நம் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நமது விருந்தினர்கள் போன்றவர்கள். அவர்களை நன்கு உபசரித்து மகிழ்ச்சியுடன் அவர்கள் நாட்டிற்குத் திரும்ப வழி வகை செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். அதனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது மத்தியப் பிரதேச மாநில காவல்துறை. அதாவது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், காஜுரகோ கோயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு 17 வெளிநாட்டு மொழிகளில் பேச பயிற்சி அளித்துள்ள மத்தியப்பிரதேச காவல்துறை நிர்வாகம்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள காஜுரகோ நகரில் இருக்கும் கோயில்கள் பாலுறவு கொள்ளும் நிலைகளை விளக்கும் சிலைகள் அமைந்துள்ள புகழ்பெற்ற தலமாகும். இந்த சிலைகளை பார்க்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மத்தியப்பிரதேசம் வருகிறார்கள்.
அந்த கோயிலுக்கு மட்டும் சுமார் 12 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையிலும், அவர்களை அன்பாக வரவேற்கும் வகையிலும், அங்கு பணியாற்றும் காவலர்களுக்கு 17 உலக மொழிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சான்றாக, அண்மையில் ஜப்பானில் இருந்து சுற்றுலா வந்த பயணிகளை ஓஹாயூ கோசாய்மாசு (தமிழில் இனிய காலை வணக்கம் - சென்னை பாஷையில் என்னவென்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்) என்று ஜப்பானிய மொழியில் காவலர் ஒருவர் வரவேற்றார். இதை கேட்ட ஜப்பானியர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இதேப்போல எந்த நாட்டைச் சேர்ந்தவர் வந்தாலும் அவரது தாய் மொழியில் காவலர்கள் வரவேற்கின்றனர். இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இந்த நவீன யுத்தியை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் சத்தர்பூர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அனில் குமார் மிஸ்ரா என்பவர்தான். காவலர்களுக்கு 17 வெளிநாட்டு மொழிகளில் பேச பயிற்சி அளிக்க அனில் குமார்தான் ஏற்பாடு செய்துள்ளார். தினமும் மாலையில் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து அனில் குமார் மிஸ்ரா கூறுகையில், சுற்றுலா தலமான காஜூரகோவுக்கு வரும் வெளிநாட்டினரை கவருவதற்காக இப்படி ஒரு திட்டத்தை 3 மாதத்துக்கு முன் அறிமுகப்படுத்தினேன். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. சுற்றுலா பயணிகளும் தங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறது என்றால் தங்கள் மொழியிலேயே காவல்துறையிடம் தெரிவிக்கிறார்கள். இதனால் நமது சுற்றுலா வளர்ச்சி பெரும் என்றார்.