Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவிற்கு பலம் சேர்க்கும் இந்தியாவின் அயலுறவுக் கொள்கை!

எம்.ஜி. தேவசகாயம் (இ.ஆ.ப. – ஓய்வு)

சீனாவிற்கு பலம் சேர்க்கும் இந்தியாவின் அயலுறவுக் கொள்கை!
, வியாழன், 17 செப்டம்பர் 2009 (19:52 IST)
WD
இந்தியா முழுவதும் கால் நூற்றாண்டிற்கு மேலாக பணியாற்றி இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான திரு. எம்.ஜி. தேவசகாயம் அவர்கள், 1964ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் இணைந்து நாட்டுப் பணியைத் துவக்கியவர். 1965ஆம் ஆண்டுப் போரில் ஈடுபட்டு சிறப்பான பணியாற்றியமைக்காக சேவா பதக்கம் பெற்றவர். இராணுவத்தில் போர் அனுபவம், பிரிவினைவாத அமைப்புகளை ஒடுக்கும் பணி, உள்நாட்டுக் கலவரத்தை ஒடுக்குதல் ஆகிய மூன்று பணிகளிலும் பொறுப்பேற்று அனுபவம் பெற்றவர் தேவசகாயம்.

இந்திய இராணுவத்தில் மேஜராக இருந்த நிலையில் 1968ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்தார். அதன்பிறகு இந்தியா முழுவதும் - குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். இந்திய விடுதலைப் போராட்டத் தலைவரும், பிறகு சோசலிஸ்ட் இயக்கத்தை வழிநடத்தியவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன் உடன் நெருக்கமாகப் பழகியவர் (அவருடன் எனக்கு தகப்பன் - மகன் உறவு இருந்தது என்று பெருமையுடன் கூறுகிறார்). இதேபோல், மானுட சேவைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட மதர் தெரசாவுடனும் இணைந்துப் பணியாற்றிய நல்வாய்ப்பைப் பெற்றவர் (அம்மா என்னை மகனாகவே பாவித்தார் என்று கூறும் தேவசகாயம், இவர்கள் இருவருடனும் பழகியதையே நான் பெரும் பேராகவும், அனுபவமாகவும் கருதுகிறேன் என்று கூறுகிறார்).

இந்திய ஆட்சிப் பணியில் இருந்து ஓய்வுப் பெற்றப்பின், பொதுச் சேவையில் ஈடுபட்டு இன்று வரை தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசு மேற்கொண்ட அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துவரும் தேவசகாயம், இந்தியா கடைபிடித்த கொள்கை, ஈழத் தமிழர்களின் வாழ்வை மட்டுமின்றி, இந்தியாவின் தேச பாதுகாப்பை கேள்விக் குறியாக்கிவிட்டது என்று விளக்கி‌ப் பேசியும் எழுதியும் வருகிறார்.

இந்தியாவின் அயலுறவுக் கொள்கை மற்றும் அணுகுமுறை குறித்து அவரிடம் தமிழ்.வெப்துனியா.காம் ஒரு விரிவான நேர்காணலை நடத்தியது.

தமிழ்.வெப்துனியா.காம்: இன்றைக்கு காலைப் பத்திரிக்கையில் வந்திருக்கிற செய்தி ஒன்று மிகவும் ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கிறது. ஏனென்றால், கடந்த இரண்டு நாட்களாக ஜம்மு - காஷ்மீருக்கு உட்பட்ட நமது நாட்டினுடைய எல்லைக்குள் (லே பகுதியில்) சீனப் படைகள் ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு உள்ளே வந்து சீனா என்று எழுதிவிட்டுப் போயுள்ளார்கள் என்று அந்தச் செய்தி கூறுகிறது. ஆனால், “அப்படியெல்லாம் ஏதும் நடக்கவில்ல” என்று அதை மறுத்து சொல்லியிருக்கிறார் நம்முடைய அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா. இது மிகவும் ஆச்சரியப்படத்தக்கதாகவும், நடந்தது என்கின்ற செய்தியை நடக்கவில்லை என்றும் சொல்வதன் அர்த்தம் என்னவென்று புரியவில்லை.

webdunia
WD
எம்.ஜி. தேவசகாயம்: முதல் தடவையாக இப்படி நடந்திருக்கிறது. அதாவது பாதுகாப்பு அமைச்சகம், இந்திய ராணுவம்தான் எல்லையில் இருக்கிறது. இந்த வெளிநாட்டு அயலுறவு ஆட்கள் யாருமே அங்கு (எல்லையில்) இருப்பதில்லை. அங்கே என்ன நடக்கிறது என்பது ராணுவத்திற்குதான் தெரியும். ராணுவம் சொல்லிதான் பாதுகாப்பு அமைச்சகம் இதுபற்றி அறிக்கை கொடுத்திருக்கிறது. அப்படியிருக்கும்போது வெளிநாட்டு அமைச்சகம் இதுபற்றி பேசியது ஆச்சரியம் மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கது. மிகவும் கண்டிக்கத்தக்கது. அதாவது, அயல்நாட்டு அமைச்சர் கிருஷ்ணா ஒரு பொம்மை மாதிரி உட்கார்ந்து, அவருக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறார்களோ அதைத்தான் அவர் சொல்லியிருக்கிறாரே தவிர, உண்மை என்ன என்று கேட்டு அவர் சொன்னது மாதிரி தெரியவில்லை.

அயலுறவு அமைச்சகம் பல வருடமாக இந்த மாதிரி கொள்கைகளைத்தான் கடைபிடித்துக் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இது அயலுறவு அமைச்சகத்தின் ஒட்டுமொத்த செயலின்மை (Total Failure) மாதிரிதான் தெரிகிறது.

