இன்றைய பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழலும் சமூகமும் நமது குழந்தைகளின் சுதந்திரத்தை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட சில அறைகளுக்குள் மட்டுமே பறந்து திரியும் வாழ்க்கையை மட்டுமே நமது குழந்தைகளுக்குப் பரிசாக தந்திருக்கிறோம் என்பதே உண்மை. இதனால் குழந்தைகள் தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்கோ, திரைப்படக் குத்துப்பாட்டுகளுக்கோ அல்லது கணிணி விளையாட்டுகளுக்கோ ரசிகர்களாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் கூட பெரியவர்களுக்கான தன்மையுடன் இருப்பதால் அவர்களின் கொஞ்சநஞ்ச மழலைத்தன்மையும் பறிக்கப்பட்டுவிடுகிறது. இது தவிர நகரத்துத் தெருக்களில் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தும், வாகன ஓட்டிகளின் அலட்சியமும் குழந்தைகளை வீட்டுச் சிறைக்குள் நிரந்தரமாக அடைத்து விட்டன. கிராமங்களில் சுதந்திரமாக திரிந்து பட்டாம்பூச்சி பிடிக்கும் சுவாரஸ்யம் நகரத்திற்கு கற்பனையில் கூட வருவதில்லை.
'ஓடி விளையாடு பாப்பா' என்பதே கனவாகிவிட்டது. நகரத்து வீடுகளில் ஓடித் திரியும் குழந்தைகளைப் பார்த்து 'ஓடாதே மெதுவாக நட' என வேகத்தடை போடுகிறோம். சத்தம் போட்டால், 'கத்தாதே சும்மா இரு' என்கிறோம். படிக்கட்டுகளில் ஏறினால், 'ஏறாதே இறங்கி வா' என்று அதட்டுகிறோம். மொத்தத்தில் குழந்தைகளுக்கு எல்லா சுதந்திரங்களையும் மறுத்து விடுகிறோம்.
இன்றைய பொருளாதார சூழலில் ஒரு குழந்தையே போதும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் கருத்தாக உள்ளது. இத்தகைய வீடுகளில் தனித்துப் பிறந்த குழந்தைகள் ஆதரவற்றுத் தவிக்கின்றனர். மனதளவில் பாதிக்கப்பட்டு, தைரியமற்றுக் காணப்படுகின்றனர்.
குழந்தைகளின் மீதான இத்தகைய அடக்குமுறை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வுகள் தெரிவிக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு நொறுக்குத் தீனிகளைத் தின்பதால், அவர்களின் உடல் எடை அதிகரிக்கிறது. ஓடி ஆடி விளையாடததால் சக்தியற்றுப் போகிறார்கள். சுதந்திரமாக விளையாட அனுமதி மறுக்கப்படும் குழந்தைகள் சவால்களை எதிர்கொள்ளும் சக்தியற்றவர்களாகவும், எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுபவர்களாகவும் வளர்கிறார்கள்.
குறிப்பாக, வெளியே வெளிச்சத்தில் விளையாடும் குழந்தைகளின் கண்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் காணப்படும் என்றும், கிட்டப்பார்வை போன்ற குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றும் மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இன்றைய சூழலில் குழந்தைகளின் மீதான பெற்றோரின் அன்பு அதிகரித்திருப்பது இயல்பே. ஆனால் அந்த அன்பே, குழந்தைகளின் சுதந்திரத்திற்குத் தடையாக நிற்பது ஆரோக்கியமானதல்ல. குழந்தைகளின் சுதந்திரம் பறிக்கப்படாமல் அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தித் தருவது பெற்றோர்களுக்கு மட்டுமின்றி இந்தச் சமூகத்திற்கும் உள்ள கடமையாகும்.
நாம் நமது சிறு வயதில் அனுபவித்த சுதந்திரத்தை நமது குழந்தைகளும் பெறுவதற்கான உத்தரவாதத்தை உருவாக்குவதே நமது தலையாய பணியாகும். இந்தச் சுதந்திர தினத்தில் அதற்கான உறுதியை நாம் ஏற்போம்.