முன்னாள் இந்திய கேப்டன், ஸ்டைலிஸ்க் பேட்ஸ்மென் மற்றும் சூதாட்டத் தடை புகழ் மொகமட் அசாருதீன் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வேண்டுமாம்!!!
அதுவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இவரை அணுகினால் உடனே மண்டையை ஆட்டி விடுவாராம்!
சரி கோச் வேண்டாம் ஏதோ ஒரு விதத்திலாவது நான் இந்திய கிரிக்கெட்டிற்கு எனது அனுபவத்தை கற்றுக் கொடுக்க ஆசைப்படுகிறேன் என்று அடுத்தபடியாக கீழிறங்கினார்.
கன்னி ராசி என்று பாண்டியராஜன் இயக்கி பிரபு, ஜனகராஜ் ரேவதி நடித்த படம் ஒன்று வந்தது. அதில் ஒரு காமெடி சீன்: ரேவதிக்கு செவ்வாய் தோஷம் என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் ஜனகராஜ் அவர் மேல் உள்ள காதலால் தன் பெயரில் ஒரு போலி செவ்வாய் தோஷம் ஜாதகம் எழுதிக் கொடுக்க ஜோசியரைத் தேடுவார்.
அப்போது பசி நாராயணன் என்ற காமெடி நடிகர் ஜோசியராக ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருப்பார்.
ஜனகராஜ் அவரிடம் ஜாதகம் எழுதிக் கொடுக்கக் கூறும் முன் அவரது திறமையை பரிசோதிப்பார்:
ஜனகராஜ்: ஆமாம்! எவ்வளவு வாங்குறீங்க.
பசி நாராயணன்: 100. உடனே ஜனகராஜ் 100ஆ? என்பார் உடனே பசி நாராயணன் என் திறமைக்கு ஊர் வாங்கச்சொல்றது 100, ஆனா நான் வாங்குவேனா ஒரு 50 என்பார். ஜனகராஜ் உடனே 50ஆ? என்பார்.
அது மக்கள் எனக்கு கொடுக்க விருப்பப்படறது ஆனா நான் தொட மாட்டேனே ஒரு 25 என்று கடைசியில் 5 ரூபாய் கொடுங்க என்று கெஞ்சும் நிலைமைக்கு இறங்கி வருவார். அந்தக் காலக்கட்டத்தில் மிகவும் பிரசித்தமான காமெடி இது.
அது போல தற்போது அசருதீன், "நான் இந்தியன் டீம் கோச் ஆக ஆசைப்படறேன்" என்கிறார். உடனே அனைவரும் என்னது கோச்சா? என்னுடைய ஃபேன்ஸ் என்னை ஆகச்சொல்றது ஆனா நான் ஒத்துக்கமாட்டேனே ஒரு அசிஸ்டன்ட் கோச்? என்னது அசிஸ்டன்ட் கோச்சா? இது என்னோட திறமைய மதிச்சு பெரியவங்க கொடுக்கற பதவி ஆனா நானா ஏத்துக்கமாட்டேனே. ஒரு மேனேஜர்? என்னது மேனேஜரா? இது என் மனைவியோட ஆசை! எனக்கு மேனேஜர் போஸ்ட்டே பிடிக்காது!
பிசிசிஐ-யில எங்கெயாவது ஒரு ஓரமா உட்கார்ந்துட்டு போறேனே!