தமிழ்.வெப்துனியா: மூன்று வாரங்களுக்கு முன்னதாகத்தான் இந்தியா-சீனாவிற்கு இடையே எல்லைப் பிரச்சனை தீர்ப்பதற்கான ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அந்த பேச்சுவார்த்தையினுடைய முடிவில் எல்லாம் சுமூகமாக இருக்கிறது, அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஒரு உத்தேசத் தீர்வு திட்டத்தை முன்வைத்து அதன் மீது விவாதம் நடைபெறும் என்றெல்லாம் கூறிய நிலையில், இந்தியாவை பல்வேறு துண்டுகளாக சீனா உடைக்க வேண்டும், தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று சொன்ன கட்டுரை சீன அரசின் ஆதரவு பெற்ற ஒரு இணையதளத்தில், கட்டுரையாக வந்தது. அது குறித்த நமது நாட்டு ஊடகங்களில் விவாதிக்கப்பட்டும், இந்திய அரசு அது தொடர்பாக எதுவும் கூறவில்லையே.

தேவசகாயம்: பேச்சுவார்த்தை சமூகமாக நடந்தது, எல்லாத் தீர்வுகளும் வரப்போகிறது, சுமூகத் தீர்வு வரப்போகிறது என்று சொல்வதெல்லாம் சம்பிரதாயமானதுதான். உண்மையிலேயே இந்தியாவிற்கும்,
webdunia
FILE
சீனாவிற்கும் என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்பதெல்லாம் ஒன்றும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. யாரோ இரண்டு பேர் வருகிறார்கள், நம்ம பக்கத்தில் இருந்து தேச பாதுகாப்பு ஆலோசகர் (எம்.கே. நாராயணன்) போகிறார். இவருக்கு வெளிநாட்டுக் கொள்கைகளைப் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. இவர் போலீசாக இருந்தவர், ஒரு இன்டெலிஜெண்ட்டா இருந்தவர். இவர் என்ன பேசுகிறார் என்று நமக்கு ஒன்றுமே தெரியாது.


ஆனால், உண்மையில் சீனாவினுடைய அஜெண்டாவே (திட்டம்) வேறு. அவர்களுடைய அஜெண்டாவானது இந்தியாவை என்றைக்குமே மேலே வரவிடக்கூடாது என்பதுதான். இந்தியா நமக்கு ஒரு போட்டியா? அப்படிங்கிற ஒரு உணர்வு அவர்களிடத்தில் இருக்கிறது. அதனால இந்தியாவை மேலே வரவிடக்கூடாது, இந்தியாவை பொருளாதார ரீதியிலும், அதாவது ராணுவ ரீதியிலும் தாழ்த்தி வைப்பதுதான் சீனாவினுடைய எண்ணம். அவர்களுடைய அஜெண்டாவை இந்தியாவால் என்றைக்குமே கவுண்ட்டர் பண்ண முடியவதில்லை. மேலுக்குதான் சொல்கிறார்களே தவிர, உருப்படியாக என்ன என்பது, உண்மையான நிலை என்பது இதுவரை நமக்கு தெரியவில்லை.

தமிழ்.வெப்துனியா: சீனாவினுடைய அஜெண்டாவே இந்தியாவை மேலே வரவிடக்கூடாது, அனுமதிக்கக்கூடாது என்பதுதான் என்று சொல்கிறீர்கள். அதற்கு ஒரு பதிலும் இங்கு இல்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் புரியவில்லை என்றும் சொல்கிறீர்கள். ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மட்டும் எதிரி நாடுகளாக, தங்களுக்குள் பயங்கரவாத தாக்குதல், எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் அப்படியெல்லாம் குற்றச்சாற்று வீசப்படுகிற பாகிஸ்தான், இன்னொரு பக்கத்தில் சீனா இந்த நாடுகளுடன் இணைந்து சிறிலங்க அரசிற்கு இந்தியா உதவிதே... அது எதனால்?

தேவசகாயம்: இலங்கையில் இந்தியாவின் அணுகுமுறை புரியாத புதிராக இருக்கிறது. ஏனென்றால் இந்தியாவினுடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான் நமக்கு எதிரி. சீனா நமக்கு எதிரி. நேபாளம் நமக்கு எதிரி என்று சொல்ல முடியாவிட்டாலும், நமக்கு நட்பு நாடு அல்ல. வங்கதேசம் எதிரி என்று சொல்ல முடியாவிட்டாலும், நட்பு நாடு அல்ல. பர்மா எதிரியுமில்லை, நட்பு நாடுமில்லை. ஆனால் எதிரி ஆகக்கூடிய வாய்ப்பு அதிகமிருக்கிறது. நம்முடைய வம்சாவழி ஆட்கள் பல லட்சம் பேர் இருக்கக்கூடிய ஒரே நாடு சிறிலங்கா. அந்த நாடு கடல்புற பாதுகாப்பிற்கு மிக முக்கியமான நாடு. இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல், அரபிக் கடல். அந்த நாடு நம்ம கூட இருந்திருந்தா, குறைந்தபட்சம் கடல் பாதுகாப்பாவது அச்சுறுத்தல் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், அது இப்பொழுது சீனாவிடம் போய்விட்டது. நம்ம தமிழர்களை அங்கே ஒழித்துக்கட்டிவிட்டார்கள். ஒழித்துக்கட்டியது இந்திய ராணுவம்தான், இந்திய மத்திய அரசுதான் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவே வெளிப்படையாக அறிக்கை கொடுத்திருக்கிறார். அந்த அறிக்கையை இதுவரை டெல்லியில் இருந்து யாரும் மறுக்கவில்லை.

webdunia
WD
இரண்டு வாரத்திற்கு முன்னதாக ஒரு புத்தகம் கூட வந்திருக்கிறது. மற்றபடி பல அறிக்கைகள் வந்திருக்கிறது. இந்தியாதான் இதை செய்தது என்பது நிரூபனமாகிவிட்டது. ஆனால், இந்தியா தமிழர்களை ஒழித்துக் கட்டியதால், இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு என்பது மட்டுமின்றி, அது சீனாவிற்குச் சாதகமாகப் போய்விட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் இலங்கையை ராணுவ ரீதியிலும் சீனா கைப்பற்றிவிடும். பொருளாதார ரீதியிலும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. அங்கு ஒரு பெரிய துறைமுகம் கட்டுகிறார்கள். மற்றபடி பொருளாதார ரீதியில் பல உதவிகள் செய்கிறார்கள். இந்தியாவும் அவர்களுக்கு எதிராக மின் உற்பத்தி, அணு தொழில்நுட்பம் கொடுக்கிறார்கள். எதையெல்லாமோ செய்து பார்க்கிறார்கள். ஆனால், கடைசியில் சிறிலங்கா சீனா பக்கம்தான் போகும். அப்படி பார்க்கும்போது நான்கு பக்கமும் இந்தியாவை சீனா வளைத்துவிடும். மகாபாரதத்தில் சொல்வார்களே சக்கர வியூகம் என்று அந்த மாதிரி ஆகும்.

தமிழ்.வெப்துனியா: நீண்டகாலம் இந்திய ஆட்சிப் பணியில் இருந்திருக்கிறீர்கள். இந்தியா முழுவதும் பணியாற்றியிருக்கிறீர்கள். இந்தியாவினுடைய அரசு துறையில் டெல்லியிலும் பணியாற்றியிருக்கிறீர்கள். உங்களுடைய அனுபவத்தில் இருந்து சொல்லுங்கள். எந்த காலகட்டத்திலாவது சிறிலங்க அரசு, அது எந்த அரசாக இருந்தாலும், அது இந்தியாவினுடைய நலனிற்கு ஏற்றதாகவும், இந்தியாவினுடைய நலனிற்கு உகந்ததாகவும் எந்த காலகட்டத்திலாவது இருந்திருக்கிறதா?

தேவசகாயம்: இருந்ததாக நடித்திருக்கிறது. உண்மையாக இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால், தமிழர் பிரச்சனை இதற்கு முன்னாலேயே சுமூகமாகத் தீர்வு ஏற்பட்டிருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இரண்டு மொழியில்லை, பல மொழிகள். 25 மொழிகள், 30 மொழிகள், பல மொழிகள் இருக்கிறது. ஆனா இலங்கையைப் பொறுத்தவரையில் இரண்டே இரண்டு மொழிகள்தான். அதில் ஒரு மொழி 25 விழுக்காடு, இன்னொன்று 75 விழுக்காடு. இங்கே இந்தியாவில் இந்தி ஒரு மொழிதான் 30, 40 விழுக்காடு இருக்கிறதே தவிர, மற்ற எந்த ஒரு மொழியும் அவ்வளவு இல்லை. இந்தியாவில் கூட தமிழர்கள் பொறுத்தமட்டில் 6 விழுக்காடுதான் தமிழ் மொழி பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, ஏன் சுமூகமான ஒரு தீர்வு இலங்கையில் வரவில்லை. வராததற்கு காரணம் என்னவென்றால், இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்களவர்கள் என்றைக்கு தமிழர்களை அடிமையாக வைத்து நடத்த வேண்டும், சம உரிமை கொடுக்கக்கூடாது என்ற கொள்கையை விடாப்பிடியாக் கொண்டுள்ளார்கள். அதற்கு ஒரு தீர்வு கொண்டு வருவதற்கு இந்திய அரசால் ஒன்றுமே பண்ண முடியவில்லை.

webdunia
FILE
இந்திரா காந்தியால் முடியவில்லை, ராஜீவ் காந்தியால் முடியவில்லை, இப்ப வந்திருக்கிற அரசு என யாராலுமே முடியவில்லை. காரணம் சிங்கள இனப் பெரும்பான்மையின் அரசியல் ஆதிக்கப் போக்கு. சிங்களவர்களுடைய பெரும்பான்மை என்றைக்குமே இந்தியாவுடன் ஒத்துப் போவதற்கோ, இணைந்து போவதற்கோ விரும்பியது கிடையாது. இனியும் அது நடக்கப் போவதில்லை.

தமிழ்.வெப்துனியா: இப்ப இந்த அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனையில், இலங்கையினுடைய நாடாளுமன்றத்திலேயே அந்நாட்டு அமைச்சர் ஒருவர் உறுதியாக சொன்னார், இந்தியா உதவவில்லையென்றால், புலிகளுக்கு எதிரான போரில் நாங்கள் வென்றிருக்க மாட்டோம் என்று வெளிப்படையாகவே சொன்னார். ராஜபக்ச சொன்னதையும் நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியிருந்தீர்கள். இந்த அளவிற்கு ‘உதவியும’ கூட, அங்கே ஒரு அரசியல் தீர்வு கொண்டுவர முடியாத நிலையில் இந்தியா இருக்கிறதே?

