உலக கால்பந்து பிரபலமான, அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது கால்பந்து உலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இன்று காலை நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து இறுதி போட்டியில் சிலி அணியினை எதிர்கொண்டது.இரு அணியினரும் ஆட்டத்தின் இறுதி வரை கோல் எதுவும் எடுக்காததால், பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
அதில் தனக்குரிய வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட்டார். இதனால் அர்ஜெண்டினா அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி போட்டியில், அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்ததால், அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து கூறியுள்ள மெஸ்ஸி, “முக்கியமான சர்வதேசப் போட்டியில் அர்ஜெண்டினா சாம்பியனாக வேண்டும் என்பதற்காக கடந்த 9 ஆண்டுகளாகப் போராடினோம். நான்கு முறை முக்கிய போட்டிகளின் இறுதி ஆட்டங்களில் தோல்வி கண்டு அந்த வாய்ப்பை இழந்துள்ளோம்.
எனவே சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதைத் தவிர தமக்கு வேறு வழியில்லை” என்று கூறியுள்ளார்.
'கால்பந்து மன்னன்' லயோனல் மெஸ்ஸி, 29 வயதான இவர் அர்ஜெண்டினா நாட்டின் ரொசாரியோ பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் கால்பந்து போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.
மெஸ்சி 5 முறை உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் விருதினை வாகை சூடியுள்ளார். இதுவரை 113 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 55 கோல்களை அடித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு முதல் அர்ஜெண்டினா கேப்டனாக இருந்து 2014 – உலகக் கோப்பை போட்டியிலும், 2015- கோபா அமெரிக்கா போட்டியிலும் இந்த அணியினை இறுதி போட்டி வரை கொண்டு சென்றுள்ளார்.
இந்த இரு போட்டிகளிலும், போட்டியின் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.