இன்றைக்கு தென் ஆசியாவில் தலைமை தாங்கக் கூடிய ஒரு நாடாக கருதப்படுவது இந்தியாதான். இலங்கையில் ஏறத்தாழ ஒரு லட்சம் தமிழர்கள் இந்த ஐந்து மாத காலத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மூன்றரை லட்சம் தமிழர்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டு அவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்கள். உணவில்லாமல், மருந்தில்லாமல் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் இந்திய அரசிற்கு தெரியாமல் இருக்கிறதா என்றால், தெரியும். தெரியவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்வாரானால், அவருடைய ரா உளவுத்துறை தங்களுடைய வேலைகளில் முற்றிலுமாகத் தோற்றுவிட்டது என்பதுதான் அதற்குப் பொருள். இந்தியாவிற்கு எல்லாம் தெரியும். இந்த நிலைமைக்கு இந்தியாவும்தானே ஒரு காரணம்? சிங்கள ராணுவம் தமிழர்களை கொலை செய்கிறது என்று சொன்னால், அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தது இந்தியாவும்தானே. கிரிமினல் சட்டப்படி ஒரு கொலை நடந்தால், அந்தக் கொலையை செய்தவனை விட, அவனை ஆயுதம் எடுத்து கொலை செய்ய வைத்தவனுக்கு அதிக தண்டனை விதிக்கப்படுகிறது. கிரிமினல் புரொசிஜர் கோடு அதுதான். அதைத்தானே இந்தியா செய்தது, சீனா செய்தது, பாகிஸ்தான் செய்தது.
இவர்களுக்கு, தாங்க முடியாத சுயநல நோக்கத்துடன் சேர்ந்த பார்வை. அதே நேரத்தில் தொலைநோக்கு பார்வை இல்லாமல் இவர்கள் செயல்பட்டார்கள் என்பதற்கு இதைவிட சீரிய உதாரணம் வேறு கிடையாது. இந்திய அரசியலில், தற்போது பிரதமராக இருந்தாலும் சரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியா இருந்தாலும், அவர்களுக்கு தொலைநோக்கு பார்வை கொஞ்சமும் இல்லை. இந்திரா காந்திக்கு இருந்த அந்த தொலைநோக்குப் பார்வை இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
இலங்கை இனப்பிரச்சனையில் இந்திரா காந்தி அவர்களுக்கு இரண்டு தெளிவான கொள்கை இருந்தது. ஒன்று, இலங்கை, இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உட்பட்ட ஒரு நாடாகத்தான் இருக்க வேண்டும். அதை அது மீறக்கூடாது. இரண்டாவது என்ன? இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை என்பதை சிங்கள அரசு தீர்க்க வேண்டும், இல்லையென்றால் இந்தியா தலையிட்டு அதைத் தீர்க்கும். ஈழத் தமிழர்களின்பால் அவருக்கு அனுதாபம் இருந்திருக்கிறது. இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான போக்குகள் வரவிடமாமல் தடுக்க வேண்டுமென்றால், ஈழத் தமிழர்களை வைத்துதான் தடுக்க முடியும் என்பதிலே அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டவர். இந்திரா காந்தி அவர்கள் உயிரோடு இருந்த காலம் வரை எந்த அந்நிய நாடும் இலங்கையில் தலையிட முடியவில்லை. அனுமதிக்கவில்லை அவர். இலங்கை அரசிற்கும் இந்திராவை மீறிச் செயல்படுகின்ற துணிச்சலும் கிடையாது.
