(1908
ஆம் ஆண்டு மராட்டிய மாநிலம் நாசிக் நகரில் அரபிந்தோ கோஷ் பேசியது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் பம்பாய் மாகாண காவல் துறையின் உளவுப் பிரிவு எடுத்து வைத்திருந்த ரகசிய ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்டது)
எனக்கு நீங்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில், அதற்கு நான் சற்றும் தகுதியற்றவன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதை நான் சொல்வதற்குக் காரணம், எனது செயல்கள் அனைத்தும் இறைவனின் கட்டளையின்படி நடப்பவை, அவனுடைய கையிலுள்ள வெறும் கருவி மட்டுமே நான். எனவே நீங்கள் அளித்த வரவேற்பு எனக்கல்ல, இறைவனுக்கே. அவனுக்கு நாம் நன்றி செலுத்துவோம்.
எந்த பொருளில் பேசப்போகிறேன் என்பதை நான் வரையறுக்கவில்லை, ஆனால் நான் சுயராஜ்யம் பற்றிப் பேசவேண்டும் என்று நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் அதைப்பற்றிப் பேசப் போகிறேன். இதுநாள்வரை நான் ஒரு எழுத்தாளனாகத்தான் இருந்துவந்துள்ளேன், தற்பொழுது பேச்சாற்றலிலும் எனது திறனை வளர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு பொருளிலும் பேசிப் பழக்கப்படாதவனாகையால், அதிலிருந்து விலகிச் சென்று பேசும் நிலையும் ஏற்படலாம்.
கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக ஒரு இயக்கம் நமது நாட்டில் உருவாகியுள்ளது, இறைவனின் அருளாலோ அல்லது அதிருஷ்டத்தின் காரணமாகவோ, அதுவரை நாம் அடைய வேண்டிய இலக்கு குறித்து ஒரு தெளிவின்மை நிலவியது. இந்த நிலையில், கடந்த ஆண்டு கொல்கத்தாவில் நடந்த தேசிய காங்கிரஸின் மாநாட்டிற்கு தலைமை வகித்து உரையாற்றிய தாதாபாய் நவ்ரோஜி, “கனடாவும், ஆஸ்ட்ரேலியாவும் பெற்ற அதே அடிப்படையில் நாமும் சுயராஜ்யத்தை அடைய வேண்டும், அதுவே நமது குறிக்கோள்” என்று பேசியுள்ளார்.
சுயராஜ்யம் என்பதன் உண்மையான பொருள் என்னவென்பதை தாதாபாய் நவ்ரோஜி விளக்கிவிட்டார். ஒரு நாட்டின் மக்கள், தங்களின் சுய பலத்தால், தங்களின் நலனைப் பேண, எந்தவிதமான சிறிய மேலாதிக்கமும் இன்றி, தங்கள் நாட்டை முழுமையாக நிர்வகிப்பதே சுயராஜ்யம் ஆகும். இந்த இலக்கைத்தான் நாம் எட்ட வேண்டும்.
இதனை நாம் சிறிது காலத்திற்கு பேச மறந்துவிட்டோம், பேசுவதற்கும் அஞ்சிக்கொண்டிருந்தோம், அதன் காரணமாக இழி நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
சுயராஜ்யம் என்ற இலக்குடன் நம்மை நாம் ஒன்றிணைத்துக் கொள்ளத் தவறினால், 30 கோடி மக்களாகிய நாம் அழிந்துபோகும் நிலை ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன். மராட்டிய மக்களான உங்களுக்கு சுயராஜ்யம் பற்றி நினைவில் இருக்கும் என்று கருதுகிறேன், ஏனென்றால், ஒரு நூற்றாண்டிற்கு முன்னர்வரை நீங்கள் அதனை அனுபவித்துக்கொண்டிருந்தீர்கள்.
சுயராஜ்யம் என்பதே மூச்சு!
சுயராஜ்யம் என்பதே உயிர், அதுவே நறுமணமும், தீர்வுமாகும். சுயராஜ்யம் என்பது ஒரு தேசத்தின் மூச்சு. மூச்சற்ற மனிதன் பிணம், அதுபோலவே சுயராஜ்யமற்ற தேசமும் உயிரற்றதுதான். எனவே ஒரு தேசத்திற்கு உயிரைப்போன்று முக்கியத்துவம் வாய்ந்தது சுயராஜ்யம். சுயராஜ்யம் அற்ற தேசங்களின் கதி என்ன ஆனது என்பதை வரலாறு நமக்கு காட்டியுள்ளது. தற்பொழுது இங்கிலாந்து எப்படி உலகளாவிய அளவில் பரவிக்கிடக்கிறதோ அதுபோல, ஒரு காலத்தில் உரோம சாம்ராஜ்யம் பல நாடுகளின் மீது தனது இறையாண்மையை செலுத்தி ஆண்டுவந்தது. அந்த பரந்துபட்ட சாம்ராஜ்யத்தில் - இன்று நாம் இருப்பதுபோல - மற்ற நாட்டு மக்களும் அமைதியாகத்தான் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய சொத்துக்களும் - இன்றைக்கு நம்முடையவை போலவே - பாதுகாப்பாகவே இருந்தன. ஆனால், உரோம சாம்ராஜ்யம் வீழ்ந்ததற்குப் பின், அவர்களை சோகம் சூழ்ந்தது, காட்டுமிராண்டிகளிடன் சிக்கி பெரும் துன்பத்தைச் சந்தித்தனர் என்று வரலாறு கூறுகிறது.
