பழ.கருப்பையா மீதான தாக்குதல் - ஜெயலலிதா, கருணாநிதி யார் நியாயவாதி?
பழ.கருப்பையா மீதான தாக்குதல் - ஜெயலலிதா, கருணாநிதி யார் நியாயவாதி?
துறைமுகம் சட்டமன்ற உறுப்பினரும், எழுத்தாளரும், பேச்சாளருமான பழ. கருப்பையா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்தது. இதனையடுத்து தனது துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
அது தவிர, அதிமுக மீதான தனது அதிர்ப்தியையும், அதிமுக அரசு ஊழல் மற்றும் கொள்ளைகளில் மூழ்கியுள்ளதாகவும், இன்னும் பல குற்றச்சாட்டுகளையும் தெரிவித்திருந்தார். மேலும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சேர்ந்துகொண்டு நாட்டை சூறையாடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவில் ஆளுங்கட்சியினரால் அவரது வீடு மீதும் கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இடதுசாரிகள் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருந்த அறிக்கையில், “இப்படிப்பட்ட வன்முறையும், அநாகரீகமும் கலந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா, கடும் புலி இருக்கும் காட்டில் வாழ்கிறோமா, காவல்துறை என்னதான் செய்கிறது, கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா, தனி மனிதச்சுதந்திரத்தின் மீது ஏன் இந்தப் பாய்ச்சல் என்ற கேள்விகள் தான் எழுகின்றன.
ஆளுங்கட்சிக்கு எதிராகவோ அல்லது ஆளுங்கட்சியைப் பற்றி பேசினாலோ, எழுதினாலோ அவர்களைத் தாக்குவது, அவதூறு வழக்குகளைப் போடுவது என்ற பாணியில் அரசியல் நடப்பது பொது அமைதிக்குப் பெரும் கேடு விளைவிப்பதாகும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், அதே கருணாநிதி கால ஆட்சியில், அதாவது 2006 - 2011 ஆம் ஆண்டுவரையில் திமுக ஆட்சியிலிருந்தபோது, கோவையில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு பற்றிய பழ.கருப்பையா சில விமர்சனங்களை முன்வைத்தார். செம்மொழி மாநாடு விழா, கருணாநிதி குடும்பவிழா போல நடைபெறுகிறது என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இதனை தாங்கிக்கொள்ள முடியாத இதே திமுகதான், இப்போது தாக்கப்பட்டது போலவே அப்போதும் அவரது வீட்டினையும், ஏன் அவரையும்கூட தாக்கினர். இதில், அவரது உடலிலும், முகத்திலும் காயம் ஏற்படும் அளவிற்குச் சென்றது. அப்போது திமுக தலைவர் கருணாநிதி வாய்மூடி மௌனியாக இருந்தார்.
அப்பொழுது, அதிமுக பொதுச்செயலாளரரும், முதல்வருமான ஜெயலலிதா பழ. கருப்பையாவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையில் “ஓர் அரசினுடைய குறைபாடுகளை மக்களிடம் எடுத்துச்சொல்வதற்கும், அந்தக் குறைபாடுகளை மக்கள் தெரிந்து கொள்வதற்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில்தான் பழ.கருப்பையா தனது கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்”.
இப்போதோ, அரசின் குறைபாடை எடுத்துரைத்த காரணத்திற்காக அதிமுகவினரால் பழ.கருப்பையாவின் வீடு தாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அதிமுக ஆட்சியிலும், முந்தைய திமுக ஆட்சியிலும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் நடந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன.
எதிர்க் கட்சியாக இருந்தால் ஜனநாயகம் பற்றியும், கருத்துரிமை பற்றியும் பக்கம் பக்கமாக எழுதுவதும், ஆளும் கட்சியாக இருக்கும்போது கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதுமான வேலையைத்தான் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி செய்து வந்திருக்கின்றன.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அண்ணா கூறிய வார்த்தை அண்ணா காலத்தோடே காலவதியாகிப் போனதுதான் தமிழக அரசியலில் காலத்தின் கொடுமை.