வேண்டுமென்றே தங்கள் ரிங்கிங் கால அளவைக் குறைத்து ஜியோ மோசடி செய்வதாக ஏர்டெல் புகாரளித்துள்ளது.
நாம் நமது அலைபேசியில் இருந்து வேறொரு நபருக்கு அழைக்கும் போது, அவர் அந்த அழைப்பை ஏற்க நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கால அளவு ரிங்கிங் டைம் என அழைக்கப்படுகிறது. அந்த நேரத்திற்குள் எதிர் முனையில் உள்ளவர்கள் அந்த அழைப்பை ஏற்காவிட்டால் அழைப்பு நிறுத்தப்படும். இந்தியாவில் இந்த ரிங்கிங் டைம் 45 வினாடிகளாகும். ஆனால் ஜியோ இந்த ரிங்கிங் நேரத்தை 20 வினாடிகளாகக் குறைத்து மோசடி செய்வதாக ஏர்டெல் நிறுவனம் புகார் அளித்துள்ளது.
நேரத்தைக் குறைப்பதன் மூலம் எப்படி ஜியோ லாபம் பெறுகிறது என்றால் ஒரு எளிய உதாரணம். நாம் ஏர்டெல்லில் இருந்து ஜியோ சேவையைப் பயன்படுத்தும் ஒரு நபருக்கு அலைபேசியில் அழைக்கிறோம் என்றால் வழக்கமாக ரிங்கிங் டைம் 45 நொடிகளுக்குப் பதில் 20 நொடிகளே அடித்து விட்டு கால் கட் ஆகி மிஸ்டு கால் ஆகும் வண்ணம் ஜியோ தனது கால அளவை மாற்றியுள்ளது. இதனால் உங்களது மிஸ்டு காலைப்பார்த்த எதிர்முனையி இருப்பவர் அந்த மிஸ்ட் காலைப் பார்த்த அந்த ஜியோ வாடிக்கையாளர் திரும்பி அழைப்பார். இதனால் ஏர்டெல் உபயோகிக்கும் நபர் மேற்கொள்ள இருந்த அவுட்கோயிங் கால் இன்கம்மிங் காலாக மாறுகிறது. டிராய் விதிப்படி இன்கம்மிங் கால் வரும் நெட்வொர்க், அழைப்பை விடுத்த நிறுவனத்துக்கு ஐயுசி கட்டணமாக 6 பைசா தரவேண்டும். இதனால் ஜியோ ஒவ்வொரு காலுக்கும் 6 பைசாவைப் பெறுகிறது. இப்படி ரிங்கிங் டைம்மைக் குறைத்து ஜியோ தனது இன்கம்மிங் கால்களில் 25% கால்களை அவுட்கோயிங் கால்களாக மாற்றுவதாக ஏர்டெல் புகார் அளித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஜியோ மறுத்துள்ளது.