இந்திய மண்ணில் இருந்து வெள்ளையர்கள் வெளியேற்றப்பட்டு 61 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த வெள்ளையர்களை இந்திய மண்ணில் இருந்து விரட்டிய தியாக உள்ளங்களை நாம் நினைத்து பார்க்கிறோமா? அப்படியே பார்த்தாலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மட்டும் அவர்களை நினைவு கூருகிறோம்.
அந்த வகையில் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவை நினைவு கூருவோம்....
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் - அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராக வெளிக் கிளம்பிய போராட்ட வேகத்தைத் தன்னளவில் கொண்டதாக இருந்தது. எங்கும் போராட்ட எழுச்சி, சுதந்திர தாகம் வேரூன்றத் தொடங்கியது.
தமிழகமும் அந்த தேசியப் போராட்ட வேகத்தில் பயணித்தது. பல்வேறு போராட்ட வீரர்களை உருவாக்கியது. வெகுஜன மக்களிடையே தேசிய உணர்வு பீறிட்டெழப் பலர் முயற்சி செய்தனர். தமது சிந்தனையாலும் விடாமுயற்சியாலும் மக்களிடையே எப்போதும் சுதந்திரக் கனல் கனன்று கொண்டிருக்க வைத்தனர். அந்த வகையில் வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதி போன்றவர்கள் தமிழகத்தை வழிநடத்திய முன்னனித் தலைவர்களாவர்.
அவர்களில் சுப்பிரமணிய சிவா, தன்னை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, தீவிர சுதேசக் கிளர்ச்சியாளராக, பத்திரிகை ஆசிரியராக, புரட்சியாளராக, சன்னியாசியாக, சமூக சீர்திருத்தவாதியாக என்று பல தளங்களில் வெளிப்படுத்திக் கொண்டவர். ஆங்கிலேய அதிகாரத்துக்கு எதிராகப் போராடுவதற்கான உகந்த சூழல் உருவானபோது, அதனுள் சிவா தன்னை இணைத்துக் கொண்டது காலத்தின் கட்டாயம்.
இந்நிலையில் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த சந்திரவர்மா நாடெங்கும் சுயராஜ்யப் பிரச்சாரம் செய்து கொண்டு திருவனந்தபுரம் வந்தார். பல கூட்டங்களில் நாட்டு நிலைமையைப் பற்றி விவரித்துப் பேசினார். இந்தக் கூட்டங்களுக்கு தவறாது சென்று வந்த சுப்பிரமணிய சிவா உள்ளத்தில் நாட்டுப்பற்று கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது. நாட்டின் விடுதலைக்காக அனைத்தையும் அர்ப்பணம் செய்வதாக உறுதி எடுத்துக் கொண்டார்.
'தர்ம பரிபாலன சமாஜம்' என்ற பெயரால் ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். இதன் கூட்டங்கள் தனது வீட்டிலேயே நடைபெற ஏற்பாடு செய்தார். தேசிய உணர்வை வளர்த்தெடுக்கும் வகையில் பத்திரிகைகள் வரவழைத்து இளம் தலைமுறையினர் படிக்க வழிசெய்தார். தனது சமாஜ வேலைகளைத் தவிர, தாமே வெளியிடங்களில் பொதுக்கூட்டங்கள் கூட்டிப் பேசினார். நாட்டின் அவல நிலைமையை மக்களுக்கு எடுத்துக் கூறி பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக மக்களைத் தட்டியெழுப்பினார்.
ஊர்தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த சுப்பிரமணிய சிவா, திருநெல்வேலியில் சில காலம் தங்கினார். அங்கே வ.உ.சி.க்கு நல்ல செல்வாக்கு இருந்தது. சுப்பிரமணிய சிவா நடத்திய போராட்டங்களும் பொதுக்கூட்டங்களும் கண்டு வ.உ.சி. அவரை மனதாரப் பாராட்டினார். இதனால் இருவருக்குமிடையே நட்பும் வளர்ந்தது. இருவரும் இணை பிரியா போராட்ட வீரர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர்.
