உழைப்புக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். அதனால் உழைக்க அஞ்சக்கூடாது என்று சூஃபி ஞானி அறிவுரை வழங்குவார்.
அவரது அறிவுரையைக் கேட்பவர்கள், அவரவர் மனப்பக்குவத்திற்கேற்றபடி அந்த அறிவுரையை எடுத்துக் கொண்டார்கள். ஆனால், பொதுவாகவே உழைப்பின் பரிமாணத்தையும், அதற்குக் கிடைக்கக் கூடிய பலன் மதிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து, தம் உழைப்புக்கு சமமானதாக அந்தப் பலன் இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார்கள்.
குறிப்பிட்ட சில இளைஞர்கள், எதற்காக உழைப்பானேன், பலனே இல்லை என்று வருந்துவானேன் என்று கூட சிந்திக்க ஆரம்பித்தார்கள்.
அதுபோன்ற எண்ணம் கொண்ட இளைஞர்களை அடையாளம் கண்டு கொண்ட சூஃபி ஞானி, அவர்களை கடைத்தெருவிற்கு அழைத்துச் சென்றார்.
அங்கே ஒரு கடையில் பால், வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம், இந்த பால் எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும்? என்று ஞானி கேட்டார். அதற்கு, கடைக்காரர், எவ்வளவு நாளா காலையில் கறந்த பால் மதியத்துக்குள் பயன்படுத்தவில்லை என்றால் கெட்டுவிடும் என்றார்.
பக்கத்திலிருந்த நெய்யை காண்பித்து, இது எத்தனை நாள் கெடாதிருக்கும் என்று கேட்டார். சுமாராக ஒரு மாதம் வரை கெடாது என்றார் கடைக்கார்.
சரி நெய் எப்படி தயாரிக்கப்பட்டது என்று கேட்டார் ஞானி. பாலைக் காய்ச்சி, ஆற வைத்து, அதில் சிறிது மோர் சேர்த்து, தயிராக்கி, அந்தத் தயிரைக் கடைந்து, வெண்ணெய் எடுத்து, அந்த வெண்ணையைக் காய்ச்சி நெய் தயாரிக்கப்படுகிறது என்று விளக்கும் கிடைத்தது.
அப்படியா, சரி பால் என்ன விலை, நெய் என்ன விலை என்றார் சூஃபி ஞானி. பால் ஒரு லிட்டர் பத்து ரூபாய், நெய் ஒரு லிட்டர் நூற்றைம்பது ரூபாய் என்றார் கடைக்காரர்.
உடனே ஞானி தான் அழைத்து வந்திருந்த இளைஞர்களைப் பார்த்து, சும்மா உட்கார்ந்திருந்தால் இந்த பாலின் நிலையில்தான் இருப்பீர்கள். ஆனால் சிரமப்பட்டு கடினமாக உழைத்து முன்னேறினால் நெய்க்கு ஈடான மதிப்புக் கிட்டும் என்றார்.
இளைஞர்களும் தங்களது எண்ணங்களை மாற்றிக் கொண்டு நல்வழியில் சென்றனர்.