தமிழகத்தில் பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கலுக்கு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் தங்களது இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன. சுமார் 35,000 பறவைகள் இதுவரை வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் நவம்பர் மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் வரை பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.
இந்த காலத்தில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வேடந்தாங்கலுக்கு படையெடுத்து வருவது வழக்கம். இந்தப் பறவைகளைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வேடந்தாங்கலுக்கு வருவார்கள்.
கடந்த வாரத்தில் பொங்கல் விடுமுறை என்பதால் தினமும் ஏராளமான பயணிகள் வேடந்தாங்கலுக்கு வந்து பறவைகளைக் கண்டு சென்றுள்ளனர். காணும் பொங்கல் அன்றும், நேற்றும், சுமார் 25 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வேடந்தாங்கலுக்கு வந்திருந்தனர்.
இந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து புதுவகையான பறவைகளும் வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன. பல்டி அடித்து மீன்களைப் பிடிக்கும் வாத்து வகையும், மற்றும் சில பறவைகளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கின்றன.
ஆண்டுதோறும் இலங்கை, ஆஸ்ட்ரேலியா, பாகிஸ்தான் போன்று பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன.