நபி (ஸல் அவர்கள் கூறினார்கள் : "எவர் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். (ஸஹீஹூல் புகாரி)நபி (ஸல்) அவர்கள் ரமழானில் மற்ற காலங்களைவிட மிக அதிகமாக வணக்கம் புரிபவர்களாக இருந்தார்கள். அதிலும் ரமழானின் இறுதிப்பத்தில் மிக அதிகமாக வணக்கம் புரிந்து வந்தார்கள்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது : "நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களைவிட ரமழானில் அதிகமாக அமல் செய்வார்கள். குறிப்பாக ரமழானின் ஏனைய நாட்களைவிட பிந்திய பத்து நாட்களில் அதிகம் அமல் செய்வார்கள்."
(ஸஹீஹ் முஸ்லிம்)
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள் : "நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்தில் நுழைந்துவிட்டால் முழு இரவும் வணங்குவார்கள், குடும்பத்தினரையும் விழிக்கச் செய்வார்கள். தங்களது ஆடையை இறுக்கக் கட்டி உற்சாகத்துடன் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.
(ஸஹீஹூல் புகாரி ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு ஏவுவார்கள். "ரமழானின் கடைசிப் பத்தில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள்."
(ஸஹீஹூல் புகாரி ஸஹீஹ் முஸ்லிம்)
என்று கூறி அந்த இரவில் நின்று வணங்க ஆர்வமூட்டுவார்கள்.
மேலும் கூறினார்கள். "ரமழானின் கடைசிப் பத்தில் ஒற்றைப் படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக் கொள்ளுங்கள்." (ஸஹீஹூல் புகாரி)
மேலும் கூறினார்கள் : "எவர் லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குவாரோ அவரது முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்." (ஸஹீஹ் முஸ்லிம்)
இதனால்தான் மகத்துவமிக்க இம்மாதம் தூய்மையான வணக்கங்கள் புரிவதற்கு ஏற்ற மாதமாகத் திகழ்கிறது. இம்மாத இரவுகளில் வீண் விளையாட்டுக்களில் ஈடுபட்டு நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு, ஃபஜ்ரு நேரம் உதயமாவதற்கு சற்று முன் சில கவளங்களைச் சாப்பிட்டுவிட்டு, படுக்கைக்குச் சென்று ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி, ஃபஜ்ருத் தொழுகையைத் தவறவிடுவது முஸ்லிமுக்கு சற்றும் பொருத்தமற்ற செயலாகும்.
இறையச்சமுள்ள, மார்க்க நெறிகளை அறிந்த முஸ்லிம் தராவீஹ் தொழுகையை முடித்துவிட்டால் விழித்திருக்காது உறங்கச் செல்ல வேண்டும். சிறிது நேர தூக்கத்திற்குப் பிறகு இரவுத் தொழுகைக்காக எழுந்து தொழுதுவிட்டு ஹைருடைய உணவை உண்ண வேண்டும். பின்னர் ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்ற பள்ளியை நோக்கிச் செல்ல வேண்டும்.
நன்றி - முன்மாதிரி முஸ்லிம்
வெளியீடு - தாருல் ஹூதா, சென்னை.