இவர்களிடம் அவர்கள் வந்து பேச வந்ததனுடைய உண்மையான நோக்கத்தை இப்பொழுது சொல்கிறேன். இப்பொழுது 4வது ஈழப்போர் ஒரு கசப்பான முடிவிற்கு வந்துவிட்டது என்று புலிகள் அறிவித்துவிட்டார்கள். அது தமிழர்களுக்கு ஒரு தோல்வியில், நெருக்கடியில் முடிந்திருக்கிறது. ஏராளமான தமிழர்களை இழந்திருக்கிறார்கள், போராளிகள் மடிந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் மக்கள் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். உலகத் தமிழர்கள் எல்லாம் இதுகுறித்து கவலையடைந்திருக்கிறார்கள். நெருக்கடி அடைந்திருக்கிறார்கள். அந்த விடுதலைப் படையினுடைய தலைவர் என்ன ஆனாரோ என்ற கேள்விக்குறியுடன் நின்றுக் கொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், வரலாற்றுக் கண்ணோட்டத்தைப் பார்க்கிற போது, ஓர் விடுதலைப் போர் என்பது விடுதலை இலக்கை அடைவது வரை முடிவதில்லை. களங்கள் மாறிவரும், போர் முறைகள் மாறிவரும். ஆனால், போர் தொடர்ந்து நீடிக்கும். விடுதலைப் போராட்டத்திற்கு முடிவு கிடையாது. நம்மை பற்றியோ, வியட்நாமை பற்றியோ நாம் பேச வேண்டிய தேவையில்லை. இதே ஈழம் தொடர்பாக, இந்த போர் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே, சென்ற ஆண்டு அநேகமாக நவம்பர், டிசம்பரில், கிளிநொச்சி வீழ்ச்சிக்கு முன்னதாக சரத் பொன்சேகா கூறியதை நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
இந்த நிலப்பகுதி முழுவதையும் கைப்பற்றுவது என்பது ஒன்றும் முடியாத காரியமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா நிலங்களையும் எங்களால் கைப்பற்ற முடியும். ஆனால், கைப்பற்றுவதன் மூலமாகவே பயங்கரவாதம் ஒழிந்துவிடும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆயிரம் புலிகள் மிச்சமிருந்தால் கூட அவர்கள் கெரில்லா முறைக்கு மாறிவிடுவார்கள். இந்த கெரில்லா தாக்குதல் நடத்தும்போது, மரபு வழி போரில் வெற்றி பெற்றதைப் போல நாங்கள் வெற்றி பெற முடியாது. அதை சமாளிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். உண்மையிலேயே நான் அதைப் பற்றிதான் கவலைப்படுகிறேன் என்று பொன்சேகா சொன்னார்.
இரண்டாவது, கொழும்புவில் அமெரிக்கத் தூதராக இருந்து ஒய்வு பெற்றுச் சென்றவர் சென்னைக்கு வந்து ஒரு கூட்டத்தில் பேசினார். இந்த நிலங்களையெல்லாம் பிடித்து, புலிகளை போரில் தோற்கடிப்பதிலேயே இலங்கை அரசு குறியாக இருக்கிறது. அது தேவையற்றது. அப்படி செய்ய முடியாது. புலிகளை அப்படி அடியோடு தோற்கடிப்பது சாத்தியமான ஒன்று அல்ல. ஏனென்றால், எல்லா நிலங்களையும், ஒரு சதுர அங்குலம் கூட மிச்சமில்லாமல் பிடித்ததற்குப் பிறகும் அவர்கள் கெரில்லாப் போர் முறைக்கு மாறிவிடுவார்கள். மாறியதற்குப் பிறகு நீங்கள் அவர்களை ஒடுக்கிவிட முடியாது. இது நீண்ட காலம் நடக்கும். (ஏற்கனவே இந்தியாவிற்கு கிடைத்த அனுபவமெல்லாம் நமக்கு தெரியும்).
