Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுதந்திர போராட்டத்தில் 'திரைப்படம்'

சுதந்திர போராட்டத்தில் 'திரைப்படம்'
, புதன், 13 ஆகஸ்ட் 2008 (17:15 IST)
திரைப்படம்.... இந்த சொல்லுக்குத்தான் எத்தனை வசீகரம்? ஓர் அறிவியல் சாதனமாகப் பிறந்து, பொழுதுபோக்கு ஊடகமாக வளர்ந்து, வெகுஜன தொடர்பு ஊடகமாகப் பரிணமித்து, சமூகத்தில் மிகுந்த தாக்கம் செலுத்தும் ஊடகமாக, கலையாக வளர்ந்து நிற்கிறது அது!

webdunia photoWD
திரைப்படத்தில் நாயகனாக நடித்து, அதில் கிடைத்த புகழை வைத்து அரசியலில் புகுந்து முதலமைச்சரான எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா போன்றோரின் அத்தியாயம் ஒரு வரலாற்று சாதனைப் பதிவு என்றால், அவர்களுக்கு பின்னரும் 'நாளைய முதலமைச்சர் கனவில்' தமிழ் திரையுலகில் கோலோச்சிய, கோலோச்சிக் கொண்டிருக்கும் நடிகர்களின் எண்ணிக்கைத்தான் எத்தனையெத்தனை?

மாநில முதலமைச்சர்களை தீர்மானிக்கக் கூடிய அளவிற்கு நடிகர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்தும் திரைப்படம் எனும் ஊடகம் வலுவான சக்தியாக உருவெடுத்திருப்பதும், தங்களை ஆள வேண்டியது யார் என்பதை வெள்ளித்திரையில் பார்த்து முடிவு செய்யும் ரசிகனின் அணுகுமுறையும் ஆரோக்கியமானதுதானா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

62வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் திரைப்படம் எனும் அந்த பிரம்மாண்ட ஆலவிருட்சம், விதையாய்... செடியாய்... இலையாய்.... பூவாய்.... பிஞ்சாய்... காயாய்... கனியாய் உருவான நிகழ்வையும், சுதந்திர போராட்டத்தில் அது ஆற்றிய பங்கையும் பார்ப்போம்!

பாரிஸ் நகரில் கிராண்ட் கபே எனும் இடத்தில்தான் 1895 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி திரைப்படம் எனும் கலை பிறந்தது. லூமியே எனும் சகோதரர்கள் முதன் முதலில் சலனப்படமாகக் காண்பித்தனர். இப்படம் இரண்டு ஆண்டுகளுக்குள் 1897இல் சென்னையில் காண்பிக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவுக்கு வந்த முதல் படம் என்று எடுத்துக் கொண்டால், 'ஏசுவின் வாழ்க்கை' என்ற படமே! 1896 ஜூலை 7இல் மும்பை நகரில் இது திரையிடப்பட்டது. ஆனால் இப்படம் பேசவில்லை. இதைப் பார்க்க இந்தியர்கள் காட்டிய ஆர்வத்தினால் நாள் ஒன்றுக்கு நான்கு காட்சிகள் காட்டப்பட்டு நபருக்கு ஒரு ரூபாய் (!) என கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

அதன் பின்னர் சென்னையில் 1897ஆம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் முதல் சலனப்படக் காட்சியை திரையிட்டுக் காட்டினார். சில நிமிடங்களே ஓடக்கூடிய துண்டு சலனப்படங்களாகவே இவை இருந்தன. தொடர்ந்து பல சலனப்படக்காட்சிகள் சென்னை நகரின் பல்வேறு இடங்களிலும் திரையிடப்பட்டன. ஒரு பெரும் கலாசாரத் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அரும்பத் தொடங்கின.

நாளடைவில் சலனப்படக் காட்சிகளுக்கு ஆதரவு கூடியது. இதைத் தொடர்ந்து 1900களில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு வார்விக் மேஜர் எனும் ஆங்கிலேயரால் மவுண்ட்ரோடில் கட்டப்பட்டது. இது எலெக்ட்ரிக் தியேட்டர் எனும் பெயரால் அழைக்கப்பட்டது.

படிப்படியாக மக்களிடையே திரைப்படக் காட்சிகளுக்கு வரவேற்பு கூடியது. ஆரம்பத்தில் இங்கு திரையிடப்பட்ட படங்கள் பெரும்பாலும் மேலைநாட்டில் தயாரிக்கப்பட்ட கதைப்படங்களே ஆகும். 1912ஆம் ஆண்டிற்குப் பின் மும்பையில் தயாரான ஹரிச்சந்திரா போன்ற புராணப்படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன.