ஆனால், இன்றைக்கு என்னவாயிருக்கிறது. சீனாவும், பாகிஸ்தானும், இன்னும் வேறு சில நாடுகளும் அங்கே தலையிட்டு எல்லாம் செய்துவிட்டார்களே. இந்தியா என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது. அது உள்நாட்டுப் பிரச்சனை அதில் எப்படி நாம் தலையிட முடியும் என்று சொல்கிறது. உள்நாட்டுப் பிரச்சனையில் எதற்கு சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும், உக்ரைனும் ஆயுதங்களை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். தலையிட்டார்கள். இந்தியா ஏன் தலையிட்டது? எதற்காக ஆயுதம் கொடுத்தீர்கள்? சரி, அதன் விளைவு என்ன இன்றைக்கு? அதுதான் முக்கியமானது. சீனாவும், பாகிஸ்தானும் எதற்காக அந்த நாட்டிற்கு ராணுவ ரீதியான உதவி, நிதியுதவி எல்லாம் செய்கிறார்கள். என்ன அவசியம். இலங்கை என்ன சீனப் பொருட்களையெல்லாம் விற்பதற்கு பெரிய சந்தையா? எதுவும் கிடையாது. அப்படியானால் அவர்களுக்கு வேறு ஒரு நோக்கம் இருக்கிறது. இலங்கைக்கு இந்த ஐந்து ஆண்டுகளில் அளித்த அனைத்து கடனுதவிகளையும் சீனா ரத்து செய்துள்ளது. நீ திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டது. ஏன்? எந்த பொருளாதார ரீதியான ஆதாயம் இல்லாமல் சீனா ஏன் இதை செய்கிறது. பாகிஸ்தான் ஏன் இதைச் செய்கிறது. இந்தியாவிற்கு எதிராக ஒரு தளமாக நமக்கு எதிர்காலத்தில் இலங்கை பயன்பட வேண்டும் என்கின்ற நோக்கத்துடன்தானே அவர்கள் செய்கிறார்கள்.
தமிழ்.வெப்துனியா: இந்த அளவிற்கு இதை நீங்கள் தெளிவாக வரையறுத்துக் கூறினீர்கள். ஆனால், இந்தத் தெளிவு ஏன் நமது இந்திய மத்திய அரசிற்கு வரவில்லை. ஏன் அவர்கள் சிங்கள அரசிற்கு, சிங்கள மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசிற்கு ஆதரவளிப்பதில் இந்த அளவிற்கு போட்டி போட்டுக் கொண்டு உதவுகிறார்கள்?
நெடுமாறன்: அதாவது, இப்போது இருக்கக்கூடிய இந்திய அரசின் தலைமை, அவர்களுக்கு உலகப் பிரச்சனைகளில் தெளிவான பார்வையோ அல்லது தொலைநோக்கோ யாருக்கும் கிடையாது. மன்மோகன் சிங், அவர் ஒரு அதிகாரியாக இருந்து வந்தவர். அரசியல்வாதி அல்ல. மற்றும் அந்த அமைச்சரவையில் இருப்பவர்கள் எல்லாம் யார்? மிகப்பெரும்பாலானோருக்கு உலக அரசியல் பற்றி எதுவும் தெரியாது. நேரு அவர்கள் காலத்தில் அணி சாரா கொள்கை ஒன்றை வகுத்து, ஆசிய, ஆப்ரிக்க நாடுகளையெல்லாம் ஒன்றிணைத்து ஒரு வலுவான மூன்றாவது சக்தியை உருவாக்கியதன் விளைவுதான் சோவியத் முகாமும், அமெரிக்க முகாமும் மோதிக்கொள்ளாமல் போயிற்று. மூன்றாவது முகாம் எழுந்து இந்த மோதலுக்கு நடுவே நின்று தடுத்தது. ஒரு போர் மூளாமல், மூன்றாவது உலகப் போர் மூளாமல் தடுத்தது என்று சொன்னால், நேரு அவர்களின் தொலைநோக்கு பார்வையும், அவர் வகுத்த திட்டமும்தான் அதற்கு காரணம். அதே வெளிநாட்டுக் கொள்கையை இந்திரா காந்தி அப்படியே பின்பற்றினார். வாஜ்பாய் கூட அதை அப்படியேதான் பின்பற்றினார். வாஜ்பாய் காலத்தில் அதை மாற்றம் செய்யவில்லை. அதே அணிசாரா கொள்கையைத்தான் வாஜ்பாயும் பின்பற்றினார்.
