Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழும் விருதுகளும் - தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்

இன்னம்பூரான்
சனி, 26 ஜூலை 2014 (18:31 IST)
விருது வழங்குவது சான்றோர்களின் பெயர்களுக்கு தண்டியலங்காரம் போல் அணி அணிவித்து அழகு பார்க்கும் நற்பண்பு. தமிழ்த் தென்றல் என்றால் திருவாரூர் கல்யாண சுந்தரனார் அவர்கள் (அவர் விருப்பபடி சாதிப் பெயர் இல்லை) மட்டுமே. பாவேந்தர் என்றால் பாரதிதாசன் அவர்கள் தான். சிலம்புச் செல்வர் என்றால் ம.பொ.சிவஞானம் அவர்கள். சொல்லின் செல்வர் என்றால் குழந்தை கூட அது ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களைக் குறிக்கும் என்று சொல்லும். அண்ணாதுரை அவர்களும் பேராசிரியர் மு.வரதராசனார் அவர்களும் நமது பெர்னாட்ஷாவாகப் போற்றப்பட்டனர். நகரத்தார் சமூகத்தில் யாருமே கொடை வள்ளல் அழகப்ப செட்டியார் அவர்களைப் பெயர் சொல்லிக் குறிப்படுவதில்லை. ‘பார்-அட்-லா’ என்றால் அவர் மட்டுமே. ‘தமிழ்த் தாத்தா’ போன்ற ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரையின் நோக்கம் அது அல்ல.
 
விருது என்று சொல்வதை விட, இவற்றை எல்லாம் அடைமொழி எனலாம். அரசாங்கம் வழங்குவதை ‘விருது’ என்பதே சாலத் தகும். மகாத்மா காந்திக்கு விருது கொடுத்தால் அது அரசுக்குத்தான் பெருமை சேர்க்கும். அந்த மாதிரி அமைவதும் உண்டு. மாறாக, ‘ராவ் பகதூர்’ ‘கான் பகதூர்’ போன்ற ஆங்கிலேய அரசின் சிபாரிசுகள் பொறுத்துக்கொள்ளப்பட்டனவே தவிர, பாராட்டப்படவில்லை. அந்த விருதுகள் விருதாவாகத்தான் கருதப்பட்டன. ‘சர்’ எனப்படும் கலோனிய ‘பாரத ரத்னா’ கூட, ‘மயிலை முனிபுங்கவர்’ எஸ். சுப்ரமணிய அய்யர், ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெருந்தகைகளால் உதறப்பட்டது. எனினும், ‘மயிலை முனிபுங்கவர்’, ‘குருதேவ்‘ போன்ற அடைமொழிகள் சாசுவதம் அடைந்தன. ஆக மொத்தம், அடைமொழிகளும் விருதுகளும் இறவாவரம் பெறுவது, மக்களின் ஆதரவைப் பொறுத்து அமையும். பீடிகை முற்றியது.
 
இந்தப் பின்னணியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ் இன்று நமது முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ‘... சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இளங்கோவடிகள் விருதும் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 பேருக்குத் தமிழ்ச் செம்மல் விருதும் வழங்கப்படும்...’ என்று அறிவித்து,’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’ என்று தமிழரின் பழம் பெருமையைப் பற்றி புகழ்ந்து பேசும் புறப்பொருள் வெண்பா மாலையை முன்னிறுத்தி, ‘யாமறிந்த மொழிகளிலே’ நிகரற்ற தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பதிலும், தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தவர்களைக் கௌரவிப்பதிலும் சிறப்பிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டதிற்குப் புகழாரம் சூட்டத்தான் வேண்டும்.
 
தமிழார்வலர்களுக்கு மகிழ்வும் நிறைவும் தரும் செய்தி இது; தமிழார்வம் கூட்டும் தன்மை உடையது. தற்காலம் வழங்கப்படும் விருதுகளை அதிகரித்து, தமிழ் மொழியின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்க விழைந்ததுடன் நிற்காமல் தன்னுடைய அணுகுமுறைக்கு இணங்க, செயலில் இறங்கிய முதல்வர் அவர்களை வாழ்த்தி, ஊக்கம் அளிப்பது நம் கடமை. உலகில் பல பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் இதை வரவேற்பர் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இதே அலைவரிசையில் தமிழுலகமும் சமுதாயமும் தமிழ் வளம் பெற, அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
 
என்னுடைய ஆய்வின் படி கலோனிய அரசு 18 / 19 நூற்றாண்டுகளில் செய்த தமிழ்ப் பணி, 1947க்குப் பிறகு தணிந்துவிட்டது. 18ஆம் நூற்றாண்டில் கலோனிய துரைத்தனத்தாரால் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ்ப் பாடப் புத்தகம் ஒன்று உளது. அத்துடன் ஒப்பியல் செய்தால், தற்காலப் பட்டப் படிப்பின் தரக் குறைவு, வெள்ளிடை மலை. தமிழை ஆட்சி மொழியாகக் கொணர்வது பற்றி, விடுதலை பெற்ற இந்தியாவில் பேச்சுத்தான் அதிகம். செயல்பாடு இன்று வரை இல்லை. 
 
1868ஆம் ஆண்டு கலோனிய அரசு தமிழில் ஆங்கிலேய கலெக்டருக்குத் தாசில்தார்களால் எழுதப்பட்ட மடல்களை ஐ.சி.எஸ். அதிகாரிகளுக்குப் பாடமாக அமைத்தது. இஸ்லாமிய தாசில்தார், வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறார். அந்தணராகிய அதிகாரி, உருதுச் சொற்களை இயல்பாகக் கையாளுகிறார். அந்த அளவுக்குச் சமன்படுத்தப்பட்ட தீவிரம், 1947க்குப் பிறகு காணக் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் தொலைநோக்குப் பார்வையில் 1940இலேயே அண்ணா அவர்கள் தமிழின் இறங்குமுகத்தைப் பற்றி மனவலியுடன் பேசியிருக்கிறார். அவருடைய தம்பிகள் அதைப் பொருட்படுத்தவில்லை என்று தான் தோற்றம் என்பதை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். 
 
வெப்துனியா மூலம் நம் முதல்வரிடம் நான் அவையடக்கத்துடன் முன்வைக்கும் வேண்டுகோள்: 
 
"தயை செய்து இன்றே தமிழை ஆட்சி மொழியாக அறிவித்து, குஜராத்தில் 1960களிலேயே குஜராத்தி ஆட்சி மொழியாக நிலவிய வகையில், அமலுக்குக் கொண்டு வாருங்கள். பள்ளி / கல்லூரிகளில் / பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் படிப்பின் தரத்தை உயர்த்தி, தமிழ்ப் புலமையை வளர்க்கவும் பல நாடுகளில் வாழும் தமிழர் கூட்டத்தின் தணியா ஆர்வம் அளவில் அடங்காது. நாள்தோறும் உலக மேடையில் தமிழன்னை வணங்கப்படுகிறாள். எனவே அவர்களையும் தேர்வடம் பிடிக்க அழையுங்கள்."
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசத்தின் பாதுகாப்பிற்காக ஒட்டு கேட்டால் தவறில்லை: பெகாசஸ் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

கட்டாயப்படுத்தி, மிரட்டி கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை! - தமிழக அரசு அதிரடி!

4 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு.. 234 தொகுதிகளில் சுற்று பயணம்! - வேற லெவல் ப்ளானில் விஜய்!

மே 1 முதல் ஏடிஎம் கார்டு கட்டணம் அதிகரிப்பு.. வங்கி பயனாளர்கள் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட உத்தரவு – உளவுத்துறை எச்சரிக்கை

Show comments