கடந்த வாரத்தில் நடைபெற்ற விழாக்கால விற்பனையில் ஜியோமி நிறுவனம் 53 லட்சம் மொபைல்களை விற்று சாதனை படைத்துள்ளது.
சீனாவை சேர்ந்த ஜியோமி நிறுவனம் இந்தியாவில் மொபைல் விற்பனையில் முக்கிய நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த மொபைல்களின் வேகமான இயக்கமும், கேமரா திறனும், குறைவான விலையும் பலர் இந்த மொபைல்களை விரும்பி வாங்க காரணமாக இருக்கிறது.
கடந்த வாரம் ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற பிரபல ஆன்லைன் நிறுவனங்கள் விழாக்கால தள்ளுபடி விற்பனையை தொடங்கின. அப்போது ஜியோமி நிறுவனம் தனது முந்தைய மாடல் மொபைல்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியை வாரி வழங்கியது. மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களுக்கு 10 சதவீதம் கழிவு மற்றும் வட்டியில்லா தவணை ஆகியவற்றையும் வழங்கியது,.
ஜியோமியின் புதிய ரக மொபைல்களை வாங்க அதன் அதிகாரப்பூர்வ தளத்திலும் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இதனால் விழாக்கால விற்பனையில் ஜியோமி நிறுவனம் 53 லட்சம் மொபைல்களை இந்தியாவில் மட்டும் விற்றிருக்கிறது. அதேபோல் விழாக்கால விற்பனையில் மற்ற அனைத்து எலக்ட்ரானிக் பொருட்கள், உடைகளை விடவும் அதிகளவில் மொபைல் போன்கள் விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.