1916ஆம் ஆண்டு சென்னையில் துவங்கிய மெளனப்படத் தயாரிப்பைத் தொடர்ந்து மேலும் பல தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தார்கள். திரைப்படங்களுக்கு மக்களிடையே அமோக செல்வாக்குப் பெருகியது. ஆரம்பத்தில் சிலர் படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபடலாயினர்.

இதற்கிடையே அமெரிக்க மற்றும் ஜரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பலர் தங்களது திரைப்படக் கருவிகளுடன் இந்தியாவுக்கு வந்து படப்பிடிப்பு நடத்தியதோடு பல வெளிநாட்டுப் படங்களைத் திரையீடும் செய்தனர். அவர்களுடன் சில இந்தியர்களும், பம்பாய் இரயில் நிலையத்தில் இரயில் வருதல், திலகரின் கல்கத்தா விஜயம் போன்ற காட்சிகளைப் படம் பிடித்துத் திரையிட்டனர்.

நம்மவர்கள் படிப்படியாகத் தாங்களே திரைப்படம் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினர்.

சுதந்திர போரட்டத்திற்கான குரல்கள் வலுவாக எழத் தொடங்கியிருந்த நேரம் அது! இதனால் பிரிட்டிஷ் அரசு இந்த வெகுஜன ஊடகத்தின் தாக்கத்தை கண்டு நடுங்கியது.

எனவே திரைப்பட ஊடகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க தீர்மானித்தது. தொடர்ந்து இந்திய சினிமாட்டோகிராப் சட்டத்தின் மூலம் தணிக்கை முறையை 1918ஆம் ஆண்டில் செயல்படுத்தியது.

1927ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான தி மெட்ராஸ் பிலிம் லீக் நிறுவப்பட்டது. 1939ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சென்னையில் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி.

1929இல் இந்தியாவுக்குள் முதன் முதலாக ஓர் படம் பேசத் தொடங்கியது. அது மேல்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'மெலடி ஆஃப் லவ்' என்ற ஆங்கிலப்படம். இது கல்கத்தாவில் திரையிடப்பட்டது. தொடர்ந்து பம்பாய், சென்னை போன்ற நகரங்களில் பேசும் படத் தியேட்டர்கள் உருவாயின. அவை மேல்நாட்டுப் படங்களைத் திரையிட்டன.

சினிமாப்படம் பேசக் கற்றுக் கொண்ட போது இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி. இந்தியா முழுவதும் ஆங்கிலேயேருக்கு எதிரான விடுதலைப் போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக்காலத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான எதிர்ப்பு பல தளங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. தொழில்துறைகளில் சுதேசிகளின் கவனம் குவிந்தது.

சினிமாவை இந்திய மொழிகளில் பேசச் செய்யும் முயற்சிகளில் இந்தியர்கள் ஈடுபடலாயினர். ஏற்கனவே ஊமைப் படங்கள் தயாரித்து வெளியிட்டுப் பெற்றிருந்த அனுபவங்களுடன், மேல் நாட்டுப் பேசும் படங்களைப் பார்த்த அனுபவங்களுடன் துணிந்து இந்திய பேசும் படத் தயாரிப்புகளில் பலர் ஈடுபாடு கொண்டனர்.

முதன் முதலாக 'ஆலம் ஆரா' எனும் சினிமாப் படம் தயாரிக்கப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் பேசும் படம். இந்தியில் பேசிய படம் இது. 1931 மார்ச் 14ஆம் தேதி வெளியானது.

சென்னைக்கு 'ஆலம் ஆரா' 1931 ஜூன் மாதத்தில் வந்து சேர்ந்தது. உற்சாகத்துடன் சென்னை ரயில் நிலையத்தில் இப்படப் பெட்டியை வரவேற்க மக்கள் திரளாகக் கூடியிருந்தனராம். இந்திய மொழி ஒன்றில் படம் பேசியதையும், பாடியதையும் பார்த்தும், கேட்டும் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

சினிமா பார்க்கும் பழக்கம் படிப்படியாக மக்களிடையே பரவத் தொடங்கிற்று. இக்காலத்தில் தமிழில் பேசும் படம் தயாரிக்கும் முயற்சி வீறு பெற்றது. பம்பாயில் இதற்கான முயற்சி தொடங்கப்பட்டது. தமிழில் முதல் பேசும் படமாகக் 'காளிதாஸ்' 31.10.1931இல் வெளிவந்தது.

ஆக தமிழ்ப்பேசும் திரைப்படம் 1931களில் இருந்து தமிழ்த் திரைப்படமாக பரிணமிக்கத் தொடங்கியது. சலனப்படம் தமிழ் பேசி பேசும்படமாக வந்தது. சினிமா வரலாற்றில் இது ஓர் பெரும் திருப்பம்.


