முஸ்லிம்களின் காலண்டரில் வரும் 9வது மாதமே ரமலான் மாதமாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் முஸ்லிம்கள் நோன்பை கடைபிடிக்கின்றனர். ஆனால் காலண்டரில் 9வது மாதம் துவங்கிவிட்டால் மட்டும் ரமலான் மாத நோன்பை முஸ்லிம்கள் துவக்குவதில்லை.
எந்த நாளில் பிறை தெரிகிறதோ அதில் இருந்துதான் நோன்பு துவங்குவதாக அறிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு வகையாக நோன்பு துவக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
இஸ்லாம் என்பது பல்வேறு நாடுகளில் பரவி இருந்தாலும் செளதி அரேபியாவில்தான் துவங்கியதாகக் கூறப்படுகிறது. ஒரு சில நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் செளதி அரேபியாவில் பிறை தெரிந்ததும் அன்றில் இருந்து நோன்பைத் துவக்குகின்றனர்.
செய்திகளிலும், அவர்களது மசூதிகளில் அறிவிக்கும் நாட்களில் நோன்பை துவக்குபவர்களும் உள்ளனர்.
ஒரு சில நாட்டவர், அவரவர் நாடுகளில் பிறை தென்பட்டதில் இருந்துதான் நோன்பை துவக்குகின்றனர்.
வேறு சில இடங்களில் (பிறையைக் கொண்டு கணக்கிட இயலாத நாடுகளில்) அவர்களது காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் இருந்தே நோன்பை கடைபிடிக்கத் துவங்கி மாதம் முடியும் நாளன்று நோன்பை முடிக்கின்றனர்.
இன்னும் சிலரோ பிறையையும் விட்டுவிட்டு, காலண்டரையும் விட்டு, கிரகங்களை கணித்து அதன்படி ரமலான் நோன்பை துவக்குகின்றனர்.
இதனால் ரம்ஜான் கொண்டாட்டம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளில் கொண்டாடப்படும்படியாக ஆகிவிடுகிறது.
ஒரு சில நாடுகளில் ரம்ஜான் கொண்டாட்டம் 4 அல்லது 5 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது.