ஜல்லிகட்டிற்கு ஆதரவாக தமிழகமெங்கும் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2014ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறக்கூடாது என பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றது. அதன் பின் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
ஆனால் இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற முழக்கத்தை இளைஞர்கள் கையில் எடுத்தனர். அதன் விளைவாக சில இளைஞர்கள், ஜல்லிக்கட்டிற்கு பெயர் போன மதுரை அலங்காநல்லூருக்கு சென்று போராட்டத்தில் குதித்தனர். அதன் பின், அவர்களோடு பல இளைஞர்கள் கை கோர்த்தனர். தங்கள் ஊருக்கு வந்து தங்களுக்காக போராடும் இளைஞர்களை கண்ட அந்த ஊர் மக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். 30க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
அதன்பின் அந்த போராட்டம் தீவிரம் அடைந்தது. கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக சென்னையில் பணிபுரியும் இளைஞர்கள் மெரினா கடற்கரையில் கூடி போராட்டம் நடத்தினர். அவர்களோடு கல்லூரி மாணவர்களும் கை கோர்க்க தொடங்கியதும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மெரினாவி குவிய, மெரினாவில் கூட்டம் அதிகரித்தது. நேற்று மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர்.
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற முழக்கத்தோடு திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர். ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் குதித்தனர்.
இவர்களை கட்டுப்படத்த முடியாமல் போலீசார் திணறி வந்தனர். அதன்பின் மக்களின் கூட்டத்தையும் ஆதரவையும் கண்ட அவர்கள், தாங்களும் ஆதரவு தெரிவிப்பது போல் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகமெங்கும் மொத்தம் 500க்கும் மேற்பட்ட இடங்களில், மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஒரு பிரச்சனையை முன்னிறுத்தி நடைபெறும் போராட்டத்தில் இவ்வளவு பேர் பங்கேற்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.