இஸ்லாம் ஐந்து காரியங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியராகவும் அவனது தூதராகவும் இருக்கின்றார்கள் என்று சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, ஜகாத்தை கொடுப்பது, ஹஜ் செல்வது, ரமலானின் நோன்பு நோற்பது.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்கள் : புகாரி, முஸ்லீம்
அளவற்ற கூலியைப் பெற்றுத்தரும் நல்லறம்
ஆதமுடைய மக்களின் அனைத்து நல்லறங்களின் நன்மையும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பல மடங்காக அதிகரிக்கிறது. ஆனால் அல்லாஹ் கூறுகிறான்: நோன்பைத் தவிர ஏனெனில் அது எனக்குரியது. அதற்கு கணக்கின்றி நானே கூலி கொடுப்பேன். அவன் எனக்காகவே அவனது உணவையும் இச்சை உணர்வையும் விட்டு விட்டான்.
அறிவிப்பவர் : அயூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி, முஸ்லீம்
இரு மகிழ்ச்சிகள்
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சியுள்ளன. ஒன்று, நோன்பு திறக்கும் போது மற்றொன்று : அல்லாஹ்வைச் சந்திக்கும் போது. நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விட நறுமணமிக்கதாகும்.
அறிவிப்பவர் : அயூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி, முஸ்லீம்
திறக்கப்படும் சொர்க்கக் கதவுகள்
ரமலான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது.
அறிவிப்பவர் : அயூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி, முஸ்லீம்
சிபாரிசு செய்யும் நோன்பு
நோன்புக்கும் குர்ஆனும் அடியானுக்காக மறுமையில் சிபாரிசு செய்யும். யா அல்லாஹ்! நான் இவரை உணவை விட்டும் இச்சையை விட்டும் தடுத்துவிட்டேன்! எனவே அவருக்கான என்னுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக! என்று நோன்பு கூறும். யா அல்லாஹ்! நான் அவரைத் தூக்கத்தை விட்டும் தடுத்துவிட்டேன். எனவே அவருடக்கான என்னுடைய பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வாயாக! என்று குர்ஆன் கூறும். அப்போது உங்கள் இருவரின் பரிந்துரைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன என்று அல்லாஹ் கூறுவான்.
அறிவிப்பவர் : அயூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி, முஸ்லீம்
நோன்பாளி நுழையும் சொர்க்கவாயில்
சொர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உள்ளன. அதில் ஒன்றுக்கு ரய்யான் என்று பெயர். அதில் நோன்பாளிகளைத் தவிர வேறு எவரும் நுழையமாட்டார்கள்.
அறிவிப்பவர் : அயூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி, முஸ்லீம்