சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் விலங்கியல் பிரிவு சார்பில் பாம்பு கண்காட்சி தொடக்க விழா அங்குள்ள நூற்றாண்டு கண்காட்சி கூடத்தில் நேற்று துவங்கியது.
பதப்படுத்தி வைக்கப்பட்டு உள்ள மலைப்பாம்பு, பாம்புகளின் எலும்புக் கூடு, மிகப்பெரிய பாம்புகளின் புகைப்படங்கள் போன்றவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறது.
மலைப்பாம்பு, விரியன் பாம்பு எலும்புக்கூடுகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. அனகோண்டா பற்றிய தகவல்களும் இந்த பாம்புக் கண்காட்சியில் பெறலாம். தமிழ்நாட்டில் கிராமம் மற்றும் நகர்ப்பகுதிகளில் அதிகமாக கண்ணில்படும் நாகப்பாம்பு (நல்லபாம்பு), கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய பாம்புகள் கடித்தால் உடனே அரசு ஆஸ்பத்திரிகëகு சென்று தடுப்பூசி போட்டு காப்பாற்றலாம். ஆனால், ராஜநாகம் கடித்தால் அதற்கு தடுப்பூசி இல்லை என்பது போன்ற பயனுள்ள பல்வேறு தகவல்கள் படக்காட்சியுடன் இடம்பெற்றுள்ளன.
எல்லாவற்றிற்கும் மேலாக காசிமேட்டைச் சேர்ந்த மீனவர் கண்ணன், ஆழ்கடலில் பெரிய வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சுமார் 850 அடி ஆழத்தில் இருந்த நண்டு, இறால் வகையைச் சேர்ந்த அரியவகை கடல்வாழ் உயிரினம் (ஜைன்ட் ஜசோபாட்) வலையில் சிக்கியது. அதை எடுத்துவந்து அரசு அருங்காட்சியகத்தில் கொடுத்தார். முக்கால் அடி நீளம், 4 அங்குலம் அகலம், 14 கால்கள், 700 கிராம் எடை கொண்ட அந்த உயிரினம் பதப்படுத்தப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளது. 8-ந் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக பார்வையிடலாம்.
தமிழக அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஆர்.சுந்தரராஜன் பாம்பு கண்காட்சியை துவக்கி வைத்து பாம்பு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டுப் பேசுகையில், பாம்புகளில் விஷப் பாம்புகள், விஷம் இல்லாத பாம்புகள் உள்ளன. உலகம் முழுவதும் 2 ஆயிரத்து 700 வகை பாம்புகள் உள்ளன. இதில், 500-க்கும் குறைவான பாம்புகளே விஷம் உள்ள பாம்புகள் ஆகும். தமிழ்நாட்டில் 100 வகையான பாம்புகள் உள்ளன. பாம்புகள் எலிகள், தவளைகள் போன்றவற்றை தின்று வாழ்கின்றன. அதனால் விவசாயம் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் பாம்புகளை கண்டால் அடித்துக் கொல்ல வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
பாம்பு கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? பாம்புக் கடியால் எத்தகைய பாதிப்பு ஏற்படும்? என்பது போன்ற கேள்விகளுக்கு விரிவான விளக்கம் எழுதி வைக்கப்பட்டு இருப்பது சிறப்புப் பெறுகிறது.