும் சாதிக்க இயலாத கழிவிரக்கமும், கையாலாகாத்தனமுமோ என்றும் அவ்வப்போது தோன்றுவதும் உண்டு.
உங்களது ஆரம்பகால சக பெண் படைப்பாளிகளையும், தற்கால பெண் படைப்பாளிகளையும் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்...
நான் எழுத ஆரம்பித்த போது பெண்கள் பலர் எழுதினார்கள் என்று சொல்ல முடியாது. சிலர்தான் இருந்தனர். அவர்கள் யாரும் நான் உட்பட பெண் கவிஞர்கள் என்று தன்னை அறிவித்துக் கொண்டதில்லை. அதுவேதான் ஒரு பெரிய மறைப்பையும் உண்டாக்கிற்று எனலாம். எழுத்தாளர் என்று ஒரு பட்டியல் இடும்போது- அது எப்பேர்பட்டவராயினும் சரி பெண் கவிஞர்களின் பெயர்களை தங்களுடன் இணைத்து இயல்பாகக் கூறியதில்லை. இப்போது கவிதைகளில் ஒரு சிலரை மட்டுமே திரும்பத்திரும்பக் குறிப்பிடுகிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் கூட கவிஞர்கள் என்ற பட்டியலில் பெண்கள் இல்லாமல் இருப்பதில்லை. அதுவே இன்னமும் சிறுகதை வரலாறு எழுதப்படும்போதோ, பேசப்படும்போதோ, அம்பை கூட, அவர்களின் 'மறதி' காரணமாக விடுபட்டு விடுகின்றனர்.
எனது அம்மா பூரணி 1929ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார். என் அண்ணனைப் பார்க்க வரும் பல எழுத்தாளர்களுக்கு அம்மா எழுதுவார் என்பதே தெரியாது. நகுலனுக்கு ஒரு முறை தெரியவர அவர் தன் கவிதை வாசிக்க வேண்டிய இடத்தில் பூரணியின் கவிதையை வாசித்து பாராட்டி, பின் சந்திக்கும் நபரிடம் எல்லாம் பகிர்ந்தும் கொண்டிருக்கிறார்கள். அதே நகுலன், தனது தங்கை திரிசடையை எத்தனை இடத்தில் பதிவு செய்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட நேர் காணலில் திரிசடையின் கவிதையை கவனிக்கவில்லையோ என்ற எண்ணம் கொள்வதாகப் பொருள் தரும் வகையில் பதிவு செய்துள்ளார் அவ்வளவே. திரிசடை தன்னுடைய புற்று நோயை வால்மீகியுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். புராண விஷயங்களுல் இன்றைய வாழ்வையும், மரணத்தையும் இணைத்து எழுதியிருக்கிறார்.
கோட்பாடுகள் அடிப்படையில் எழுதப்படும் கவிதைச் செயல்பாடுகளை உங்கள் பார்வைக்கு உட்படுத்தினால்...
கோட்பாடு என்ற ஒன்றை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி அதற்குக் கவிதைகள் என்பது எப்போதும் சாத்தியமில்லை. என்னைப்பொறுத்தவரை வாழ்வைப் போல இயல்பானதாய்தான் கோட்பாடுகளையும் காண முடியும். கோட்பாடுகள் திடமான பொருளாக இல்லாமல் நீர் போன்று எல்லாவற்றையும் வாழ்க்கையையும் உள்ளடக்கியதாகத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. நமக்கான அனுபவமும், பக்குவமும் சில நெருக்கடிகளும் கூட நம்மையும் கோட்பாடுகளையும் மாற்றி விடுகின்றன. எது ஸ்தூலம் என்று நம்பிக் கொண்டு பற்றிக் கொள்கிறோமோ அது வெறும் காற்றாக மாறிப் போகிறது. காற்று சில பொழுது பாறையாக மாறிவிடுகிறது. அடிப்படையாக உலகில் வாழும் உரிமை அனைவருக்குமானது. நம்மை இடையூறு செய்பவைகளை அழித்து விடுவது என்ற கொடூர மனப்பான்மையை எதிர்த்தே எனது கவிதைகள் என்று எண்ணுகிறேன்.
தமிழில் 'நவீனத்துவம்' என்று அழைக்கப்படும் மணிக்கொடி, எழுத்து ஆகிய சிறுபத்திரிக்கை இயக்கங்கள் வழி வந்த ஒரு தாக்கம் பெண் கவிஞர்களையும் பாதித்துள்ளதா?
இந்தக் கேள்விக்கு ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமாக ஒரு பெரிய "ஆமாம்" போடத்தான் வேண்டும். என்னை பாதித்த புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, நகுலன், லா.ச.ராமாமிர்தம், கு.ப.ராஜகோபாலன் ஆகியோர் எல்லோரையும் பாதித்திருக்கலாம் அல்லது 50 ஆண்டு காலத்திற்கு முன்பாக எழுதப்பட்ட ஏதோ ஒரு மொழியின் இலக்கியம் அவர்களது மனதில் இறங்கியிருக்கலாம். பிரெஞ்ச் நவீனத்துவம், லத்தீன் அமெரிக்க நவீனத்துவம் என ஏதோ ஒன்று...
