பாரத மாதாவின் கொடி!-
தேசக் கவி பாரதியார்பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்
(தாயுமானவர் அனந்தக்களிப்பு வர்ண மெட்டு)
தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல்வந்தே மாதர மென்றே
பாங்கி னெழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
பட்டுத் துகிலென லாமோ? - அதிற்
பாயந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம் (தாயின்)
இந்திரன் வச்சிர மோர்பால் - அதில்
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால்
மந்திர நடுவுறத் தோன்றும் - அதை
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)
கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியரவ் வீரர் - தங்கள்
நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார். (தாயின்)
அணியணி யாயவர் நிற்கும் - இந்த
ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறற்
பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர் (தாயின்)
செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர், (தாயின்)