இது இந்த கட்டுரையின் இரண்டாம் பாகம்.
தஜ்வீது என்பது அட்சரங்களுக்குரிய உரிமைகளை அளிப்பதும், ஒழுங்கு முறைகளை நிறைவேற்றுவதும், அட்சரங்களுக்குரிய உச்சரிப்புகளை ஒழுங்காக உச்சரிப்பதும், ஓதுகைக்கு இன்பத்தை சேர்ப்பதுமாகும். ஓதுவது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தேவையில்லாமல் நீட்டுவதோ, உயர்த்துவதோ, தாழ்த்துவதோ, அளவுக்கு மீறி குறுக்குவதோ கூடாது.
அருளப்பட்டபடி சரளமாக ஓத வேண்டும் என்று விரும்புவோர் இப்னு உம்மி அப்த்(ரலி) அவர்களின் ஓதுகையைப் போல் ஓத வேண்டும் என்று திருநபி அவர்கள் கூறியுள்ளார்கள். இப்னு உம்மி அப்த் என்பது அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மற்றொரு பெயராகும். திருக்குர் ஆனை தஜ்வீத் சட்டப்படி ஓதுவதில அவர் பெரும் பாக்கியம் அளிக்கப்பட்டிருந்தார். இவ்விபரங்கள் த·ப்ஸீர் அல் இத்காவில் எழுதப்பட்டிருக்கின்றன.
திருக்குர்ஆனின் கருத்துக்களைப் புரிந்து அதன்படி நடந்து கொள்வதற்கு இந்த உம்மத்து (இக்கால மனித வர்க்கம்) கடமைப்பட்டுள்ளது போன்று, குர்ஆனின் வார்த்தைகளைச் சரியாக ஓதவும், திருநபி அவர்களிடமிருந்து எவ்வாறு அறிவிக்கப்பட்டதோ அவ்வாறே உச்சரிப்புப் பேதமின்றி ஓதவும் கடமைப்பட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் நன்கு ஓதி நன்மைப் பயனை அடைபவரும் இருக்கின்றனர். தவறாக ஓதி தீமைப் பயனை அடைபவரும் இருக்கின்றனர். ஆதலால் முடிந்தவரை முயற்சி செய்து திருத்திக் கொள்ள வேண்டும். சிலருக்குத் திருத்தமாக ஓத இயற்கையாக நா வளைந்து கொடுக்காது. இவ்வாறானவர் பாவத்திற்கு ஆளாக மாட்டார். என்றாலும்,
முயற்சி செய்ய வேண்டும் என்று அல்இமா முல்பஙவீ(ரஹ்) தம்முடைய மஆலி முத்தன்ஜீல் எனும் தப்ஸீரில் குறிப்பிட்டுள்ளார்கள்.
திருக்குர்ஆனை ஓதும் ஒவ்வொருவரும் தஜ்வீதைக் கற்றுக் கொள்வதும பர்லுஐன் என்று அபூமஸ்ஊத்(ரஹ்) கிராஅத்தை அழகான முறையில் ஓதுவது பர்லு. எனவே, குர்ஆனை ஓதுபவர் முறைப்படி ஓதுவது வாஜிபு. இதுவும் திருக்குர்ஆனில் ராகம் போடுவதையும் எழுத்து பேதகத்தையும் விட்டுப் பாதுகாக்கும் பணியிலுள்ளது என்று அபூ மஸ்ஊதிப்னு அலிய்யிப்னி முஹம்மதினிஸ்ஸிராஸீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்.
திருக்குர்ஆனை தர்த்தீலாக ஓதுக என்று திருநபி(ஸல்) அவர்களுக்கு திருமறையில் இறைவன் கட்டளையிட்டிருக்கிறான் அல்லவா? அதன் கருத்தென்னவென்று அலீ(ரலி) அவர்களிடம் ஒருவர் வினவினார். அட்சரங்களின் உச்சரிப்பு பேதமின்றி, நிறுத்தவேண்டிய இடத்தில் நிறுத்தி ஓதுதல் என்று பதிலளித்தார்கள்.
திருநபி(ஸல்) அவர்களின் கிராஅத்தைப் போல் திரக்குர்ஆனை தர்த்தீலாக ஓதுங்கள். தர்த்தீலின்றி திருக்குர்ஆன் முழுவதையும் ஓதுவதை விட தர்த்தீலுடன் ஓர் அத்தியாயத்தை ஓதுவது எனக்கு மிகப் பிரியமாக இருக்கிறது என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறி இருக்கிறார்கள்.
அறிந்து கொள்! மத்து, (அளபெடை) இதுகாம் இரண்டெழுத்தை இணைத்து ஓதுதல், இக்பாஉ(தாழ்த்துதல்) இழ்ஹார் (வெளியாக்குதல்) முதலியவற்றில் காரீகள் ஒருமித்த கருத்துள்ளவர்களாக இருக்கின்றனர். அதனைக் கற்றுக் கொள்வது வாஜிபு. அதற்கு மாறு செய்வது ஹராம் என்று இப்னு ஹஜ்ர்(ரஹ்) கூறியிருப்பதாக முல்லா அலிய்யுனில் காரீ(ரஹ்) எழுதி இருக்கிறார்கள்.
தற்போது மத்ரஸாக்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் இவ்வாறு ஓதிக் கொடுக்கிறார்களா என்பதை அதன் நிர்வாகிகளும் பெற்றோர்களும் கவனித்து சரியான முறையில் பிள்ளைகள் ஓதுவதற்கான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வது அவர்களின் கடமையாகும்.
குர்ஆன் ஹரீ·பை சரிவர ஒதத் தெரியாதவர்களை மத்ரஸாக்களின் நிர்வாகிகளாக நியமிக்கும் பழக்கம் பொது மக்களிடம் இருக்கும் வரை எந்தச் சீர்திருத்தமும் ஏற்பட முடியாது. திருக்குர்ஆனை நன்றாக உணர்ந்திட மார்க்கக் கல்வியை கற்றவர்களை நிர்வாகிகளாக நியமித்தால் ஆசிரியர்களின் பொறுப்பின்மையையும், குழந்தைகளின் கல்வித் திறமையின்மையையும் களைந்துவிடலாம். இதற்கு மத்ரஸா நிறுவனர்களும், பொது மக்களும் முயற்சிப்பது அவசியம்.