கவிதைகள் பெருகும் அளவிற்கு கோட்பாடுகள் உருவாகாத தேக்க நிலை கவிதை இயக்கத்தை பாதிக்கும் என்று கருதுகிறீர்களா?
கவிதைத் தொகுதிகள் வெளிப்படும் எண்ணிக்கையைக் கொண்டு கலக்கப்படத் தேவையில்லை. அவை கவிதைகளா என்று பிரித்துப் பார்த்தால் பல காணாமல் போகும். மேலும் எல்லாரும் எப்போதும் நிற்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. உங்கள் மீது ஒரு அடுக்கு, அப்போது நீங்கள் மறைந்து விடுவீர்கள், அடுத்து அதன் மீது நான். என் மீது மற்றொன்று என்று எல்லாமே கனமான அடுக்குகளாக இருக்கிறது. வாழ்க்கையே பல அடுக்குகள் கொண்டது. உலகில் ஊடும் பாவுமாக எல்லா திசைகளிலுருந்தும் வாழ்க்கை பின்னப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. எனவே கலங்கிய பின் தானே தெளியும். தெளிந்து பின் தானே கலங்கும்.
பெண் உடல் பற்றி பேசும் கவிதைகளை முன்வைத்து எழுந்த சர்ச்சைகள் பற்றி...
பெண்ணின் உடல் மொழி பேசும் கவிதைகளை நாம் அதிகமாக ஆராதித்தோம் அல்லது மிக அதிகமாக எதிர்த்தோம். சில சமயம் தெளிவற்றும் கூட 'உடல் மொழி' ஒரே மொழியாக பேசப்படவில்லை. ஆண் உடல் எதிர்ப்பு, தன் உடல் கொண்டாடுதல், ஆணுக்கு தன்னை, தன் உடலை ஒப்படைக்கும்போது அது தனது தேவாக இருக்க வேண்டும் என்ற எண்ண வெளிப்பாடு, குடும்பத்தில் பெண் உடல் மதம் சார்ந்து போற்றப்படுதல், குடும்ப அமைப்புக்குள் பெண் உடல் சார்ந்த வன்முறை அழுத்தங்கள், மன அழுத்தத்தில் வெளிப்படும் உடல் பற்றிய வார்த்தைகள், என்று பலதளங்களிலும் வெளியிடப்பட்டு வந்தன. மிதமான சொற்களுடன் இதுவே கவிதையாகவும் வெளிவந்தன. பெண் உடல் மொழி கவிதையின் ஒரு சிறு திருப்பம். ஆனால் அதன் எதிரொலி மிக அதிகமாகி இவர்கள் மீது வெளிச்சமும், வசைகளும் பீரிட்டு அடிக்கப்பட்டன. இதனால்,
..
இதன் பக்க விளைவு, பின் விளைவாக பல ஆண்களும் இந்த நோக்கம் கொண்டு கவிதைகளை எழுதித் தள்ளினர். பல பெண்களும் தங்கள் கவிதைகளில் யோனியும் முலைகளும் இல்லாவிட்டால் பிரபலமாக மாட்டோமே என்ற அச்சம் கொண்டு கவிதையற்ற கவிதைகளை எழுதுகின்றனர். யோனி, முலை போன்ற சொற்களை ஏதோ தீட்டுப்போல் ஒதுக்கிச் செல்லும் பெண் கவிஞர்களும் ஏராளம். இந்த தேவையற்ற பரபரப்பால் இயல்பாக எழுதிக் கொண்டிருந்த கவிதைகள் சற்றே வலிந்து எழுதப்பட்டதாகவும் மாறியது.பெண் உடல் பற்றி இன்னமும் கூறப்படாத பல பொருட்கள் இன்னமும் அதிகம் உள்ளன. நிராகரிக்கப்பட்ட உடல்கள், உபயோகிக்கக் கூடாத உடல்களை உபயோகித்து எறிந்து விடுதல் போன்ற பல அடுக்குகள் இன்னமும் எழுதத் தேவையான பொருளில் எழுதப்படாமல் இருக்கின்றன. புற்று நோயால் முலைகள் வெட்டி எறியப்பட்ட பெண் உடல்கள் எப்படி நிராகரிக்கப்படுகின்றன. பூப்படையாமலே போய் விட்ட யோனிகள் பயனற்று ஏற்பாறற்று கிடக்கின்றன. திருமண பந்தத்திலோ ஈர்ப்பு மூலமாகவோ இவ்வுடல்கள் நிராகரிப்புக்கு ஆளாகின்றன. பிள்ளைப் பேற்றுக்குப் பின் தற்காலிகமாக ஆணுக்கு உபயோகமாகாமல் போகும் பெண் உடல் மீது அவனுக்கு எழும் கோபம் உறவையே கேள்விக்குறியாக்குகிறது.