தேவசகாயம்: காரணம், இலங்கையைப் பொறுத்தவரையில் இந்திய வெளியுறவுக் கொள்கை முழுமையாக தோல்வியடைந்துவிட்டது. எப்பவுமே வெளியுறவை கொள்கை வகுக்கும்போது, Geo Political Interest என்று சொல்லக்கூடிய பூகோள நலன் இருந்ததாக இவர்கள் அனுமானித்தார்களே தவிர, அந்த பூகோள நலன் இந்தியாவிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை, செய்யவும் முடியாது. இவர்கள் அனுமானித்ததை வெளியில் சொல்லிவிட்டார்கள். விடுதலைப் புலிகள் இருந்தால் இந்தியாவிற்கு பெரிய ஆபத்து வந்திருக்கும். அவர்களை ஒழித்துக்கட்டினால்தான் இந்தியாவிற்கு ஆபத்து தீரும் என்று சொல்வது சரியான கருத்து அல்ல. விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு ஒருநாளும் அச்சுறுத்தலாக இருந்தது இல்லை. 20 வருடத்திற்கு முன்பு ராஜீவ் காந்தியை கொலை செய்தார்கள். அதில்கூட பலவிதமான அபிப்ராயங்கள் இருக்கிறது. அதில் நான் போக விரும்பவில்லை. ஆனால், அந்தவொரு காரணத்தை வைத்து விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு அச்சுறுத்தலா இருந்தார்கள் என்று சொல்வது மிகவும் தவறு.

மாறாக சிறிலங்க அரசு - இந்த counter force (விடுதலைப் புலிகள்) இல்லாத நிலையில் - பலமாக இருந்திருக்குமானால் (சீனாவுடன் சேர்ந்திருப்பதால்) அதுதான் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக வரமுடியும். இப்பொழுது சீனாவுடன் முழுமையாக சேர்ந்தாகிவிட்டது. எல்லா விஷயத்திலும்
webdunia
FILE
சீனாவையே அந்நாடு சார்ந்துள்ளது. சீனாவிடமிருந்துதான் பல ஆயிரம் கோடிகளில் அவர்களுக்கு உதவி வந்துக் கொண்டிருக்கிறது. பலவிதமான பெரிய பெரிய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இரண்டே இரண்டு அம்சங்களில் மட்டுமே சிறிலங்கா இந்தியாவைச் சார்ந்துள்ளது. ஒன்று ஆயில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அங்கே இருக்கிறது. ஏனெனில் நாம் பக்கத்தில் உள்ளோம், சீனாவில் இருந்து கொண்டுவருவது கடினம். இன்னொன்று மின்சாரம். இப்ப கடலுக்கு அடியில் கூட மின்சாரம் கொண்டு போகலாம். இந்த இரண்டுக்காகத்தான் இந்தியா கூட உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டும் தேவையில்லை என்றால் இந்தியாவுடனான உறவை துண்டித்துக் கொள்வார்கள். சிறிலங்கா முழுமையாக சீனாவினுடைய கட்டுப்பாட்டில் போய்விடும். அதுதான் நடக்கப் போகிறது.


தமிழ்.வெப்துனியா: இலங்கையை தங்களுடைய நட்பு நாடாக மாற்றிக்கொள்ள நேரு காலத்திலிருந்தே பல்வேறு முயற்சிகளை இந்தியா எடுத்தது. அதற்காகத்தான் அன்றையப் பிரதமர் சாஸ்திரி கூட, அங்கே சென்று இலங்கைக்கு கொண்டு சென்று தோட்டத் தொழிலாளர்களாக குடியமர்த்தப்பட்டு 150 ஆண்டு காலமாக வாழ்ந்துக் கொண்டிருந்த மலையகத் தமிழர்களையெல்லாம் திரும்பப் பெறுவதற்கு கூட ஒப்புக்கொண்டார். அதேபோல, அங்கே உள்நாட்டுக் கலவரம் தெற்கில் வெடித்தபோது கூட ஜனதா விமுக்தி பெரமுணாவை ஒடுக்குவதற்கு இங்கிருந்த படைகளை அனுப்பி உதவினார்கள். அப்படியெல்லாம் இருந்தும்கூட அந்த நாடு நம் பக்கம் வரவில்லை. இவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்றால், சீனாவினுடைய பிடிக்குள் இலங்கை சென்றுவிடாமல் தடுப்பதுதான் இந்த ராஜதந்திர நகர்வுகளின் நோக்கம் என்று கூறுகின்றார்கள். அது உண்மையா? அது இப்போது நிறைவேறியுள்ளதா?

தேவசகாயம்: அது முற்றிலும் பொய். அது நிறைவேறவும் இல்லை, நிறைவேறவும் முடியாது. நான் முன்பே சொன்னது போல், இந்தியாவினுடைய வெளிநாட்டுக் கொள்கை மிகவும் பலவீனமானது. அமெரிக்கா கூட, ரஷ்யா கூட, சீனா கூட இருந்தாலும் சரி மிகவும் பலவீனமான கொள்கையாகத்தான் இருந்துகொண்டு இருக்கிறது. ஒரு சுதந்திரமான, பலமான கொள்கையாக எப்பவுமே இல்லை. ஆரம்பத்திலிருந்தே ஜவஹர்லால் நேரு காலத்திலே கூட Non Aligned Policy என்ற அடிபணிந்து போகிற பாலிஸியாகத்தான் இருந்தது. இப்ப சிறிலங்கா பிரச்சனையில் இந்தக் கொள்கை எவ்வளவு மோசமானக் கொள்கை, தோல்வியடைந்தக் கொள்கை என்பது தெரிந்துவிட்டது. இப்ப என்னவென்றால், இலங்கையை இந்தியாவே சீனாவிற்கு தாரைவார்த்த மாதிரி ஆகிவிட்டது. இந்தியா நினைத்திருந்தால், இலங்கையை அச்சுறுத்தி தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். தமிழர்கள் அங்கே இருந்திருந்தால் இந்தியாவிற்கு உறுதுணையாக, மிகவும் பக்கபலமாக ஒரு பெரிய சக்தியாக (Force) அங்கே இருந்திருக்கும். அப்படி இருக்கும்போது சிறிலங்கா என்றைக்குமே சீனா பக்கம் போக முடியாது.