ஆனால், இன்றைக்கு என்ன? அணிசாரா கொள்கையை ஆழ குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஆசிய, ஆப்ரிக்க நாடுகளையெல்லாம் அமெரிக்க முகாமுக்கும் போகவேண்டாம், ரஷ்ய முகாமுக்கும் போகவேண்டாம். நாம் ஒன்றாக இருப்போம் என்று சேர்த்த இந்தியாவே இன்றைக்கு அமெரிக்க முகாமுக்கு போய்விட்டது. அணு உடன்பாடு என்ற பெயரில் அமெரிக்காவின் எடுபிடி பிள்ளையாக மாறிப்போயிற்று. இந்தியாவே இப்படி ஆன பிறகு மற்ற நாடுகள் என்னவாகும்? அவரவர்கள் ஆதாயம் தேடி, அமெரிக்காவைத் தேடி ஓடுவார்கள். சீனாவைத் தேடி ஓடுவார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
இவர்கள் அமெரிக்கா முகாம்களுக்கு போய் சேருவதற்கு முன்னால், ஆழமாகச் சிந்தித்தார்களா? யாரைக் கேட்டுக் கொண்டு இந்த முடிவெடுத்தார்கள்? காங்கிரஸ் கட்சியில் விவாதித்தார்களா? எதுவுமே இல்லையே? இப்படிப்பட்டவர்கள் கையில் இந்தியா ஒப்படைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து நான் வெட்கப்படுகிறேன்.
தமிழ்.வெப்துனியா: இந்தியா அமெரிக்காவோடு கைகோர்த்துள்ளது என்கின்ற நிலை நிலவுகிறது. அணு சக்தி ஒப்பந்தத்தையும் தாண்டி அமெரிக்காவுன்ற் ஒரு Strategic Partnership தந்திராபோய கூட்டாண்மை என்கின்ற ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவைத் தாண்டி அமெரிக்கா ஈழத் தமிழ் மக்களுக்கு சார்பாக வரமுடியும், வரக்கூடும் என்கின்ற சாத்தியம் ஏதேனும் உள்ளதா?
நெடுமாறன்: இந்தக் கேள்வி, ஒரு ஆழமான கேள்வி இது. அமெரிக்கா இன்றைக்கு ஈழப் பிரச்சனையில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை எடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறது. காரணம், சீனாவின் ஆதிக்கம் அங்கு வந்துவிடக்கூடாது என்று அமெரிக்கா கருதுகிறது. சீனா ஏன் இலங்கையை நாடுகிறது. அரேபியா நாடுகளில் இருந்து எண்ணெயை ஏற்றிக்கொண்டு ஆசிய நாடுகளில், சீனா, ஐப்பான் போன்ற நாடுகளுக்கெல்லாம் செல்கின்ற கப்பல்கள் இலங்கையைத் தொட்டுக் கொண்டு செல்கின்றன. சீனாவில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களெல்லாம் இலங்கையைத் தொட்டுக் கொண்டுதான் மேற்கு நாடுகளுக்குச் செல்கின்றன. ஆக, இந்தக் கேந்திரமாக இருக்கும் கடல் மார்க்கம் தங்கள் ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்று சீனா நினைக்கிறது. அதே நினைப்பு அமெரிக்காவிற்கும் இருக்கிறது. ஆகவே, அவர்கள் எதிர்க்கிறார்கள். குறுக்கிடுகிறார்கள். வல்லரசுகளின் ஆதிக்கத்தில் இலங்கை இனப்பிரச்சனை சிக்கிக் கொண்டிருக்கிறது.
