Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தை கே‌ட்டா‌ல் புரட்சி ஓங்கும்

சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தை கே‌ட்டா‌ல் புரட்சி ஓங்கும்
, வியாழன், 14 ஆகஸ்ட் 2014 (18:33 IST)
வ. உ. சிதம்பரம்பிள்ளை கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர். இ‌ந்‌திய விடுதலைப் போராட்ட வீரர். "ஒருநாடு உரிமையோடு விளங்க வேண்டுமென்றால் முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்; இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க வேண்டும். இந்த இரண்டும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான உ‌‌ண்மை. இதனை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நன்றாக உணர்ந்து வாழ்ந்து காட்டியவர் வ.உ.சி" என்று டாக்டர் மு.வ. அவர்கள் சொன்னது போல் நாடு மொழி இரண்டிற்கும் பெருந்தொண்டாற்றிய பெருமகன்.
பிறப்பு - வளர்ப்பு - கல்‌வி : த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் உள்ள ‌திருநெ‌ல்வே‌லி மாவட்டத்தில் ஒ‌ட்ட‌ப்‌பிடார‌ம் எனும் ஊரில் உலகநாதன் பிள்ளை - பார்வதி அம்மை என்பவர்களுக்கு மூத்த மகனாக இவர் பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஓட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895-ல் வழக்கறிஞரானார்.
 
தொழி‌ல் : உரிமையியல், குற்றவியல் ஆகிய இரண்டு சட்டத் துறைகளிலுமே சிறந்து விளங்கிப் பொருள் குவித்தார். தமிழாராய்ச்சி, தத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். விவேகபானு என்கிற மாத இதழை நடத்தி வந்தார். சைவ சித்தாந்த சபை, மதுரைத் தமிழ்ச் சங்கம், வாலிபர் சங்கம், பிரம்ம சங்கம் போன்ற சங்கங்களில் உறுப்பினராகித் தன் அறிவுப் பசிக்குத் திசைதோறும் உணவு தேடினார்.
 
விடுதலைப் போராட்ட ஈடுபாடு முதல்கட்ட‌ம் : சென்னையில் விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு வ.உ.சியின் உள்ளத்தில் விடுதலைக் கனலை ஓங்கச் செய்தது. அதன்பிறகே அவர் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது. தூத்துக்குடி திரும்பியதும், கைத் தொழில் சங்கம், தரும சங்கம், நூல் நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவி சுதேசியம் வளர்க்க ஆரம்பித்தார். வந்தே மாதர முழக்கங்களைத் துணிகளில் எழுதச் செய்து வீதிகள் தோறும் வீடுகள் தோறும் தேசிய உணர்வை வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனதைப் பறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தி்ற்காகப் பாடுபட்டார்.
 
கப்பலோட்டிய தமிழ‌ன: ஆங்கிலேய ஆதிக்கம் கடல் வழி வணிகத்தினால் தான் வளர்ந்தது என்கிற அடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலர் ஆனார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர் வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
 
செக்கிழுத்த செம்ம‌ல் : தொடர்ந்து இவருடைய சுதந்தரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருந்த ஆங்கிலேய அரசு, 1908ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாள் விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவு செய்து, இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது. (அரச நிந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்ரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். அதுவும் அந்தமான் சிறையில்) தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே. 
 
அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கே தான் செக்கிழுக்க வைக்கப்பட்டார். செக்கிழுத்த செம்மல் என்ற பெயரும் இவருக்கு உண்டு. சென்னை உயர் நீதிமன்றம் அவருடைய தண்டனைக் காலத்தைப் பத்தாண்டுகளாகவும், லண்டன் பிரிவியூ கவுன்ஸில், ஆறு ஆண்டுகள் கடுங்காவலாகவும் குறைத்தன.
 
அரசியல் துறவு : அவர் சிறையில் இருந்த காலத்திலேயே சுதேசிக் கப்பல் கம்பெனி நொடித்துப் போனது. 1912 ஆம் ஆண்டு டிசம்பரில் அவர் விடுதலை ஆகி வெளியே வந்தார். தூத்துக்குடி செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் சென்னை செல்ல வேண்டியவரானார். வழக்கறிஞர் பட்டயமும் பறிக்கப்பட்டிருந்தது. சென்னையில் மயிலை, சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் அரிசி வியாபாரம் செய்து வாழ்ந்தார். விடுதலை வரலாற்றில் அந்தக் காலகட்டத்தில் திலகரின் சகாப்தம் முடிந்து காந்தியின் சகாப்தம் வேகம் பெற்றிருந்தது. அதில் வ.உ.சி.க்கு ஈடுபாடு இல்லை என்பதால் கிட்டத்தட்ட அரசியல் துறவு நிலையில் தான் இருந்தார்.
 
தமிழ்ப்ப‌‌ணி : சிறையில் இருந்த நாட்களிலேயே தமிழ் இலக்கிய இலக்கணங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய வ.உ.சி. அவர்களால் தமிழன்னைக்குக் கிடைத்த அணிகலன்கள் பல.
 
திருக்குறள் மணக்குடவர் உரைபதிப்பு
மனம் போல் வாழ்வு (மொழி பெயர்ப்பு தத்துவ நூல்)
அகமே புறம் (தத்துவம்)
மெய்யறம் (ஆன்மீகப்புரட்சி நூல்)
திருப்பொய்கையார் இன்னிலை (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. அதன் உரைநூல்)
தொல்காப்பியம் இளம்பூரணர் உரைபதிப்பு
வலிமைக்கு மார்க்கம் (மொழிபெயர்ப்பு நூல்)
சாந்திக்கு மார்க்கம் (தத்துவம்)
சிவஞானபோத உரை (சைவ சித்தாந்த உரை நூல்)
மெய்யறிவு (அற நூல்)
 
சான்றிதழ்: "சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்"
 
1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது.
 
நினைவு போற்றல்க‌‌ள் : இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் வ.உ.சி பாத்திரத்தில் மறைந்த தமிழ் திரைப்பட நடிகர்‌ ‌‌சிவா‌ஜி கணேச‌ன் நடித்தார்.
 
தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு 1986இல் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது இவருடைய பெயர் தான் அந்த மாவட்டத்துக்கு வைக்கப்பட்டது.
 
இந்திய அரசும் இவரைக் கவுரவித்து அஞ்சல் தலை வெளியிட்டிருக்கின்றது. 
 

Share this Story:

Follow Webdunia tamil