ரோஹித் சர்மாவிற்கு தலைமையேற்கும் தகுதி வளர்ந்துள்ளது என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற 8ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
போட்டிக்குப் பிறகு மும்பை இண்டியண்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், “அற்புதமாக இருந்தது. ஆரம்பத்தில் எங்களின் துவக்கம் வித்தியாசமானதாக, கடினமானதாக இருந்தது.
ஆனால் இவையெல்லாம் சோதனையான தருணங்கள். அந்த சமயத்தில் ஓரணியாக இணைந்து நாங்கள் கடினமாக உழைத்தோம். இந்த வெற்றி தற்செயலானதல்ல. எங்களது கடின உழைப்பின் வெளிப்பாடாக இந்த வெற்றியை அடைந்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ரோஹித் சர்மாவின் தலைமைப் பண்பை பற்றி கூறுகையில், “அவரை நீங்கள் ஒப்பீட்டு பார்த்தால், மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதற்கு, இன்று சிறந்த அணித் தலைவராக அவர் விளங்கினார். அவர் இப்போது அதிக தன்னம்பிக்கையோடு இருக்கிறார்.
அவர் மும்பை இண்டியன்ஸ் கேப்டனாக பொறுப்பேற்றதற்கு பிறகு நிறைய ஏற்ற, இறக்கங்களுடன் நிறைய சவால்களை சந்தித்து வந்துள்ளார். இந்த மாதிரியான சவால்கள் மட்டுமே சிறந்த கிரிக்கெட் வீரராகவும், திடமான நபராகவும் உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.