ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசர வட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் எந்த வழக்கும் தான் தொடரவில்லை என பாஜக எம்.பி.மேனகா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 15ம் தேதி முதல் போராட்டத்தை துவக்கினர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், போராட்டக்காரர்கள் அதை ஏற்க மறுத்து, தங்களுக்கு நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும் எனக்கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது அந்த போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது.
இந்நிலையில், ஆனால் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருக்கும் மேனகா காந்தி ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து இருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது.
அவசர சட்டம் விரைவில் நிரந்தரமாக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதி அளித்திருக்கும் வேளையில், மேனகா காந்தி வழக்கு தொடர்ந்துள்ளார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தான் அப்படி எந்த வழக்கும் தொடரவில்லை என மேனகா காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.