பிறச் சோர்வுடன் ஆணின் எரிச்சலையும் எதிர் கொண்டு, எதிர்க்கத் திராணியற்ற உடல்கள் இருக்கின்றன. மாதவிடாய் நிற்கும் சமயமும், நின்ற பின்பும், அவ்வுடல்கள் சுகம் தர தகுதியற்றவை என்ற பதிவில் தனது இச்சையை தீர்த்துக் கொள்ள வேறு உடல்களையும் தேடிச் சென்றும், இவ்வுடலை நிராகரித்து அவமானப்பட்டு நிற்கும் பெண் உடல்கள் நம்மை சுற்றி ஏராளம் மிதக்கின்றன.கழிப்பறை போல பெண் உடல்களை உபயோகித்து வெளியேறுதலும் நம்மைச் சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பூப்புக்கு முன்னதாக சிறுபெண்ணை உபயோகித்தல், சற்றே இளம் வயதில் எதிர்ப்படும் பெண்களை, முன் சொன்ன வயோதிக ஆண்கள் உபயோகப்படுத்துதல், மன நிலை பிறழ்ந்த பெண்ணும் உடலாகப் பார்க்கப்படுதல் போன்ற செயல்கள் நிக்ழ்கின்றன. மன நிலை குன்றிய பெண்ணை ஒரு வளர்ந்த பெண்ணின் உடலாகக் கருதி உபயோகித்து எறிதல் என்ற கொடுமை வேதனை தருவதாகும். இது போன்ற செயல்களுக்குப் பிறகும் எப்போதும் போலவே உலவி வரும் பெண் உடல்கள் என ஏராளமான கருத்துக்கள் இன்னமும் பதிவு செய்ய வேண்டித்தான் இருக்கிறது. தொடர்ந்து ஒரே நாளில் பல முறை உபயோகிக்கப்படும் பெண்ணின் உடல், அதனால் ஏற்படும் நோய்கள் என்று அதிகம் எழுத வேண்டியது இருக்கிறது.சங்க இலக்கிய மரபு பெண் கவிதை இயக்கத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதா...
சங்க காலத் தாக்கம் தற்காலக் கவிதைகளில் இருக்கிறது என்று என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அப்போதிருந்த சொற்கள், தமிழ் எழுத்துக்கள் இப்போதும் உபயோகம் ஆகிறது என்பது மட்டும்தான். சொற்கள் கூட இப்போது பயன்பாடற்று போயிற்று. அவ்வையின் தூது போர் பற்றியதாக இருந்தது. பலரின் தூது, தோழியிடம் புலம்பல் இப்போது அர்த்தமற்றவை. 30 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பதிவுகளையே நாம் மறு பரிசீலனைக்கு உட்படுத்துகிறோம். இவை அந்தந்த காலகட்டத்திய வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள வேண்டுமானால் உபயோகம் ஆகலாம். அதே வழியில் பின்
தொடர்கிறோமா என்று எனக்குத் தெரியவில்லை.
தீவிர அரசியல் செயல்பாடுகள் அல்லது இன்று உலகை பொதுவாக எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் பற்றி தற்கால தமிழ் பெண் எழுத்தாளர்களுக்கு பிரச்சனைகள் இருக்கிறதா? தங்கள் சுயம், தங்கள் உடல், தங்கள் கவலை என்று இருப்பதாகக் கூறப்படுவதை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள்?
இந்தக் கேள்வியை ஆண்களை நோக்கியும் கேட்கலாம். அரசியல், நடைமுறைச் சிக்கல்கள், நடைபெறும் வன்முறைகள், எதைப்பற்றியும் அக்கறையற்று, தன் உணர்வு, ஏதோ ஒரு இஸம் என்று எழுதிக் கொண்டிருப்பவர்கள் பலர். எதிர்கொள்ளும் எல்லா பொருட்களையும் பற்றி கவிதையோ கட்டுரையோ எழுதித்தான் தீர வேண்டும் என்று எந்த விதக் கட்டாயமும் இல்லை. பசியை பற்றி எழுதாத ஆண்கள் பலரை குறிப்பிட முடியும். பக்கத்தில் நடைபெறும் வன்முறை பற்றி அறியாத பலரும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பிரச்சனைகளுக்கு எதிர்வினையாற்றுவது அநாகரீகம் என்ற கவிஞர்கள் இருபாலாரும் இருக்கின்றனர். பிரச்சனைகள் பற்றி எழுதாவிட்டால்? என்று எல்லாவற்றிற்கும் எதிர்வினை ஆற்றி பிரச்சாரம் செய்யும் மக்களும் இருக்கின்றனர்.