அதே காலத்தில்தான் மகாகவி பாரதியுடன் நட்பு கொண்டார் சுப்பிரமணிய சிவா. இம் மூவருடைய நட்பு, தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சிறப்பிடம் கொண்டது. இவர்கள் மூவரையும் தமிழகத்தின் தேசிய மும்மூர்த்திகள் என்றே குறிப்பிட்டார்கள்.
1919இல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையைத் தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளர்பால் மிகுந்த அன்புடையவர். தொழிலாளர்கள் ஒன்றுபட்டு சங்கம் வைத்து ஒவ்வொரு செயலிலும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்ற கருத்துடையவர். குறிக்கோளை அடைய இருவழிகள் உள்ளன. ஒன்று எந்திரங்களை சேதப்படுத்தி நஷ்டப்படுத்துவது, இரண்டு தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வது. இதில் இரண்டாவது வழியையே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர் சுப்பிரமணிய சிவா.
சிவாவின் உள்ளத்தில் காந்தியின் தாக்கமும் படியத் தொடங்கியது. தமிழ்நாடு என்ற பத்திரிகையில் 'திலகர் - காந்தி தரிசனம்' என்ற சிறு நாடகத்தையும் சுப்பிரமணிய சிவா எழுதியுள்ளார். காந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிரவாதக் தன்மை என்றுமே அடங்கியதில்லை. சுப்பிரமணிய சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அரசாங்கம் அவருக்கு பல வழிகளில் தொல்லையளித்தது.
1921ஆம் வருடம் இரண்டரை வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கியது. பின்னர் 2 வாரங்களில் விடுதலை செய்து விட்டது. பின்னர் 1922ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி ஒரு வருட சிறை தண்டனை அளித்தது. கொடுமையான சிறை வாழ்க்கை காரணத்தால் தொழுநோயும் முற்றியது. அவருடைய நோயைக் காரணம் காட்டி சுப்பிரமணிய சிவாவை ரயிலில் பயணம் செய்யக் கூடாதென்று அரசு தடைவிதித்தது. இதனைக் கண்டு சுப்பிரமணிய சிவா மனம் கலங்கவில்லை. கட்டை வண்டியிலும், கால்நடையாகவும் பயணத்தை மேற்கொண்டு மக்களுக்கு அந்நிய ஆட்சியின் கொடுமைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார்.
சுப்பிரமணிய சிவா பணம் படைத்தவர் அல்லர்; நல்ல மனம் படைத்தவர். சாதி மத பேதம் வெறுத்து பாரத நாட்டு மக்கள் அனைவரும் பாரத ஜாதியினர் என்றும் பாரத மாதாவே வழிபடும் தெய்வம் என்றும் கருதினார். அதையே மக்களிடமும் போதித்தார். பாரத மக்கள் அனைவரும் தத்தம் விருப்பப்படி பாரத மாதாவை வணங்குவதற்கு , ''பாரதாஸ்ரமம்'' ஒன்றை நிறுவத் திட்டமிட்டார். அத்தகையதோர் ஆசிரமத்தை நிறுவுவதன் மூலம் இந்திய இளைஞர்களிடையே ஒற்றுமையுணர்வையும் தேச பக்தியையும் ஏற்படுத்த முடியும் என்று உறுதியாக நம்பினார்.
ஆனால் தன்னுடைய கனவு முழுமையாக நிறைவேறாத நிலையிலேயே மனது சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த சுப்பிரமணிய சிவா, பல்வேறு ஊர்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து வந்தார். இருப்பினும் நோய் முற்றிய நிலையில் தம் பாரதாஸ்ரமத்திலேயே உயிரை விட விருப்பம் கொண்டு, அங்கே வந்தார். 1925ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் இவ்வுலக வாழ்வை நீந்தார்.
ராமகிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்டிருந்த சுப்பிரமணிய சிவா, அவர்களுடைய நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். இப்படிப்பட்ட பன்முகத் திறமை கொண்ட பேரறிவாளர்களின் தியாகத்தால் கிடைத்த சுதந்திர நாட்டில் வாழும் நாம், அவர்களின் தியாக வாழ்வைப் போற்றி அஞ்சலி செய்வோம்!