எதனால் இந்த துன்பமும், துயரமும்? ஏனெனில் அவர்கள் சுயராஜ்யம் பெற்றிருக்கவில்லை. அதன்பிறகு பல நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவர்கள் ஒன்றுபட்டுப் போராடி சுயராஜ்யம் பெற்றனர், அவர்கள் வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சி பிறந்தது.
சுயராஜ்யத்தை நாம் வென்றெடுக்க வேண்டும்!
இதே காரணத்திற்குத்தான் நமக்கும் சுயராஜ்யம் தேவை, அவசியம். அதனை நாம் நமது சுய முயற்சியின் வாயிலாகவே வென்றெடுக்க வேண்டும். இதனை வேறு வழியில் பெற்றால் - அப்படியொரு சாத்தியம் இல்லை - அது நீண்ட நாள் நீடிக்காது, ஏனெனில் அதனை காப்பாற்றும் பலம் நம்மிடம் இருக்காது.
சுயராஜ்யதை அடைவதற்கு ஒரு வழி, தற்பொழுது நம்மை ஆண்டு வரும் அரசிடம் வேண்டிக் கேட்க வேண்டும், அவர்கள் தர மாட்டார்கள். ஆயினும் நம்மிடையே இன்னமும் சிலர் உள்ளனர், அவர்கள் சுயராஜ்யத்தை கேட்டுப்பெற முடியும் என்று நம்புகிறார்கள், இது மிகவும் வருந்தத்தக்கது. நம்மை நாமே ஆண்டுக்கொள்ளும் திறன் நமக்கு இல்லை என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆளுமையை ஆங்கிலேயர்கள் நமக்கு கற்றுத்தருவார்கள் என்றும், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சுயராஜ்யம் அளிப்பார்கள் என்றும் நம்புகிறார்கள்! இது இந்தியர்களைத் தவிர்த்து, மற்றபடி மானுட இனத்தின் இயற்கைக்கே புறம்பானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்தியாவின் முக்கியத்துவம் குறித்து வெள்ளையர்கள் நன்கு தெரியும். அந்த சொத்துதான் அவர்களுக்கு பெரிய அந்தஸ்த்தை அளித்துள்ளது. இந்தியாவை தங்கள் பிடியில் இருந்து நழுவ அனுமதித்தால் தாங்கள் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவோம் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், வெள்ளையர்கள் நம்மை பயிற்றுவித்து சுயராஜ்யமும் அளிப்பார்கள் என்று நம்புவது முட்டாள்தனமானது.
வெள்ளையர்கள் மீது நம்பிக்கை வைத்ததால்தான் நாம் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டோம். இந்த நிலை நீடித்தால் நாம் ஒன்றுமில்லாமல் அழிந்துவிடுவோம்.
சுயராஜ்யத்தை எட்ட மற்றொரு வழி, நமது அண்டை நாடுகளின் உதவியை நாடுவது. இது கொதிக்கும் எண்ணெயிலிருந்து தப்பிக்க அடிப்பில் குதிக்கும் வழியாகும். நாம் யாரிடம் உதவி நாடினாலும் அவர்கள் முதலில் தங்கள் நலனையே பார்பார்கள். எனவே, நாம் சுயமாக முயற்சித்தே சுயராஜ்யத்தை வென்றெடுக்க வேண்டும்.
எப்படி வென்றெடுப்பது?
எனவே, எப்படி சுயராஜ்யத்தை வென்றெடுப்பது என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். நம்மிடம் சுயராஜ்யமும் இல்லை, அதனைக் காப்பாற்றும் சக்தியுமில்லை. நீச்சலைக் கற்றுக்கொண்டு திறமையாக நீந்த வேண்டுமானால், நீரில் இறங்கிப் போராட வேண்டும் என்பதே அந்தக் கேள்விக்கு பதில். சுயராஜ்யத்தை அடைவதற்கு எப்படிப்பட்ட சோதனைகளையும் தாங்கிக்கொள்ள நாம் தயாராக வேண்டும். இது தவிர வேறு வழியேதுமில்லை.