ஏனென்றால், ஈழம் இல்லாவிட்டால் கூட தமிழர்கள் அங்கே சம உரிமை பெற்று அங்கே இருந்திருந்தால் இலங்கையில் கடல் பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். இலங்கையைப் பொறுத்தவரையில் முக்கியமானது கடல் பகுதி. அது தமிழர்கள் கட்டுப்பாட்டில் அதிகம் இருந்திருக்கும். அப்படி இருந்திருக்கும்போது சீனா என்றைக்குமே அங்கே ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியாது. தமிழர்களை ஒழித்துக்கட்டியதால், இந்தியாவே சிலங்காவை சீனாவிற்கு தாரைவார்த்துவிட்டதாக ஆகியுள்ளது. இனி நடைபெறப் போகும் விளைவுகள் பற்றி நம்மால் சிந்திக்கக்கூட முடியவில்லை. ஏனென்றால், தமிழர்களை அழித்து ஒழித்துவிட்டோம் என்று ஒருபக்கம் சொல்லிவிட்டு, இலங்கையில் 3 லட்சத்திற்கும் அதிகமான ராணுவம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்பவே இரண்டு லட்சத்திற்கு மேல் இருக்கிறது. இன்னமும் ஒரு லட்சத்திற்கு மேல் பண்ணப் போகிறார்களாம். அந்த ராணுவத்தை train, equip பண்ணப் போவதெல்லாம் பாகிஸ்தானும், சீனாவும். அந்த மூன்று லட்சத்தை பார்த்தீர்களென்றால், உலகத்திலேயே 8வது இடத்தில் வரும். இவ்வளவு சிறிய நாடு, எதிரிகளே இல்லாத நாடு, எதிரிகளே கிடையாது. இப்ப இந்த 3 லட்ச ராணுவத்திற்கே அந்த சின்ன நாட்டினுடைய பொருளாதாரமே முழுவதும் உடைந்துபோகும்.

தமிழ்.வெப்துனியா: என்ன அவசியம் இருக்கிறது?

webdunia
WD
தேவசகாயம்: என்ன அவசியம்னா, சீனாவிற்கு ஏஜெண்டா வேலை செய்றதுக்குதான். வேற என்ன அவசியம். சிறிலங்காவால் தனியாக இந்தியா மீது எதுவும் செய்ய முடியாது. 3 லட்சம் ராணுவம் வந்தாலும் சரி, 5 லட்சம் ராணுவம் வந்தாலும் சரி. நேரடியாக இலங்கை இந்தியாவை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. பண்ணவும் அதற்கு தைரியம் கிடையாது. ஆனால், அவர்கள் சீனாவிற்கு உறுதுணையாக இருந்து செய்யலாமே. சீனா இருக்கிறது, இந்தப் பக்கம் பாகிஸ்தான், தெற்கே இவங்க, நாலு பக்கமும் நம்மை சூழ்ந்தாகிவிட்டது. நாளைக்கு அவர்கள் சொல்வது மாதிரிதான் நாம் கேட்க வேண்டும். கடந்த நான்கைந்து வருடமாக, குறிப்பாக கடந்த ஒரு வருடமாக இந்தியாவினுடைய அயலுறவுக் கொள்கை சிறிலங்காவை மையப்படுத்தி நடந்தது, சிறிலங்காவோ இந்தியாவை சாதகமாக எடுத்துக் கொண்டது.

தமிழ்.வெப்துனியா: இப்படிப்பட்ட ஒரு மோசமான கொள்கை வகுப்பிற்கு காரணம் யார்?

தேவசகாயம்: காரணம் யாரென்று தெளிவாக பேரைச் சொல்ல முடியாது. ஆனால், கடந்த மூன்று நான்கு வருடங்களாக நடந்த நிகழ்வுகளைப் பார்த்தால், இது ஒரு குரூப், இடதுசாரி கொள்கையைக் கொண்டக் குழு, இடது கொள்கையை மையமாகக் கொண்டக் குழு (Left Oriented Group, Left Centered Group) இதனை வகுத்து வந்துள்ளது. 1990, 91 வரை இந்தியாவினுடைய வெளியுறவுக் கொள்கை அமெரிக்கா, சோவியத் யூனியன், இவர்கள் இரண்டு பேரும் சமமானவர்கள். சூப்பர் பவர். சோவியத் யூனியன் உடைந்து போய்விட்டது. 10, 15 நாடுகளாகிவிட்டது. ரஷ்யா மட்டும் பெரிய நாடு. ஆனால், அதன் பொருளாதாரமும் மிகவும் பலவீனமாகிப் போய், அமெரிக்கா முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி சூப்பர் பவராக உருவாகிவிட்டது. அப்படி உருவாகிக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய பொருளாதார சக்தி, இராணுவ சக்தி எல்லாவற்றையும் வைத்து அவர்கள் ஆதிக்கம் செலுத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தியா வந்து முழுவதுமாக 91லிருந்து 96 வரை பார்த்தீர்களென்றால், நரசிம்ம ராவ் பிரதமர், மன்மோகன் சிங் நிதி அமைச்சர். இவர்கள் போட்ட எல்லா திட்டங்களுமே (அஜெண்டா), அமெரிக்கா சொன்ன அஜெண்டாதான். அமெரிக்கச் சார்பு என்பது மட்டுமல்ல (Pro America), முழுவதுமே அமெரிக்க அஜெண்டாதான். அமெரிக்கா அவர்களுக்கு என்ன தேவைப்பட்டதோ அதை இந்தியாவில் செய்து கொண்டிருந்தார்கள். அது நிதிச் சீர்த்திருத்தம், உள்கட்டுமானம் (Financial Reform, Infrastructure) என்றஎதுவானால் சரி அமெரிக்காதான் முழுவதுமாக இயக்கிக் கொண்டிருந்தது. ஆனால், அதே நேரத்தில் இந்தியாவில் எப்பவுமே ஒரு இடதுசாரிக் குழு (Left Group) இருந்துகிட்டே இருந்தது. இது மிகவும் சக்தி வாய்ந்த இடது குரூப் (Powerful Left Group). இந்த குரூப் எப்பவுமே அமெரிக்காவை Balance செய்து கொண்டு ரஷ்யாவையும் Balance செய்து கொண்டிருந்தது. அந்த குரூப் பிறகு ரீ-குரூப்பாகிறது.

