இந்தியர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டினர் பலரும் வந்து பார்த்துச் செல்லும் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் மீது படிந்துள்ள உப்புப் படிமங்களை அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.
பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வெறும் பாறைகளை சிற்பங்களாக வடித்து, காலத்திற்கும் அழியாகப் புகழ்பெற்றுள்ளது இந்த மாமல்லபுரம்.
இந்த மாமல்லபுரம் சிற்பங்கள் கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பதால், காற்றில் வரும் உப்புத் தன்மை கற்களில் படிந்து விடுகின்றன. கடல் உப்புக் காற்றால் கற்கோயில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க தொல்லியல் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக கோயில் மீது படிந்துள்ள உப்பு படிமங்களை அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.
இதற்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் காகிதக் கூழ் தயாரிக்கப்பட்டு கோயில் முழுவதும் பூசப்படுகிறது. பின்னர், உப்பு படிமங்கள் படிந்தவுடன் காகிதக் கூழ் அகற்றப்பட்டு உப்பு சதவீதம் சோதனை செய்யப்படுகிறது.
பின்னர் சிலிக்கான் பாலிமர் என்ற ரசாயனம் பூசப்படுகிறது. இதன் மூலம் கடற்கரை கோயிலில் உள்ள கல்லின் தரம் பாதுகாக்கப்படும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.