உலகில் விக்கெட் கீப்பர்கள் பேட்ஸ்மெனாக ஒரு அணியில் தடாலடி அடிப்பது என்பது சமீபத்திய விஷயம்தான். ராட் மார்ஷ், மேற்கிந்திய அணியின் டெரிக் முர்ரே, இங்கிலாந்தின் ஆலன் நாட், மேற்கிந்திய அணியின் ஜெஃப் டியூஜான் என்று பட்டியல் இருந்தாலும் இரட்டைசதம் என்பது சமீபத்திய நிகழ்வுதான்!
ஆடம் கில்கிறிஸ்ட் வந்தபிறகே விக்கெட் கீப்பர் ஒருவர் இறங்கி கன்னாபின்னாவென்று அடிப்பது என்பது நிகழ்ந்தது. அதற்கு முன்னர் இலங்கை விக்கெட் கீப்பர் கலுவிதரன தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அதிரடி சதம் கண்டார். அவர் எடுத்த 130க்கு மேற்பட்ட ரன்களில் 80 ரன்கள் ஷேன் வார்னை மட்டுமே அடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் ஒருநாள்கிரிக்கெட்டில் அச்சமூட்டும் வீரராக இருந்தார். அதன் பிறகு காணாமல் போய் விட்டார்.
இந்த நிலையில் ஆடம் கில்கிறிஸ்ட் 2002ஆம் ஆண்டு ஜொகன்னஸ்பர்க் மைதானத்தில் அடித்த அதிரடி இரட்டைச் சதம் டெஸ்ட் வரலாற்றில் அதிவேக இரட்டைச் சதமாக சிறிது காலம் இருந்தது. பிறகு நேதன் ஆஸ்டில், சேவாக் அதனை முறியடித்தனர்.
சென்னையில் அன்று ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக தோனி அடித்த இரட்டைச் சதமும் கில்கிறிஸ்டின் இன்னிங்ஸுடன் ஒப்பு நோக்கத்தக்க அதிரடி இன்னிங்ஸே.
முதலில் கில்கிறிஸ்ட்: ஆஸ்ட்ரேலியா 293/5 என்று சற்றே வசதியாகத்தான் இருந்தது. அப்போது களமிறங்கினார் கில்லி. ஆலன் டோனல்ட், நிடினி,ஜாக் காலிஸ் பந்து வீச்சுகளை அன்று கில்கிறிஸ்ட் துவம்சம் செய்தது மிகப்பெரிய அதிர்ச்சியை தென் ஆப்பிரிக்க அணியினரிடையே ஏற்படுத்தியது.
19 பவுண்டரி 8 சிக்சர்களுடன் கில்கிறிஸ்ட் 204 பந்துகளில் 200 ரன்களை எட்டினார். பிறகு 204 எடுத்திருந்தபோது ஆஸ்ட்ரேலியா 652/7 என்று டிக்ளேர் செய்தது. ஒருமுறை காலிஸ் கேட்சை விட்டார். ஆனால் தோனிக்கு லைஃப் இல்லை. கிளார்க் விட்டதெல்லாம் கேட்சில் சேர்த்தியில்லை.
அந்த இன்னிங்ஸில் கில்கிறிஸ்ட் ஒரு சிக்சரை அடித்தார் அது ஒரு பரிசுப் பலகைக்கு சற்று தள்ளிச் சென்றது. அந்தப் பரிசுப் பலகையை பந்து தொட்டிருந்தால் கில்கிறிஸ்ட் ஒரு தங்கக் கட்டியை பரிசாக வென்றிருப்பார்.
தோனியின் இன்னிங்ஸ் சற்றே கடினமான சூழ்நிலையில் வந்தது இந்தியா 196/4 என்று இருந்தது. தோனி வந்தது முதலே விளாசத் தொடங்கினார். ஸ்பின்னர் லயன், பேட்டின்சன், சிடில், புது முகம் ஹென்ட்ரிக்ஸ் என்று யாரையும் விட்டுவைக்காமல் அனாயாச அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
தோனி 24 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என்று துவம்சம் செய்தார். இந்த இரண்டு மகா இன்னிங்ஸ்களில் ஒற்றுமை என்னவெனில் ஆட்டம் இருதரப்பினருக்கும் சாதகமாக 50 ௫0 என்று இருந்ததே. ஆனால் சென்னையில் தோனி ஆடிய பிட்ச் சற்றே கடினமானது. தோற்றிருக்கவேண்டிய நிலையிலிருந்து தோனி தனி மனிதனாக வெற்றிக்கு இட்டுச் சென்றார். கில்கிறிஸ்டும் அது போன்ற பல இன்ஙிங்ஸ்களை ஆடியுள்ளார்.
ஆனால் தோனிக்கு இப்போதுதான் அதிரடி முறை ஆரம்பமாகிறது. எனவே இது முடிவல்ல ஆரம்பம்.
நன்றி : யுடியூப்