அதற்குப் பிறகு சோவியத் யூனியனை தள்ளிவைத்துவிட்டு, ஏனென்றால் அது உடைந்துவிட்டது. 90களில் சீனா மேலே வரும்போது, பொருளாதாரத்திலும் அது வல்லரசாகவும் உருவாகிக் கொண்டு வருகிறது. இந்த Left Leaning குரூப், முன்பு நமக்கு ரஷ்யாவுடன் என்ன உறவு இருந்ததோ அதேபோல், சீனாவுடன் உறவு வைத்துக்கொண்டது. ரஷ்யாவிற்கும் நமக்கும் எல்லை கூட கிடையாது. ஏனென்றால், அது அந்தப் பக்கம் இருக்கிறது. ஆனால், சீனாவுடன் போகும்போது நேரடியாக பாதிக்கும். ஏனென்றால் சீனா நமக்கு அண்டை நாடு. ஆனால் மற்ற அண்டை நாடுகளெல்லாம் சீனாவுடன் இருந்திருக்கிறது. பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், பர்மா, இப்போ சிறிலங்காவும் வந்துவிட்டது. இந்த வகையில் ஒரு சார்பு அணி (லீனிங் குரூப்) அரசியலிலும் இருந்தது. டெல்லியில் அதிகார வட்டத்தில் (பீரோகிரட்டிக் சர்க்கிளில்) அரசாங்க சர்க்கிளில் ஒரு குரூப் இருக்கிறது.

இந்தியாவினுடைய கடந்த 4 அயலுறவு செயலர்கள் சீனாவில் தூதர்களாக இருந்தவர்களே, இப்ப இருக்கின்றவரையும் சேர்த்து. சீனாவில் தூதராக இருந்து வந்ததால் அவர்களுக்கு சீனாவைப் பற்றி நன்றாகத் தெரியும் அப்படின்னு சொன்னாங்க. ஆனால், அது என்ன அஜெண்டாவில் வந்து விழுந்ததோ நமக்குத் தெரியாது. இதை தீவிரமாக புலனாய்வு பண்ணனும். எப்படி நமக்கு சீனா பாலிசி, சிறிலங்கா பாலிசி உருவானது? ஏன் உருவானது? அதனால் இந்தியாவிற்கு புவியியல் அரசியலில் என்ன ஆதாயம் ஏற்பட்டிருக்கிறது? என்பதை ஒரு முழுமையான ஆய்வு பண்ணதான் நமக்குத் தெரியும். அதைவிடுத்து யார் என்ன பன்றாங்க அப்படின்னு பேரைச் சொல்வது முடியாது. ஆனால், நடந்தது வாஸ்தவம்.

இந்த கொள்கை இப்படி உருவாகி, இப்படி தோல்விகண்டு சிறிலங்கா சீனாவிற்கு உறுதுணையாக சென்றதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்ததே இந்தியாதான்! இதனால் இந்தியாவிற்கு எவ்வளவு பாதிப்புகள், கொஞ்ச நாட்களாக சீனாவிலிருந்து நமக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருந்தது. என்றைக்கு சிறிலங்கா போர் தீர்ந்ததோ, தமிழர்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டினார்களோ அன்றையிலிருந்து ஆரம்பித்துவிட்டது. மூன்று நான்கு விதமாக ஆரம்பித்துவிட்டது. ஒன்று, இந்தியாவை வந்து பத்து பதினைந்து நாடாக பிரித்துக்கொள்ளட்டும் என்று சொல்கிறான். அப்புறம் இந்தியா பாதுகாப்பு ரிவீவ்ல எடிஷன் எழுதுறாரு, இன்னும் மூன்று வருடத்திற்குள் சீனா இந்தியாவை தாக்கும்னு எழுதுறாரு.

