மாறாத பழைய கோவாவும், அழகிய தேவாலயங்களும்
, செவ்வாய், 13 செப்டம்பர் 2011 (18:16 IST)
கோவா என்றாலே விடுமுறையைக் கழிப்பதற்கான ஒரு உன்னத சுற்றுலாத் தலம் என்பதை யாருக்கும் சொல்லத் தேவையில்லை. இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் கோவாவிற்குப் படையெடுக்கின்றனர்.அதுவும், கிறிஸ்மஸ் பண்டிகையையும், ஆங்கில புத்தாண்டுப் பிறப்பையும் கோவாவிற்கு வந்து கொண்டாடும் ஐரோப்பிய நாட்டவர் - குறிப்பாக போர்ச்சுக்கீசியர்கள் மிக அதிகம். எனவே டிசம்பர் மூன்றாவது வாரத்தில் இருந்து ஜனவரி முதல் வாரம் வரையிலான காலத்தில் கோவா ஒரு ஐரோப்பிய நாடாகவே காட்சியளிக்கும். அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகளை கோவா கவர்ந்துள்ளது.
அவர்களுக்குத் தக்கவாறு ஒன்று இரண்டல்ல, பதினாறு அழகிய கடற்கரைகள் உள்ளன. வட கோவாவில் உள்ள ஆரம்போல், மாண்ட்ரம், மோர்ஜிம், வகாட்டர், அன்சுனா, பாகா, காலங்குட்டா, சிங்கரின், மிராமர் ஆகியனவும், தென் கோவாவில் மஜோர்டா, பெடால்பாட்டிம், கோல்வா, பெனாலிம், வார்க்கா, கேவலோசிம், பலோலெம் ஆகிய கடற்கரைகள் உள்ளன. இவற்றில் கோல்வா, அன்சுனா, காலங்குட்டா, மிராமர் ஆகிய கடற்கரைகள் மிகவும் பிரபலமானவை.