இஸ்லாமியர்களின் குறிப்பிடத்தக்க பண்டிகைகளில் முகரம் பண்டிகையும் ஒன்று.
பள்ளி, கல்லூரிகள், வங்கிகளுக்கு இந்த நாளில் விடுமுறை என்பதோடு அப்பண்டிகை குறித்த உண்மையான தகவல்களை அறிந்து கொள்வது அவசியம் அல்லவா?
முகரம் பண்டிகையின் போது
ஊர்வலங்கள் நடத்தப்படுவது ஏன்?
தற்போதைய ஈராக் நாட்டில் அடங்கிய கர்பாலா என்ற இடத்தில் நபிகள் நாயகம் முகமதுவின் பேரனான இமாம் ஹூசேன் (ரஜி அன்) மற்றும் அவரின் குடும்பத்தினர் இஸ்லாமிய மத கட்டளையைப் பாதுகாக்கும் பொருட்டு தங்களின் இன்னுயிரை ஈந்து தியாகம் புரிந்த நாளே முகரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், கொள்கைக்காக மடிந்த இமாம் மற்றும் அவரது குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் முகரம் தினத்தன்று ஊர்வலங்களை நடத்துகிறார்கள்.
இமாம் காட்டிய மனிதநேய வழியில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதுவே முகரம் பண்டிகையின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கொண்ட கொள்கைக்காக தங்களின் சொந்த வாழ்க்கையை இழந்த அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியாக ஈராக்கில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், தஜியாஸ் எனப்படும் காகிதங்கள் மற்றும் சில பொருட்களால் செய்யப்பட்ட சாட்டைகளையும், சிறுகத்தி போன்ற ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு ஊர்வலமாகச் செல்வார்கள்.
ஊர்வலத்தில் வருவோர் தங்களுக்குத் தாங்களே சாட்டையால் அடித்துக் கொள்வதும், சிறுபிளேடு போன்றவற்றால் உடலில் கீறிக் கொள்வதும் வாடிக்கை.
இந்தியாவைப் பொருத்தவரை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் முகரம் ஊர்வலம் வெகுவிமரிசையாக நடைபெறும். தமிழகம் உள்ளிட்ட தென்பகுதிகளில் புலிகள் போன்று உடலில் பெயிண்ட்-களை வரிவரியாகப் பூசிக்கொண்டு ஊர்வலத்தினர் நடனமாடி வருவார்கள். புலிகள் போன்று முகமூடிகளையும் அணிந்து கொண்டு ஊர்வலத்தில் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
முகரம் என்பது இஸ்லாமிய மதத்திற்காக உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை செய்யும் நாள்.