Publish Date: Mon, 23 Jan 2017 (11:27 IST)
Updated Date: Mon, 23 Jan 2017 (11:38 IST)
சென்னை மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டம் நடத்தி வந்த இளைஞர்களை வெளியேற்றும் முயற்சியில், போலீசார் மீது இளைஞர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஒரு இன்ஸ்பெக்டரின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது.
ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு கடந்த சனிக்கிழமை, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், நிரந்தர சட்டத்தை இயற்றும் வரை போராட்டம் நீடிக்கும் என போராட்டக்காரர்கள் அறிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அதிகாலை முதல் சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வெளியேற மறுத்துவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். கோவையில் போராட்டக்காரர்களை கைது செய்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில், போராட்டத்தை கைவிட மறுத்த இளைஞர்கள் தொடர்ந்து கடலின் அருகில் சென்று மனித சங்கிலி அமைத்து போராடி வருகின்றனர். இந்நிலையில், திருவல்லிக்கேனி பகுதியை சேர்ந்த பலர் மெரினாவிற்கு வர முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து, அங்கிருந்து அனுப்பினர். இதில் கோபமடைந்த அவர்கள் மீது போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒரு இன்ஸ்பெக்டரின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. மேலும், 5க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர்.