கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி துவங்கியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.
சர்வதேச சுற்றுலா நகரமான கொடைக்கானலில் நேற்று முன்தினம் கோடை விழா, மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. இந்த மலர் கண்காட்சியை பார்வையிடவும், கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடவும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா கொடைக்கானலுக்கு வந்துள்ளனர்.
கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் எங்கும் மக்கள் வெள்ளமாக கரைபுரண்டோடுகிறது.
நேற்று முன்தினம் மலர் கண்காட்சி துவங்கியது. துவக்க விழாவில் சுற்றுலா பயணிகள் ஓரளவே இருந்தனர். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமையாதலால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். அவர்கள் வந்திருந்த வாகனங்கள் கொடைக்கானலை ஆக்ரமித்திருந்தன. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு 1 மணி நேரம் ஆனது. மலர் கண்காட்சியைக் காணவும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று பார்த்து சென்றனர். 2 நாட்களில் மலர் கண்காட்சியை சுமார் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்த்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று சாரல் மழை பெய்த போதிலும் அதனை மிகவும் ரசித்தவாறே சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.