கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்குகிறது.
இந்தியாவில் மொத்தம் 10 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒரு போட்டி நடத்துவதற்கு ரூ.60 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் இதில் 30 லட்சம் ரூபாயை சொந்த மைதானமாக கருதும் ஐ.பி.எல். அணி மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு போட்டி தொடங்குவதற்கு முன் செலுத்த வேண்டும். மீதியை போட்டி முடிந்த பின்னர் இரண்டு வாரத்திற்குள் பி.சி.சி.ஐ. செலுத்தும். இந்த நடைமுறைதான் இதுவரை நடந்து வந்துள்ளது.
ஆனால் தற்போது லோதா கமிட்டி பரிந்துரையை செயல்படுத்துவதில் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும், நிர்வாகக்குழுவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவி வரும் காரணத்தால் பிசிசிஐ கொடுக்க வேண்டிய 30 லட்சம் ரூபாயும் போட்டி தொடங்குவதற்கு முன்பே பிசிசிஐ கொடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் போட்டிக்கு ஒத்துழைப்பு தர முடியாது என்றும் மாநில சங்கங்கள் மிரட்டுவதாக செய்திகள் வெளியானது.
இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் போட்டி நடப்பதற்கு முன்பே பணத்தை கொடுக்க பி.சி.சி.ஐ.யின் நிர்வாகக்குழு சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே பி.சி.சி.ஐ.யில் இருந்து கிடைக்கும் 30 லட்சம் ரூபாயையும் மாநில சங்கங்கள் முன்கூட்டியே பெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..