அவங்களே இன்குளூட் பண்ணி அட்டாக் பண்ணு‌‌‌‌‌ம்‌கிறா‌ங்க. அப்புறம் அருணாச்சலப் பிரதேசத்தில நம்ம திட்டம் போடக்கூடாதுன்னு ஏசியன் டெவளப்மெண்ட் வங்கியில் நிதியைத் தடுக்கிறான். அப்புறம் அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியான்னு சொல்லக்கூடாதுன்றான். பல இடங்களில் பல விதமாக சீனா நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அவன் இதற்காகத்தான் காத்துக்கிட்டு இருந்ததாகத் தெரிகிறது. இலங்கையில் தமிழர்களை ஒழித்துக் கட்டுவதற்குத்தான் இவர்கள் காத்துக் கொண்டு இருந்து, அது நடந்து முடிந்து உடன் இந்தியாவிற்கு எதிராக அவர்கள் போர் தாண்டவத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழ்.வெப்துனியா: இந்த மாதிரியான சூழலுக்கு, இந்தியாவினுடைய சிறிலங்கா ஆதரவு நிலைக்குக் காரணம் ராஜீவ் காந்தி படுகொலையினால் பாதிக்கப்பட்ட மனநிலையில் சோனியா காந்தி இருந்ததாலேயும், அந்த ஆதரவுதான் இந்த அளவு ராஜபக்ச அரசிற்கு இந்தியா உதவக் காரணம் என்ற கருத்து இங்கே பொதுவாக நிலவுகிறதே.

webdunia
FILE
தேவசகாயம்: அந்த கருத்து சரியானதாகத் தெரியவில்லை. ஆனால், அந்தக் கருத்தையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த இடதுசாரி ஆதரவுக் குழு என்று சொன்னேன் இல்லையா, அவங்க இதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். சோனியா காந்தி இதைச் சொன்னார்களோ, சொல்லவில்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், இது இவ்வளவு தூரத்திற்கு தாக்கம் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. ஏனென்றால், அப்படி செய்திருந்தால் சோனியா காந்தி மகள் பிரியங்கா காந்தி நளினியை வந்து சந்திக்க வேண்டிய தேவையே இல்லை. நளினியை வெளியே கொண்டு வருவதற்குக் கூட அவங்க முயற்சி செய்திருக்கிறார்கள். இந்த குரூப் அதைச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நான் போன வாரம் டெல்லிக்கு போயிருந்தபோதும், ஒரு மூத்த பத்திரிக்கையாளரும் இதையேதான் சொல்கிறார். சேம் பர்சப்சன், அந்த பர்சப்சன், தே ஆர் டேக்கன் அட்வான்டேஜ் ஆஃப் தட். அதை யாரும் கவுண்ட்டர் பண்ண முடியவில்லை. அது ஒரு சாக்கு போக்காகத்தான் நடந்திருக்கிறதே தவிர, என்னைப் பொறுத்தமட்டில் அது அடிப்படை மாதிரித் தெரியவில்லை.

தமிழ்.வெப்துனியா: இப்படிப்பட்ட சூழலில், அங்கே போர் முடிந்து 3 லட்சம் மக்கள் முகாம்களில் அகதிகளாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். வதை முகாம்கள் அளவிற்கு இருக்கிறது அங்கே. சித்திரவதை நடப்பது வெளியே வந்திருக்கிறது. அங்கே அவர்களுக்குப் போதுமான உணவு மற்ற வசதிகள் எல்லாம் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. சமீபத்தில் மழை பெய்த பொழுது கூட மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் அந்த மக்களை அங்கிருந்து மீட்டு வெளியில் கொண்டு வருவதற்கு என்ன வழி?

தேவசகாயம்: உலக நாடுகள் பல நாடுகளில் இருந்து கண்டனம் வந்துக் கொண்டிருக்கிறது. வெளியில் கொண்டு வருவதற்கு இரண்டே இரண்டு வழிதான். ஒன்று ஐ.நா. உறுதியாக செயல்பட வேண்டும் அல்லது இந்தியா உறுதியாக செயல்பட வேண்டும். சீனாவை பொறுத்தமட்டில் அவங்க நாட்டில் என்ன நடக்கிறதோ அதுதான் சிறிலங்காவில் நடக்கிறது.

தமிழ்.வெப்துனியா: அடக்குமுறை...?

தேவசகாயம்: ஆம், அடக்குமுறை. அதுவொரு சர்வாதிகார நாடு. இப்பொழுது இலங்கையும் ஒரு சர்வாதிகார நாடு. இந்தியாதான் ஜனநாயக நாடு. மனிதாபிமான பிரச்சனைகள், மனித உரிமை பிரச்சனைகள் இவற்றிற்கெல்லாம் கொஞ்சமாவது மதிப்பளிக்ககூடிய நாடு இந்தியா. சீனாவில் ஒரு மதிப்பும் கிடையாது. அப்புறம் ஐக்கிய நாடுகள். அவங்க அந்த பவர் இருக்கு. எல்லாம் இருக்கு. ஆனால், ஐக்கிய நாடுகள் ஒரு சொத்தை மாதிரி ஆகிவிட்டது. ஒரு நடைபிணம். இதைவிட வேறு சொல்வதற்கு என்னிடம் வார்த்தை இல்லை. சிறிலங்காவில் கடந்த ஒரு வருடமா, இரண்டு வருடமா என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஐ.நா. ஒரு நடைபிணமாகத்தான் இப்போது இருந்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் செல்வாக்கு (இன·ப்ளூயன்ஸ்) அங்கே கூட இருக்கிறது. இந்த லெப·ப்ட் லீனிங் குரூப்ல ஒரு முக்கியமான ஆளு அங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்.வெப்துனியா: விஜய் நம்பியார்?