வெறும் 2,000 பொடியன்கள் என்று அழைத்த ராஜீவ் காந்தியினால், ஒரு லட்சம் படையினரை இறக்கியும் கூட அவர்களை ஒடுக்கவோ, அழிக்கவோ முடியவில்லை, இந்திய படைதான் புறமுதுகு காட்டி திரும்பி ஓடி வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இது பொன்சேகாவுக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும். மரபு வழி போர் என்பது எப்போதுமே அரசிற்கு பன்மடங்கு சாதகமானது. எப்போதுமே விடுதலைப் படைக்கு பாதகமானது. இதையெல்லாம் மீறி மரபு வழிப்போரில் புலிப்படை சாதனைகளைப் படைத்தது. கிளிநொச்சியை கைப்பற்றியது, ஜெயசிக்குருவை முறியடித்தது. ஆணையிறவைப் பிடித்தது. பூநகரியில் கிடைத்த வெற்றி இதெல்லாம் மிகப்பெரிய சாதனைகள்தான். ஆனால், அதற்கெல்லாம் ஒரு எல்லை இருக்கிறது என்பது தற்போது தெரிந்துவிட்டது.
அதுவும் இந்த உலகமயமாக்கல் ஒடுக்குமுறை என்ன செய்துவிட்டது என்று சொன்னால், பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் பல நாடுகளையும், பல நாடுகளினுடைய வளங்கள், சக்திகள், படை, அறிவு எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து கொண்டு நசுக்குகிற போது, மக்கள் படையினால் அதை எதிர்த்து மரபு வழிப்போரில் நிற்க முடியவில்லை. ஆனால், கரந்தடிப் போர் அப்படி அல்ல. கரந்தடிப் போர் விடுதலை இயக்கங்களின் தாயகம். அங்கு அயலவன் வந்து ஒன்றும் செய்ய முடியாது.
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற
என்று வள்ளுவர் சொல்கிறார். ஆழ்ந்த நீர் தடாகத்திற்குள், நீர் பகுதிக்குள் முதலை வெற்றி பெறும், எதை எதிர்த்தும் வெற்றி பெறும். அது கரைக்கு வந்துவிட்டால் எதனிடமும் தோற்றுப் போகும். அதுபோலத்தான், விடுதலை இயக்கங்களுக்கு கரந்தடிப் போர் முறை என்பது. அவர்களுடைய தாய்த் தடாகம் அது. அது அவர்களுடைய நீர்நிலை. அதை வியட்நாமில் அமெரிக்கா அனுபவித்தது. இதே ஈழத்தில் இந்தியப் படை அனுபவித்தது. இப்பொழுது அந்தப் போர் மீண்டும் தொடங்கிவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு வந்துள்ளது.
இப்பொழுது அவர்கள் இன்னும் தொடங்கவில்லை. ஏனென்றால் இந்தப் போரில் மிச்சம் இருப்பவர்கள் மீண்டும் தங்களை அணி சேர்த்துக் கொண்டும், இந்தப் பகுதிகளை உடைத்துக் கொண்டு வெளியேறியவர்கள், அது வரப்போகிறது என்று தெரிந்து கொண்டு முன்கூட்டியே போய் வேறு இடங்களில் தங்கிக் கொண்டவர்கள், அது அம்பாறையில், மட்டக்களப்பில், யாழ்ப்பாணத்தில், வன்னிக் காட்டினுடைய பிற பகுதிகளில் போயிருக்கிறவர்கள், அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள், அமைப்பாக ஒன்று திரண்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத் தமிழர்களுடைய போராட்டங்கள், தமிழகத் தமிழர்களுடைய போராட்டங்கள், அவர்கள் நடத்துகின்ற விடுதலைக்கான போராட்டங்கள், இவற்றிற்கிடையே ஒரு இசைவு ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படியொரு முறையான ஒழுங்கமைப்பு வந்து, திட்டமிட்டு மீண்டும் ஒரு கறந்தடிப் போரைத் துவங்குவதற்காக காத்திருக்கிறார்கள்.
