அனைத்து மதப் பண்டிகை கால உணவு வகைகளையும் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் உள்ளதா? அப்படியானால் உடனேக் கிளம்பி சென்னை தீவுத்திடலில் நடைபெறும் கோடைத் திருவிழாவில் இடம்பெற்றுள்ள சுவையால் இணைவோம் உணவு திருவிழா நிகழ்ச்சிக்கு வாருங்கள்.
சனிக்கிழமையான இன்று துவங்கும் இந்த உணவுத் திருவிழாவில், 45 வகையான உணவு வகைகளை ருசித்து சாப்பிடலாம்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் கோடைத் திருவிழா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த விழாவை தமிழக முதலமைச்சர் கருணாநிதி கடந்த மாதம் (ஏப்ரல்) 30-ந் தேதி தொடங்கிவைத்தார்.
இங்கு தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கும் தாஜ்மகாலை பார்க்கவும், குற்றால அருவியில் குளிக்கவும், ராட்டினங்களில் ஆடி மகிழவும் இதுவரை 11/2 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். இந்த கோடை திருவிழாவின் ஒரு பகுதியாக, `சுவையால் இணைவோம்' என்ற ஒருமைப்பாட்டு உணவு திருவிழா நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
இதற்காக, தீவுத்திடல் வளாகத்தின் தென்பகுதியில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில், இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம், ஜெயின் மதங்களின் பண்டிகைகால உணவு வகைகள் இடம் பெறுகின்றன. இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது தயாரிக்கப்படும் கொழுக்கட்டை, கிறிஸ்துவ பண்டிகையின்போது தயாரிக்கப்படும் கேக் வகைகள், முஸ்லிம் பண்டிகையின்போது தயாரிக்கப்படும் பிரியாணி உள்பட மொத்தம் 45 வகையான உணவு வகைகள் இடம் பெறுகின்றன.இந்த உணவு வகைகளை சாப்பிட வருபவர்கள் பபே முறையில் தாங்களே பரிமாறிக்கொள்ளலாம். இதற்காக பெரியவர்களுக்கு ரூ.150ம், சிறியவர்களுக்கு ரூ.75ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு சுற்றுலாத்துறை செயலாளர் வெ.இறையன்பு கூறுகையில், மத ஒருமைப்பாட்டு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக சுவையால் இணைவோம் உணவு திருவிழா நிகழ்ச்சி சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. இதில், அனைத்து மதங்களின் 45 வகையான பண்டிகை கால உணவு வகைகள் இடம் பெறுகின்றன.உணவுத் திருவிழாவையொட்டி, குழந்தைகளுக்கான ஆடை அலங்கார போட்டியும் நடத்தப்படுகிறது. இதில், 2 வயது முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கு பெறலாம். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். பங்குபெற விரும்புவோர் சென்னை தீவுத்திடலில் உள்ள கோடைத் திருவிழா பதிவு அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.கோடைத் திருவிழாவை கண்டுகளிக்க வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளின் வசதிக்காக பேட்டரி கார்களும் சனிக்கிழமை முதல் இயக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.