கியூபாவை இன்றுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாத்தியத்திடம் இருந்து தனது தேசத்தை கட்டிக்காப்பாற்றி வந்த பெருமை கியூபாவின் புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோவையே சாரும்.
சே குவேரா உள்ளிட்ட பல தென் அமெரிக்கா நாடுகளின் இடதுசாரி தலைவர்களையும் அமெரிக்கா மற்றும் அதன் உளவு அமைப்பான சிஐஏ-வும் படுகொலை செய்து தனது ஏகாதிபத்திய வெறியை தீர்த்துக்கொண்டுள்ளது.
ஆனால், அவர்களால், எத்தனையோ சதிகளுக்கு மத்தியிலும் கியூபாவை தனது கொடிய அணு குண்டுகளாலோ, போர் பயங்கரவாதத்தாலோ அதன் நிழலைக்கூட அசைத்துக்கூட பார்க்க முடியாததற்கு ஒரே காரணம், அந்த தேசத்தின் நாயகன், மக்களின் ஆதர்ஷமாகவும், ஒரே மந்திரமாகவும் இன்றளவும் திகழ்ந்து வரும் ஃபிடல் காஸ்ட்ரோதான்.
அமெரிக்கா இதுவரையில் 634 முறை ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல செய்ய முயற்சி செய்யதுள்ளது. அவருக்கு பிடித்தமான சுருட்டு, மருந்து மாத்திரைகள், உணவுப்பொருட்கள், ஏன், அவரின் தாடியின் ரோமத்தை கொட்டவைக்கக்கூட முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களால், ஒரு ரோமத்தை உதிரவைக்க முடியவில்லை.
1926ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் தேதி கியூபாவின் கரும்புத் தோட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ பிறந்தார். 1941இல் தனது 15ஆவது வயதில், ஃபிடல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது.
காஸ்ட்ரோ சிறு வயதில் ஒரு தீவிர கத்தோலிக்கர். ஆனால் பிறகு அவர் ஒரு நாத்திகராக மாறிவிட்டார். 1945ஆம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார். ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது.
காஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும். 1945ஆம் ஆண்டு ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகுதான், அரசியலால் ஈர்க்கப்பட்டு, கல்லூரி அரசியலிலும் பங்கு கொண்டார்.
மேலும் அடுத்தப் பக்கம்...
அப்போது, கல்லூரியில் இரண்டு முக்கிய கட்சிகள் இயங்கி கொண்டிருந்தன. ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஹொசே மார்த்தியின் ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். 1952ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாள் பாடிஸ்டா கியூச அரசின் அரியணை ஏறினார்.
பாடிஸ்டா அரசில் அடக்குமுறைகளும், ஊழல்களும் நிறைந்திருந்தன. அதே வேளையில், தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் பிணியிலும், வறுமையில் உழண்டனர். இதனிடையே ஃபிடல் கல்லூரி மாணவர் தேர்தலில் வெற்றி கண்டார். பின்னர், பாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சியில் தோல்வியடைய அவரை ராணுவத்தினர் கைது செய்தனர்.
அப்போது, நீதிமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதுவே, பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்ற பெயரில் வெளிவந்தது.
”நீங்கள் என்னை தண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்” என்றார். பின்னர், 1955ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர், கொரில்லா பானியிலான தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். அப்போது அவருடன் வந்து சேர்ந்தவர்தான் அர்ஜெண்டைனாவை சேர்ந்த எர்னஸ்டோ சே குவேரா. இருவரும் இணைந்து பாடிஸ்டா அரசுக்கு எதிரான கொரில்லா போருக்கு தலைமை தாங்கினர்.
1953ஆம் ஆண்டு முதல் 1959 ஜனவரி முதல் தேதி வரை சுமார் ஐந்தரை ஆண்டுகள் இருவரும் பல தாக்குதலுக்குப் பிறகு, பனி, மழை என பொருட்படுத்தாது, குளிரிலும் வெயிலிலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக போராடினர். ஆயுதப்போரட்டத்தின் மூலம் கியூப புரட்சியை முன்னெடுத்துச் சென்றனர்.
சே குவேரா, ”லத்தீன் அமெரிக்காவின் எங்களுடைய இந்த புரட்சி அனைத்து அமெரிக்க உடைமைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நாங்கள் இந்த நாடுகளுக்கு சொல்கிறோம், இங்கே எங்களின் சொந்த புரட்சியை உருவாக்குகிறோம்” என்று முழங்கினார்.
1959ஆம் ஆண்டுக்கு பிறகு கியூபா தன்னை கம்யூனிஸ நாடாக அறிவித்துக்கொண்டது. தனது நாடு ஒருபோதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து போகாது என்று அறிவித்தார். தனது நாட்டின் செல்வ வளங்கள் அனைத்து கியூப மக்களுக்கே என்றார்.
1960ஆம் ஆண்டு, ஐநா மாமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. 4 மணி 29 நிமிடம் கொண்ட இந்த மிக நீண்ட உரையாகும். அதற்கும் மேலாக, 1986 ஆம் வருடம், ஹவானாவில் நடந்த கம்யுனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் அவர் பேசிய நேரம், 7 மணி நேரம், 10 நிமிடங்கள் ஆகும். கிட்டத்தட்ட இரண்டு கின்னஸ் சாதனையாகும்!
இந்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகள், கியூபாவை பணிய வைக்க முயற்சிகள் பலிக்கவில்லை. இதனால், கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நாடு என்ற முத்திரையையும் அபாண்டமாக சுமத்தியது. ஆனாலும், ஃபிடல் காஸ்ட்ரோ அசரவில்லை.
பனாமாவில் நடைபெற்ற மாநாட்டுக்காக கலந்துகொள்ள சென்றபோது, 50 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தற்போதைய கியூப அதிபர் ரால் காஸ்ட்ரோவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சந்தித்துக் கொண்டனர்.
1959 ஆம் ஆண்டிற்குப் பிறகு கியூப அதிபரும் அமெரிக்க அதிபரும் சந்தித்துக் கொள்வது இதுவே முதன் முறையாகும். கடைசியாக, கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ, 1959 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க துணை அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சனும் சந்தித்து பேசியதுதான் கடைசி தடவையாகும்.
இத்தனை பெருமைகளுக்கும், கியூப மக்களின், உலக மக்களின் உரிமைகளுக்கும் பேசிய, எழுதிய, போராடிய, வாழ்ந்த மகத்தான தோழர் ஃபிடல் காஸ்ட்ரோவின் பிறந்த நாளை [13-08-15] இன்று நினைவில் ஏந்துவோம்.
”உலகத்தில் எந்த மூலையிலும், சுரண்டப்படுபவர்கள் நமது தேசாபிமானிகளே, சுரண்டுபவர்கள் நமது எதிரிகள்… உண்மையில் உலகமே நமது நாடு, உலகம் முழுவதும் உள்ள புரட்சியாளர்கள் நமது சகோதரர்கள்” என்ற அவரின் வார்த்தைகளை கொண்டாடுவோம்..