1931-ல் ஆரம்பித்த தமிழ்ப்படத் தயாரிப்பு வேகமாக வளர்ந்தது. 1931 முதல் சினிமா வண்ணமயமாகக் கலை வடிவமாகப் பேசும் படமாகப் பரவத் தொடங்கிய காலம் எனலாம். இது இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமான காலகட்டமாகும்.

மலையாளப் பகுதியிலும் ஆந்திரா, கர்நாடகம் போன்ற பகுதிகளிலும் சுதந்திரப் போராட்டத்தின் ஒருமுகமாக அடிநிலை மக்கள் கலைகள் புத்துயிர் அளிக்கப் பெற்று அவற்றின் மூலம் சுதந்திர உணர்வு பரப்பப் பெற்றது. கிராமியக் கலை வடிவங்கள் என்று கருதப்பட்ட புர்ரகதா, வீதி நாடகம் போன்றவையும் கேரளத்தின் செந்நெறிக் கலையான கதகளியும் இப் பணியில் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், தமிழ்நாட்டிலோ சுதந்திர உணர்வுப் பரப்பலுக்கு அடிநிலை மக்களின் கலைவடிவங்கள் பயன்படுத்தப்படவில்லை. அக்காலத்து நாடகங்கள் மூலம் சுதந்திர உணர்வு பரப்பப்பட்டது உண்மையே. ஆனால், அந்த நாடகங்கள் பார்ஸி மரபைச் சார்ந்தவை எனலாம். அவை தெருக்கூத்துப் போன்று கிராமியக் கலாவடிவத்தைச் சார்ந்தவை அல்ல.

இதனால், தமிழ் மக்கள் யாவரையும் சாதி மத வேறுபாடின்றி பொருளுடைமை வேறுபாடுகளின்றி ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஒருங்கு சேர்த்த கலை வடிவம் சினிமாவே. இது அதன் தொழில் நுட்பத் தன்மை காரணமாகவே சாத்தியமாயிற்று. இந்தப் பண்பு அதற்கு ஒரு பெரும் சமூக வன்மையைக் கொடுத்தது. இவை 1931ல் முதல் தமிழ் பேசும் படம் காலத்தில் இருந்து சாத்தியமாயிற்று.

ஆக, தமிழின் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' திரைப்படத்தில் அன்றைய தேச பக்திப் பாடல்களும் இடம் பெற்றன. ''இந்தியர்கள் நம்மவர்களுள், ஏனோ வீண் சண்டை" எனும் இந்தப் பாடல் இந்து - முஸ்லீம் கலவரத்தை எச்சரித்து ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்கிற உணர்வை ஊட்டியது.

ஆக, இக்காலத்துக்கும் பொருந்தும் கருத்து நிலையே முதல் பேசும் படத்தில் இழையோடியிருந்தமை கவனத்திற்குரியது.

அதனைத் தொடர்ந்து திரைப்படம் சமூகமட்டத்தில் மிகுந்த தாக்கம் பெற்ற கலைவடிவமாக மலர்ச்சி பெற்றது.அதுவே பின்னர் தமிழ் திரைப்படங்களில் சீர்திருத்தக் கருத்துக்களையும், சுதந்திர போராட்ட உணர்வுகளையும் பரப்பும் வலுவான ஊடகமாக பயன்படுத்தப்பட்டு, அத்தகைய படங்களும் வரத்தொடங்கின.

1930களில் திரைப்பட உலகில் நுழைந்த சுப்பிரமணியம் இயக்கிய மூன்று படங்கள் குறிப்பிடத்தக்கவை. பாலயோகினி (1937), சேவா சதனம் (1938), தியாகபூமி (1938) போன்றவை தமிழ்த்திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை.

தமிழ் சிந்தனையிலும், தமிழர் வாழ்வியலிலும் சுதந்திர போராட்ட உணர்வை வளர்த்த 'தமிழ் சினிமா' என்ற அந்த திரைப்பட ஊடகம், தமிழரது அரசியலிலும் இன்று தீர்க்கமான பாத்திரம் ஆற்றும் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது.

ஆனால் அது ஆக்கப்பூர்வமாக உள்ளதா என்றால்...ஆழமான பெருமூச்சுதான் விட முடிகிறது.

webdunia
webdunia photoWD
திரைப்படங்களில் தேச பக்தியை ஊட்டும் காட்சிகளைத்தான் காட்ட வேண்டாம்...! குறைந்தபட்சம் தேசத்து இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்கிற காட்சிகளையாவது காட்டாமல் இருக்கலாமே !

Share this Story:

Follow Webdunia tamil