நாம் அனுதாபப் படவேண்டியது இந்தியாவிற்காகத்தான். நியாயமாக இந்த கடல் மார்க்கம் இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அதுதான் இந்தியாவிற்கு பாதுகாப்பு. நேரு காலத்தில், இந்திரா காந்தி காலத்தில் அதை தங்கள் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தார்கள். இன்றைக்கு அதை இழந்துவிட்டது இந்தியா. அமெரிக்காவும், சீனாவும் அங்கே போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா அதை வேடிக்கை பார்க்கிற ஒரு நாடாக இருக்கிறது, எதிர்காலத்தில் அவர்கள் அமெரிக்காவையும் கண்டிக்க முடியவில்லை, சீனாவையும் கண்டிக்க முடியவில்லை. இவர்கள் இலங்கைக்குத் தேவையான ராணுவ உதவியை Logistic Support என்றெல்லாம் செய்தால் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் என்று இவர்கள் நினைத்ததெல்லாம் எதுவும் நடக்கவில்லை.
இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை படுதோல்வியடைந்துவிட்டது. ஏதோ புலிகளை அங்கே ஒழித்தாகிவிட்டது. நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம் என்று இலங்கை கொக்கரிக்கிறது. இனிமேல் இந்தியாவின் தயவு அவர்களுக்குத் தேவையில்லை. இந்தியா சொன்னபடி அவர்கள் ஒருபோதும் கேட்கப் போவதும் இல்லை. சீனாவின் முழுமையான பிடிக்குள் இலங்கை போய்விட்டது. ஆக, இந்தியா என்ன செய்வது என்று தெரியாமல் தனது கைகளைப் பிசைந்துக் கொண்டு நிற்கிறது.
தமிழ்.வெப்துனியா: இந்த அளவிற்கு இலங்கை அரசிற்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆயுதங்களைக் கொடுத்தது, ராணுவ ரீதியான ஆலோசனைகளை வழங்குவது, பெருமளவிலான அந்த ராணுவ நடவடிக்கைக்கு உதவி செய்வது இதற்கெல்லாம் காரணம் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அடிப்படையில்தான் அவர்கள் உதவி செய்தார்கள். அதே நேரத்தில் இன்றைக்குக் கூட சர்வதேச ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளைப் பார்த்தால், ஒரு பக்கத்தில் அவர்கள், இலங்கை அரசு இறுதிகட்டத்தில் செய்த மிகப்பெரிய மானுட படுகொலையை கண்டிக்கின்ற அதே நேரத்திலும், விடுதலைப் புலிகள் எனும் பயங்கரவாத இயக்கம் முடிந்துவிட்டது என்று கூறுகின்றார்கள். ஆக பயங்கரவாதம் என்ற அந்த முன் சொற்றொடர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், அவர்கள் முன்னின்று நடத்திய தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரியாக ஆகிவிட்டது என்று கூறலாமா?
நெடுமாறன்: விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடைபெறுகின்ற விடுதலைப் போராட்ட இயக்கங்களையெல்லாம் பயங்கரவாத பட்டம் சூட்டி ஒழித்துவிட அந்தந்த நாட்டு அரசுகள் முயற்சி செய்தன. சுபாஷ் சந்திரபோஸை பயங்கரவாதி என்று அமெரிக்காவும், பிரிட்டனும் சொல்லவில்லையா? பகத்சிங்கை பயங்கரவாதி என்று பிரிட்டிஷ் அரசு அவரை தூக்கில் போடவில்லையா? சரி, நம்முடைய காலத்தில் பார்க்கவில்லையா, பாலஸ்தீனத்தில் அரேபியர்களையெல்லாம் ஒன்று திரட்டி தங்கள் மண்ணை மீட்க போராடிய யாசர் அராஃபத்தை பயங்கரவாதி என்றுதானே அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் குற்றம் சாற்றின. எவ்வளவு காலத்திற்குப் பின்னால் அவர்கள் மாறினார்கள். வியட்நாமிலே ஹோசிமின்னை அதேபோலத்தான் பிரெஞ்ச் அரசு குற்றம் சாற்றியது. பயங்கரவாதி என்று சொன்னது. சியாங்கே சேக்கை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய மாசே துங்கை பயங்கரவாதி என்றுதான் சொன்னார். அதேபோல அமெரிக்காவும் சொன்னது. இவர்கள் சொன்னதனாலேயே அவர்கள் பயங்கரவாதிகள் ஆகிவிடவில்லை.