தேவசகாயம்: ஆமாம். விஜய் நம்பியார். United Nations chief of staff. அவர்தான் இவருக்கு (பான் கீ மூன்)
webdunia
FILE
வலது கை. இவர் முன்னாள் அமைச்சரா இருந்தார். கொரியாவில் இருந்தார். அமெரிக்காவில் அவர் சக்திவாய்ந்த ஆளுமைப் பெற்றவர் இல்லை. செக்ரட்ரி ஜென்ரல். கீழே யார் ஆட்டி வைக்கிறார்களோ அதன்படி ஆடுகிறார். அதனால, ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து ஒரு நடவடிக்கையும் இதுவரை உறுதியாக எடுக்கப்படவில்லை. மற்ற சில ஐரோப்பிய நாடுகள் மிகவும் கவலைப்பட்டு அறிக்கையெல்லாம் கொடுத்துக்கிட்டிருக்காங்க. ஆனால், அவங்களெல்லாம் இந்தியாவை பார்த்துக்கிட்டிருக்காங்க. அவங்க என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், சிறிலங்கா இந்தியாவினுடைய செல்வாக்கில்தான் இருக்கு. இந்தியா ஒரு நிலை எடுத்தாதான் எதுவும் நடக்கும். ஆனால், இந்தியா இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. அதே (இடதுசாரி) குரூப், இந்தியாவிற்கு எதிராக, இலங்கையை சீனாவிற்கு தாரைவார்த்த அதே குரூப்தான் இப்ப செல்வாக்குப் பெற்றதாக இருக்கு. இந்த அரசு வந்தபிறகு முன்பை விட பவர் அதிகமாகிவிட்டது. இந்த குரூப் இங்கிருந்து நீக்கப்பட்டு ஒரு சுதந்திரமான அயலுறவுக் கொள்கை வரும் வரை...


தமிழ்.வெப்துனியா: இந்தியாவின் நலனை மையமாகக் கொண்ட ஒரு அயலுறவுக் கொள்கை வகுக்க (India centric foreign policy)...

தேவசகாயம்: ஆமாம். இந்தியா முன்வந்து பாதுகாக்கும் வரை (இலங்கையில் அகதிகள் பாவம் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்). ஆனால், இந்தியா முன்வந்து நேரடியாகவோ அல்லது ஐ.நா. வழியாக செய்தால்தான் இதற்கு தீர்வு வரமுடியும். ஆனால் இந்தியா இப்போதைக்கு பண்றதா இல்லை. அவர்கள் என்ன கொள்கை எடுக்கப் போகிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை. ஆனால், இந்த புதிய அரசு வந்து 100 நாட்களுக்கு மேலே ஆகிவிட்டது. ஒரு மாற்றமும் இல்லை. முந்தைய நிலையை விட மோசமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.

தமிழ்.வெப்துனியா: இப்படிப்பட்ட ஒரு சூழலில், இலங்கை தொடர்பான தமிழ்நாட்டினுடைய அரசியல். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள். அவர்கள் இன்னமும் தொடர்ந்து சிறிலங்க கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள். மீனவர்கள் தமிழக அரசோடு பேச்சுவார்த்தை கூட நடத்தயிருக்கிறார்கள். கச்சத்தீவை மீட்கணும், தங்களுடைய மீன் பிடி உரிமை முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். தங்களுக்கு பாதுகாப்பாக தொழில் செய்யக்கூடிய உரிமை வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டினுடைய அரசியல் களத்தில் எப்படிப்பட்ட செயல்பாடு இருந்தால் இதெல்லாம் பாதுகாக்கப்படும்?

webdunia
FILE
தேவசகாயம்: தமிழ்நாட்டு அரசியல், இலங்கை பிரச்சனையை பொறுத்தமட்டில் முழு முழு தோல்வி. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 5 வருடம் ஆட்சி செய்து முடித்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசியல்வாதிகள், எம்.பி.க்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்காம இருந்திருந்தா அடுத்த நாளே இது முடிந்து போயிருக்கும். அதாவது போன தடவை யு.பி.ஏ. அரசு நடந்தியதற்கே தமிழ்நாட்டினுடைய 40 எம்.பி.க்கள்தான் காரணம். இவர்கள் 40 எம்.பி.க்களும், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. அதாவது, டெல்லி, இலங்கைத் தமிழர்களை துரோகம் பண்ணியதைவிட, தமிழ்நாடு அரசியல்வாதிகள் பண்ணயதுதான் அதிகமான துரோகம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனக்கு, மிகவும் வேதனையாக சொல்ல வேண்டியது கருத்து இது. இவர்கள் நினைத்திருந்தால் இந்தியாவின் கொள்கையை மாற்றியிருக்க முடியும். இந்தியாவின் சரியான தமிழின பாதுகாப்பு கொள்கையை வகுத்திருக்க முடியும். இந்தியாவினுடைய பாதுகாப்பையும் உறுதிசெய்திருக்க முடியும். எல்லாவற்றிலுமே தவறிவிட்டார்கள். எதற்காக தவறினார்கள்? என்ன காரணம்? எனக்கு சந்தேகங்கள்தான் இருக்கிறதே தவிர, தெளிவாகக் கூற முடியவில்லை.

தமிழ்.வெப்துனியா: நன்றி ஐயா, மிக மிக விரிவாக இந்தியாவினுடைய அயலுறவுக் கொள்கை எந்த அளவிற்கு நம்மை சீனாவிற்கு அடிமைப்படுத்துகிறது என்பதையும், இது எப்படி தமிழர்களுடைய பிரச்சனையில், தமிழர்களுக்கு எதிராகப் போய் கடைசியில் அது இந்திய பாதுகாப்பினுடைய நலனிற்கும் அச்சுறுத்தலாகிவிட்டது என்பதையும் எடுத்துக் கூறினீர்கள். இந்த சந்திப்பிற்கு இசைந்தமைக்கு மிக்க நன்றி.

தேவசகாயம்: நன்றி.

Share this Story:

Follow Webdunia tamil