இயன் சாப்பலின் சிறந்த அணியில் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் இல்லை
, செவ்வாய், 4 ஜனவரி 2011 (19:00 IST)
2010
ஆம் ஆண்டின் சிறந்த உலக கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்துள்ள கிரிக்கெட் நிபுணர் இயன் சாப்பல் அதில் ஒரு ஆஸ்ட்ரேலிய வீரரைக் கூடச் சேர்க்கவில்லை. மாறாக இந்தியாவின் தோனி, டெண்டுல்கர், சேவாக், ஜாகீர் கானைச் சேர்த்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து 5 வீரர்களை தன் சிறந்த அணியில் சேர்த்துள்ளார். டெய்லி டெலிகிராப் பத்திரிக்கையில் இந்த அணியை வெளியிட்ட இயன் சாப்பல். ஒவ்வொரு வீரரைப் பற்றியும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.2006
ஆம் ஆண்டு தனது உலக அணியில் 6 ஆஸ்ட்ரேலிய வீரர்களைத் தேர்வு செய்த இயன் சாப்பல் இந்த முறை ஷேன் வாட்சனுக்கு மட்டும் இடமளித்துள்ளார் அதுவும் 12-வது வீரர் என்ற தகுதி மட்டுமே கொடுத்துள்ளார்.சேவாக் பற்றி குறிப்பிடுகையில், "ஒரு டெஸ்ட் போட்டியின் துவக்க இரண்டு மணி நேர ஆட்டத்திலேயே இவர் வெற்றியைத் தீர்மானிக்கும் அபாய வீரர். இப்போதைக்கு உலகக் கிரிக்கெட்டில் அதி அபாய வீரர் சேவாக்தான்." என்றார்.
சச்சின் டெண்டுல்கர் பற்றி குறிப்பிடுகையில், "பாண்டிங் போல் அல்லாமல் வயதாவதன் தடுப்பணைகளை வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளார். அனைத்தையும் விட முக்கியமானது பந்து வீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்தும் தனது பழைய திறமையை இப்போது கலையாக மாற்றியுள்ளார்." என்றார்.
தோனி மற்றும் ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டதைப் பற்றி இயன் சாப்பல் கூறுகையில், "தோனி சீரான முறையில் பேட் செய்து வருகிறார். அணிக்கு ரன் தேவைப்படும்போது ரன் எடுக்கிறார். விக்கெட் கீப்பராகவும் போதுமான அளவுக்கு திறமை காண்பித்து வருகிறார். ஒரு கேப்டனாக அவரிடம் போதிய அளவு பளீர் தன்மை உள்ளது.
ஜாகீர் கான் ஒரு அபாயகரமான பந்து வீச்சாளராக வளர்ந்துள்ளார். புதிய பந்து, பழைய பந்து இரண்டிலும் அவர் அபாய வீச்சாளர். நல்ல திறமையான அணிகளுக்கு எதிராகவும் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்.
சாப்பலின் 2010 உலக அணி வருமாறு:
சேவாக், கிரேம் ஸ்மித், ஹஷிம் அம்லா, சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், ஏ.பி.டிவிலியர்ஸ், தோனி (கேப்டன்), கிரேம் ஸ்வான், டேல் ஸ்ட்யென், ஜாகீர் கான், ஜிம்மி ஆண்டர்சன்.