Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண்ணீரால் பெற்ற சுதந்திரம் தந்த மகிழ்ச்சி

-சக்தி சேது

கண்ணீரால் பெற்ற சுதந்திரம் தந்த மகிழ்ச்சி
, வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (14:29 IST)
பிரிட்டிஷ் இந்தியாவாக இருந்த நமது நாடு சுதந்திர இந்தியாவாக பிரகடனப்படுத்தப்பட்ட தினம் 1947, ஆகஸ்ட் 15.

ஆங்கிலேய அடிமைத்தளையை தகர்த்தெறிய, மகாத்மா போன்ற எண்ணற்ற தியாகிகள் பட்ட அல்லல்கள் ஏராளம் என்பதை யாவரும் அறிவர்.

``தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா - இப்பயிரை (சுதந்திரம்)
கண்ணீரால் காத்தோம்!''- என்றார் பாரதியார்.

62வது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு பேருவகையுடன் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் தருணத்தில், நாடு சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற உண்மையான அந்த மகிழ்ச்சியை - உற்சாகத்தை வாலிபப் பருவமாக இருந்து ஆனந்தத் தாண்டவமாடிய ஒருவர், தமது அனுபவங்களை வெப்துனியாவிற்காக பரிமாறிக் கொண்டது...

ஆம், சுதந்திரம் பெற்ற போது அவருக்கு வயது 22. இப்போது 83.

webdunia photoWD
நானிலம் போற்றும் நெல்லை மாநகரமே அவருக்குச் சொந்த ஊர். பிறந்து, வளர்ந்து, படித்தது, பணியாற்றியது என்று எல்லாமே திருநெல்வேலியில்தான்.

திருநெல்வேலிக்கும் சைவ சித்தாந்தத்திற்கும் என்றுமே நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த வகையில், திருநெல்வேலி சைவப்பிள்ளை சமூகத்தைச் சேர்ந்த மதிப்பிற்குரிய திரு.ப. சேதுராமலிங்கம்தான் அவர்.

சுதந்திரம் கிடைத்த போது ஏற்பட்ட நெகிழ்ச்சி பற்றி?

மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிரிட்டிஷ் சர்க்கார் நள்ளிரவில் கையெழுத்திட்டு, சுதந்திரம் வழங்கிய செய்தி அடுத்த நாள் காலை வானொலி மூலமே பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் தமிழில் தினமணி, சுதேசமித்திரன் பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்தன. அவற்றுக்கும் போதிய தொலைத்தொடர்பு வசதிகள் இருந்ததில்லை. எனவே டெலக்ஸ் எனப்படும் தந்திக் கம்பி மூலமாகவே சுதந்திரம் அடைந்த செய்தி பரவியது. அதற்குள் மதியம் ஆகி விட்டது.

webdunia
webdunia photoWD
ஆர்.எம்.எஸ். அலுவலகத்திற்கு போனில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, உயர் அதிகாரிகள் வந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினோம். அப்போதெல்லாம், மக்களுக்கு உள்ள ஒரே சேவை தபால் சேவை என்பதாலும், அவற்றை நாங்கள் தான் முதலில் ஊர் வாரியாக, அஞ்சல் குறியீட்டு எண் (Postal Index Number) வாரியாக பிரித்து பைகளில் அந்தந்த தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைப்போம் என்பதால், எங்கள் அலுவலகத்தில் சுதந்திரச் செய்தியை போன் மூலம் கேட்டு அறிந்து கொண்டோர் பலர்.


அலுவலகப் பணியில், சொந்த வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்?

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட 1948, ஜனவரி 30ஆம் நாள். நான் சேர்ந்தது திருநெல்வேலி ஆர்.எம்.எஸ். என்றாலும், திருவனந்தபுரத்தில் பதவி உயர்வுக்கான பயிற்சியில் இருந்த நேரம் அது. அங்குள்ள ஒரு வாடகைக் கட்டிடத்தில் எனது தலைமையில் தபால்களை பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தோம்.

webdunia
webdunia photoWD
மாலையில் ஒரு கும்பல் கைகளில் தடியுடன் வந்து, ``மகாத்மா காந்தி மரிச்சு, நிங்களோட ஆபிஸ் அடைக்குங்ஹ'' என்றனர். அவர்களிடம், ``இது மத்திய சர்க்கார் அலுவலகம். உடனே அடைக்க முடியாது. எங்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வரும்வரை பொறுத்திருங்கள்.'' என்று கூறிவிட்டு, வெளிப்புறக் கதவை அடைத்துக் கொண்டு உள்ளேயிருந்து பணியாற்றியதை மறக்க முடியாது.

சொந்த வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்றால், அது என் மனைவி மறைந்த 1995ஆம் ஆண்டு, ஏப்ரல் 19ஆம் தேதி எனலாம். ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவுகள் இப்போது இருந்தாலும், குடும்பத்திற்கே வேராக இருந்த என் துணைவியார் என்னை விட்டுப் பிரிந்த நாள்.

சமூக, ஆன்மிகப் பணி?

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பொற்றாமரை விநாயகர் கோயிலில், மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தியன்று சிறப்பு அபிஷேகத்திற்கு உதவுகிறேன்.

நெல்லையப்பர் கோயிலில், மூலவருக்கு வலப்புறம் வீற்றிருக்கும் பஞ்சபூத லிங்கங்களில் ஒன்றான அப்புலிங்கம் சன்னதி 20 ஆண்டுகளுக்கு முன் குப்பை கூளமாக கவனிப்பாரற்று கிடந்தது. அந்த சன்னதிக்கு மின் விளக்கு போட்டு, வர்ணமிட்டதால் தற்போது பக்தர்கள் அப்புலிங்க சன்னதிக்குச் சென்று வர முடிகிறது.

தவிர, ஆண்டுதோறும் மாசி மாதம் மகாசிவராத்திரி நாளன்று அப்புலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையை 20 ஆண்டுகளாக எனது செலவில் ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறேன்.

ஓய்வு வாழ்க்கை எப்படி உள்ளது?

webdunia
webdunia photoWD
மகன்-மகள்களுக்கு என்னால் முடிந்த நிதி உதவிகளைச் செய்து, அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். என்னுடைய வேலைகளை நானே செய்து கொள்கிறேன். பேரன் - பேத்திகள் என மகிழ்ச்சியாக உள்ளேன். வயோதிகத் தளர்ச்சி தவிர வேறு எந்த நோயும் இல்லை என்பதே எனக்கு ஆண்டவன் அளித்த வரம் என்கிறார் பெருமிதத்துடன்.

பெற்ற சுதந்திரத்தைப் போற்றிப் பாதுகாக்கும் இத்தருணத்தில், பொக்கிஷமாகத் திகழும் இவரின் அனுபவத்தையும் பாதுகாப்போம்.


Share this Story:

Follow Webdunia tamil