எந்த அமெரிக்கா யாசர் அராஃபத்தை பயங்கரவாதி என்று குற்றம் சாற்றியதோ, மாசே துங் பயங்கரவாதி, கோசிமின் பயங்கரவாதி என்று குற்றம் சாற்றினார்களோ, அவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதிகள் பிற்காலத்தில் கைகுலுக்கவில்லையா? ஆக பயங்கரவாத பட்டங்களைச் சூட்டி தேசிய விடுதலை இயக்கங்களை ஒடுக்குவதற்கு முயற்சி செய்தார்கள். அது முடியாமல் போனதால் அங்கீகரித்தார்கள். அதுதான் உலக வரலாறு.
இன்றைக்கு பிரபாகரனையோ, விடுதலைப் புலிகளையோ எந்தெந்த நாடுகள் பயங்கரவாதிகள் என்று குற்றம் சுமத்துகின்றதோ, அந்த நாடுகளே நாளைக்கு தேசிய விடுதலை இயக்கமாக அங்கீகரிக்கும், அங்கீகரித்து தீரவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தமிழ்.வெப்துனியா: இறுதியாக ஒரு முக்கியமான கேள்வி. தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் அனைத்தும் இன்றைக்கு சிறிலங்க ராணுவ அரசினுடைய, ராணுவத்தினுடைய கட்டுப்பாட்டு பகுதிகள் ஆகிவிட்டன. ஒருபக்கத்தில் பார்த்தால், சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டு இலங்கையில் தமிழர்கள் பகுதிகள் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சற்றேறக்குறைய 3 லட்சம் மக்கள் தங்களுடைய வாழ்விடம் இழந்து அகதிகளாக சொந்த மண்ணிலேயே இருக்கக்கூடிய ஒரு சூழல். மற்றொரு பக்கம் அவர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும் என்று கூறி தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் வரை போராடிக் கொண்டிருக்கின்றனர். இப்படி நடைபெறுகின்ற போராட்டங்கள் எல்லாம் எந்தெந்த கோரிக்கைகளை முக்கியமாக முன்வைத்து நடக்க வேண்டும் என்று தாங்கள் கருதுகின்றீர்கள்?
நெடுமாறன்: இந்தப் போராட்டங்கள் சரியான திசைகளில்தான் சென்றுக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றும் தவறில்லை. உடனடியாக, முகாம்களில் வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் முதன்மையான கோரிக்கை. அங்கே தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவம் வெளியேற வேண்டும் என்பதும் முக்கியமான கோரிக்கை.
20 ஆயிரம் தமிழர்களை கடைசிகட்டத்தில் படுகொலை செய்த ராஜபக்சயும், அவருக்கு துணையாக நின்றவர்களையும் யுத்த குற்றவாளிகளாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை. உலக நாடுகள் உடனடியாக முன்வந்து பாதிக்கப்பட்ட 3 லட்சம் மக்களை காப்பாற்றுவதற்கு, உணவு, மருந்து எல்லாம் அளிப்பதற்கு உடனடியாக உதவ முன்வரவேண்டும். இது உலக சமுதாயத்தின் கடமையாகும். அதை அவர்கள் செய்ய முன்வரவேண்டும். இந்த கோரிக்கைகள்தான் இப்போதைக்கு முக்கியம்.
விடுதலைப் போராட்டத்தை மீண்டும் தொடர்வது என்பது இதற்கு அடுத்தபடியாகத்தான். அதை பிரபாகரன் அவர்களும், விடுதலைப் புலிகளும் என்ன செய்ய வேண்டுமோ, எப்படி செய்ய வேண்டுமோ அப்படி அவர்கள் செய்வார்கள். அதற்கு முன்னால் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி உலகை நாம் நமக்கு ஆதரவாக அணி திரட்ட வேண்டும். அதன்மூலம் மட்டுமே இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.