இன்று கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
8ஆவது ஐபிஎல் போட்டியின் 2ஆவது தகுதிச் சுற்றுப்போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:
சென்னை அணி இதுவரை 5 முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதில் இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. மூன்று முறை 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதனால் 6ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் செல்லும் முனைப்புடன் களமிறங்கும்.
சென்னை அணிக்கு பிரண்டன் மெக்கல்லம் இல்லாதது பின்னடைவுதான் என்றாலும், வெய்ன் ஸ்மித், சுரேஷ் ரெய்னா, டுவைன் பிராவோ, தோனி, ஜடேஜா போன்ற வீரர்கள் இருப்பது அந்த அணிக்கு பலம்தான்.
மேலும், பந்துவீச்சில் பிராவோ, ஆஷிஷ் நெஹ்ரா, பவான் நெகி, ஈஸ்வர் பாண்டே, மொகித் ஷர்மா போன்ற வலுவான பந்து வீச்சும் உள்ளது. முக்கியமாக சென்னை அணி தொடர்ந்து அபார ஃபீல்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் எதிரணியின் ரன் குவிப்பை கணிசமாக தடுக்க முடிகிறது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்:
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை கோப்பயை வென்றதில்லை. இதனால் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் இறுதிப் போட்டிக்கு முன்னேற கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.
பெங்களூரு அணியில் டி வில்லியர்ஸ் (512), கேப்டன் விராட் கோலி (493), கிறிஸ் கெய்ல் (450) ஆகியோர் பேட்டிங்கில் எதிரணிக்கு சிம்ம சொப்பணமாக இருப்பார்கள். மேலும், மன்தீப் சிங், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் இக்கட்டான நேரத்தில் கை கொடுப்பார்கள்.
இது தவிர பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், டேவிட் வைஸ், வருண் ஆரோன், அஷோக் டிண்டா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் வரிசையையும் பெங்களூரு அணி கொண்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் யார் வெல்வார்கள் என்பது கணிப்பதற்கு மிக கடினமாக இருக்கும்.