அப்படி காத்திருப்பது இந்த அரசிற்கு மிக நன்றாகத் தெரியும். சிங்கள அரசிற்கும் தெரியும், இந்திய அரசிற்கும் தெரியும். இதை முறியடிப்பதற்கு இவர்கள் தொலைநோக்குடன் திட்டமிட ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக அண்மைக் காலத்தில் அங்கு சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. காட்டிலிருப்பவர்களையெல்லாம் தேடி அழிக்கிற முயற்சியில், Fleshing out, wiping out என்று சொல்லி ராணுவத்தைக் கொண்டு போய் இறக்கியிருக்கிறார்கள். அப்படி போன ராணுவத்தினர் பல இடங்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 4
நாட்களுக்கு முன்பு மணலாற்றிற்கு அருகில் நெடுங்கேணியில் இப்படி தேடிச் சென்ற ராணுவத்தினரை புலிகள் தாக்கியதில் 150 படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த செய்திகளையெல்லாம் வெளியில் விடாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் பதறியடித்துக் கொண்டு இவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். எனவே, எப்படி காட்டுப் பகுதியில் இந்தப் போரை தொடர்ந்து கொண்டு செல்வது. கறந்தடிப் போரை எப்படி சமாளிப்பது. இதுபற்றிப் பேசுவதற்காகத்தான் இவர்கள் டெல்லிக்கு வந்தது. இதற்கான கருவிகள், இதற்கான ஆயுதங்கள், இதற்கான ஆலோசனைகள், இதற்கான படை உதவி, இதற்கான கருவிகள் பெறுவதற்காகத்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இதே பசில் ராஜபக்சே, பாகிஸ்தானுக்கும் இரண்டு முறை போனார். போருக்கு முன்னாடி ஒரு முறை போனார், போர் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு முறை போனார். ஏன் போனார்? பாகிஸ்தான் அரசு ஒன்றும் சுயாட்சி பற்றி, 13வது திருத்தம் பற்றி அல்லது ஒப்பந்தம் பற்றி ஏதாவது பேசப் போகிறதா? அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. அவர் எதற்குப் போனால் என்றால், ஒரு 25 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிற விமானத்தில் இருந்து கொண்டு கணினியின் துணையோடு, ஒரு மனிதன் நிலத்தில் இருக்கிறது அந்த இடத்தைப் புள்ளி வைத்து அங்கிருந்து தாக்கினால் சரியாக அங்கு சென்று தாக்கக்கூடிய பிரிசிஷன் பாமிங் என்ற அந்த குண்டு வீச்சு முறை, அதற்கான கருவி, அதை இயக்குவதற்கான வான் படை ஆள், இது எல்லாமே பாகிஸ்தானில் இருந்துதான் வரவழைக்கப்பட்டது. அந்த வான் படை ஆளைக் கொண்டுதான், அந்த முறையில்தான், சமாதானச் செயலகம் கிளிநொச்சியில் எங்கிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அந்த இடத்தை குறிபோட்டு தமிழ்ச்செல்வனைக் கொன்றார்கள். அதுதான் அந்தப் போரில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது நமக்குத் தெரியும். தமிழ்ச்செல்வனைக் கொன்றது அப்படித்தான். அதற்கு இந்த பசில்தான் போய் பேச்சுவார்த்தை நடத்தி இந்தக் கருவிகளைப் பெற்றுக் கொண்டு வந்தார்.
அதேபோல், புதுக்குடியிருப்பில் போய் கடுமையாக இவர்கள் சிக்கிக் கொண்டிருந்தபோதுதான் மீண்டும் பசில் அங்கு போனார். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவர் அங்கு போய்தான், அதற்கான கருவிகள், மற்ற வழிமுறைகள், பாகிஸ்தானிய ராணுவ உதவிகளையெல்லாம் பெற்றுக் கொண்டு வந்தார். சீன டாங்கிகளும், பாகிஸ்தானிய விமானங்களும், இந்திய ராடார்களும், மூன்று நாடுகளுடைய ராணுவ அறிவுரைகளும், இதோடு ஈரான் மற்ற சில நாடுகளையெல்லாம் இணைத்துக் கொண்டுதான் இந்தப் போரை அவர்கள் நடத்தினார்கள்.