நமக்கு சுயராஜ்யம் வேண்டும், முழு விடுதலை என்பதே அதன் பொருள். அந்த விடுதலையை நாம் அடைய வேண்டும் எனில், நாம் முதலில் விடுதலையாகவேண்டும். இறைவன் நம்மை சுதந்திர ஜீவியாகவே படைத்தான், எனவே அந்த உணர்வைப் பெறவேண்டும். இறைவனின் மீது நம்பிக்கை வைத்து, பரந்து விரிந்த இந்த நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று விடுதலை வேட்கையை உருவாக்கவேண்டும். அதற்கு முக்கியத் தேவை தேசக் கல்வி.
வெள்ளையர்கள் தங்கள் கல்வியை இங்கு பரப்பினார்கள், அதற்காக இப்பொழுது வருந்துகிறார்கள். அதனால்தான் கர்சன் ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளார். நமது மக்கள் சட்ட ரீதியான, நிர்வாக ரீதியான கடமைகளை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும். தங்களுக்கு இடையிலான தகராறுகளை (ஆங்கில அரசின் நீதிமன்றங்களுக்குச் செல்லாமல்) தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும்.
சுதேசி இயக்கமும், அந்நிய துணி புறக்கணிப்பும் ஏற்படுத்திய மாற்றங்களைக் கவனியுங்கள். வங்காளிகளான நாங்கள் இதனை முழுமையாக ஏற்று அதில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த இந்திய மக்கள் அனைவரும் கடைபிடித்தாலே போதும் பாதி சுயராஜ்யத்தைப் பெற்றுவிடலாம். நமது எதிரிகள் தூங்கிக்கொண்டிருக்க மாட்டார்கள். நமது சுதந்திரப் போராட்டம் என்பது இறைவன் நமக்கு இட்ட கட்டளையாகும், அதற்கு நாம் தலை வணங்க வேண்டும். அதனை எதிர்க்கும் சக்தி நம்மிடம் இல்லை. இதைத்தான் வங்காளிகள் கடைபிடிக்கின்றனர், அதற்காக தண்டமிடப்பட்டாலும், சிறையிலடைக்கப்பட்டாலும், நாடு கடத்தப்பட்டாலும் அல்லது சட்டப்படியான எந்த நடவடிக்கையானாலும் அதனை எதிர்கொள்வோம்.
சுயராஜ்யத்திற்கான இயக்கத்தில் ஈடுபட்டமைக்காக வங்க இளைஞன் தண்டிக்கப்பட்டால், அதனை அவன் புன்னகையுடன் ஏற்கிறான். நாம் நமது இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றோம். மராட்டியர்களே, சுயராஜ்யம் பெற்றிருந்தபோதுதான் மொஹம்மதியர்களால் துன்புறுத்தப்பட்டீர்கள். துக்காராம், ராம்தாஸ் போன்றவர்களின் வழிகாட்டுதல்களால் ஒன்றிணைந்தீர்கள். உங்களில் இருந்து ஒரு மாவீர்ர் சத்ரபதி சிவாஜி தோன்றினார். சுயராஜ்யம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. இன்றைக்குள்ள நிலைமையும் இதுதான்.
இந்தப் போராட்டம் மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல, இறைவனின் தூண்டுதலால் நடைபெறுவது. இப்போராட்டம் இறைவனின் கட்டளை. அதனை நிறைவேற்றவேண்டிய கருவிகள் மனிதர்கள். நம்மிடையே ஒற்றுமை உள்ளது, நாம் ஒன்றுபட்டுக்கொண்டிருக்கின்றோம். 30 கோடி மக்களாகிய நாம் பேருண்மையுடன் பொறுட்டு உறுதியுடன் ஒன்றிணைந்தால் இறைவனின் சித்தம் நிறைவேறும், மலை போன்று தெரியும் நமது எதிரி காற்றில் பறந்து மறைந்துவிடும் சாம்பல் போல் கரைந்துவிடுவான்.
நாமெல்லாம் கடவுளால் படைக்கப்பட்டவர்கள், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிவரை பரவியுள்ள இந்நாட்டின் மக்கள் ஒன்றிணைதால், காவியங்களில் குறிப்பிட்டிருப்பதைப்போல ஒரு மாபெரும் நாடாவோம். நமது ஆங்கிலோ இந்திய எதிரி கற்பனை செய்வதுபோல நாம் ஒரு சுயராஜ்யமாக ஒரு நூற்றாண்டும் ஆகாது, நம்மோடுள்ள மிதவாதிகள் சொல்வதுபோல அரை நூற்றாண்டும் ஆகாது.
இறைவனின் சித்தத்தை நிறைவேற்ற உறுதிபூண்டு செயல்பட்டால் இன்னும் 20 ஆண்டுகளில் நம்மால் சுயராஜ்யத்தை அடைந்திட முடியும்.
நன்றி: ஸ்ரீ அரபிந்தோ ஆசிரமம், புதுச்சேரி.