இதற்காகத்தான் அவர்கள் டெல்லிக்கு வந்தார்கள். இந்த கொலைத் திட்டத்தை, சதித்திட்டத்தை மறைப்பதற்காகத்தான் இந்த 13வது திருத்தம், ராணுவம் பாசறைக்கு போய்விட வேண்டும் என்று சொல்வதும், அப்படியே இந்தியா மிரட்டியது போல் பேசியது போலவும், இல்லையென்றால் நாங்கள் வந்து தலையிடுவோம். எப்ப தலையிடுவது? தலையிடுவதற்கான நேரம் இதுவா? கடைசி காலத்தில் எங்களை சுற்றி வளைத்துக் கொண்டு வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளால் எங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள், எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கிறது, இந்த உலகத்திற்கு கண்ணில்லையா? காதில்லையா? இதை தடுப்பதற்கு யாராவது வரமாட்டார்களா என்று கதறிக் கொண்டிருந்தார்கள். செஞ்சிலுவைச் சங்கம் கப்பலைக் கொண்டு போய் கடலோரத்தில் நிறுத்திக் கொண்டு, உணவை கொண்டுபோய் கொடுப்பதற்கு மறுக்கிறார்கள், நோயாளிகளை ஏற்றி வருவதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்று சொன்னார்கள். முள்ளிவாய்க்காலில் கடைசியாக மிச்சமிருந்த அந்த மரத்தடி மருத்துவமனை கூட தொடர்ந்து மூன்று நாட்கள் பீரங்கிக் குண்டுகளால் தாக்கி அடியோடு தகர்த்தார்கள். செஞ்சிலுவைச் சங்கமே சொல்லியது, சிங்கள ராணுவம்தான் இந்த தாக்குதலை நடத்துகிறது, பீரங்கிக் குண்டுகளால் தாக்குகிறார்கள், கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லிவிட்டு தாக்குகிறார்கள் என்ற போதெல்லாம் தலையிடாத இந்தியா, இப்போ போய் நான் தலையிடுவேன் என்று மிரட்டியதாம்! ராஜரீகமாக பேசினார்களாம். சொல்கிறார்கள். உதவி செய்வதற்கு நாங்களே வந்துவிடுவோம் என்று சொன்னார்களாம். அதெல்லாம் தேவையில்லை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார்களாம்.
உண்மையிலேயே தமிழர்களுக்கு சமத்துவ உரிமை கொடுப்பது என்றால், சிங்களவனுக்கு ஒரு பார்லிமெண்ட் இருக்கிற மாதிரி, தமிழனுக்கு ஒரு பார்லிமெண்ட் இருக்குமான்னு கேட்டாங்களா? சிங்களவர்களுக்கு ஒரு குடியரசுத் தலைவர் இருப்பது போல, தமிழர்களுக்கு ஒரு குடியரசுத் தலைவர் இருப்பாரான்னு கேட்டாங்களா? சிங்களவர்களுக்கு ஒரு படை இருப்பது போல், தமிழர்களுக்கு ஒரு படை இருக்கணும்னு கேட்டாங்களா? எதுவுமே இல்லாம சமத்துவம்னா, அப்ப என்ன அர்த்தத்துல சமத்துவம்?
எனவே இது எல்லாமே ஏமாற்று, மோசடி. நாம் வரிகளைப் படித்தால் மட்டுமே போதாது, வரிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கிற உண்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் இப்படிப்பட்ட மகா யோக்கியர்கள் கூடிப் பேசுகிறார்கள் என்றால், அவர்கள் ஏதோ தமிழர் நலன் பற்றி பேசுவார்கள் என்று யாரும் கனவிலும் நினைக்க வேண்டாம். மீண்டும் சூழ்ச்சித் திட்டங்கள் டெல்லிக்கும், கொழும்புவிற்கும் இடையே உருவாக்கப்படுகின்றன. அவற்றை முறியடிப்பதற்கு தமிழர்கள் விழிப்போடு இருக்க வேண்டும். அந்த விழிப்பின் அடையாளமாக போர்க் குற்றவாளிகளாக சிங்கள அரசுத் தலைவர்களையும், இந்திய அரசுத் தலைவர்களையும் உலக நீதிமன்றத்தில் கூண்டில் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் அந்த அகதி முகாம்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு செய்ய வேண்டும். உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழர்களை அவரவர் சொந்த ஊரிலேயே கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும். இதையெல்லாம் இந்தியா வலியுறுத்தும் என்று எதிர்பார்ப்பதோ, அது வலியுறுத்த வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்பதோ அர்த்தமற்றது. இதுதான் இதிலிருந்து நமக்கு தெரியக்கூடிய செய்தி.
அடுத்த பகுதி திங்கட்கிழமை...